இன்றைய சூழலில் மகாகவி வாழ்ந்தால்
செந்தமிழ் நாடென்னும் போதினிலே சாதித்
=தீப்பற்றி எரியுது பாருங்களே
சந்ததம் சாராயக் கடைகளிலே மக்கள்
=சாதன்னை வாங்குது குப்பியிலே
வந்தவர் சுருட்டிடும் நோக்கினிலே சொந்த
=வாக்குதனை விக்குது தேர்தலிலே
இந்தொரு நிலையினை காண்பதற்கோ அன்று
=எம்முன்னோர் குருதியை சிந்தினரோ?
வெள்ளையர் ஆட்சியின் கொடுமைக்கொரு நாட்டில்
=விடுதலையும் வந்தது என்றிருந்தேன்
கொள்ளையர் ஆட்சியின் கொடுமையிலே இன்று
=குட்டிச்சுவர் ஆனதே என்செய்வேன்
உள்ளமும் கொதிக்குது உலையெனவே கண்கள்
=உறக்கத்ததைத் தொலைத்தது இரவினிலே
கள்வரின் சுயநலப் பொம்மைஎன்றே ஆடும்
=கயமைகள் தீக்கிரை ஆகிடுமோ
பாலியல் கொடுமைகள் பெருகியதே பலபடு
=பாதக செயல்களும் கூடிடிச்சே
வாலிப பசங்களின் எண்ணத்திலே காம
=வாசனை நித்தமும் வீசிடுதே
கூலிக் கொலைகளும் வளர்ந்திடுச்சே கெட்டுக்
=குட்டிச் சுவராய் ஆகிடுச்சே
தாலி அருப்புகள் நிரம்பிடுச்சே நெஞ்சம்
=தவிக்குது ஐயகோ என்செய்வேன்
ஏழைக் குழந்தைப் படிப்பெல்லாம் இங்கு
=எட்டாக் கனியாய் போயிடுச்சே
வாழைக் குமரியர் வாழக்கைஎலாம் காசால்
=வாங்குற நிலைமை ஆகிடுச்சே
கூழைக் கடிப்பவர் நோய்களுக்கும் கையில்
=கோடித் திணிக்கிற கேவலமே
ஊழல் நிறைந்த நாட்டினிலே வாழ
=உயிர்கொளல் பிழையென மாண்டிருப்பான் !
*மெய்யன் நடராஜ்

