பள்ளிக்கூடம் =============

படித்திருந்தால் எதோ ஒரு
வாத்தியார் வேலையில்
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டாததாக
வாழ்வேண்டியிருந்திருக்கும் என்று
மனதுக்குள் எண்ணிக்கொண்டு
மழைக்கும் ஒதுங்காதவர்கள்
மந்திரியாய் ஆனபின்பு
திறந்துவைக்கும் வெறும்
கட்டிடமாகலாம் பள்ளிக்கூடம்
உலகத்தின் சிற்பிகளை எல்லாம்
உருவாக்கம் செய்யும்
உளியாக இருந்தபோதும்
சிலையாகவே இருக்கிறது அது
ஏணியும் தோணியும்போல ஏற்றிவிட்டு
இருந்த இடத்திலே இருக்கும் பள்ளிக்கூடம்
படித்தவர்கள் கூடவே சென்றுவிடுகிறது
பசுமையான நாட்களைக் கூட்டிக்கொண்டு
மத நல்லிணக்கத்தையும்
மனித நேயத்தையும்
சமாதானத்தையும் கொடுத்தனுப்பும்
பள்ளிக்கூடங்களில் வாங்கியவர் எவரும்
திருப்பிக்கொடுத்ததில்லை
மாணாக்கர்கள் மாளிகையில்
வாழ்வதற்கு பளிங்கு கற்கள்
கொடுத்த பழைய பள்ளிக்கூடங்கள்
இன்னும் மழைக்கு ஒழுகிக்கொண்டிருக்கிறது
தன்மானமுள்ள ஏழையின் குடிசையைபோல
உலகம் திரும்பிப்பார்க்க வைத்த
உயர்ந்தமனிதர்கள் பலரும்
திரும்பிப்பார்க்க மறந்துதான் இருக்கிறார்கள்
கற்ற பள்ளிக்கூடத்தை .
வங்கிக் கடனை அடைக்கக்
கற்றுக்கொண்ட நாங்கள்
அடைக்க மறந்தோம்
பள்ளிக்கூடத்திற்கான நன்றிக்கடனை
எல்லாப் பாடங்களையும் கற்றுத்
தேர்வானபின்னும்
நன்றிமறவாமையையில்
தோற்றிருக்கும் நாங்கள்
வயோதிபகாலத்துப் பெற்றோரைப்
முதியோரில்லத்தில் காண்பதுபோலாவது
வாழ்நாளில் எப்போதாவது
படித்தப் பள்ளிக்கூடங்களைக் கண்டு வருவோம் .
புகுந்த வீட்டுக்குப் போனமகள்
தாய் வீட்டுக்கு வருகையில்
கட்டியணைக்கும் தாயாய்
பழைய நாட்களின்
ஞாபகக் கரங்களால் நம்மைக்
கட்டியணைத்து மகிழட்டும் பள்ளிக்கூடம்.
*மெய்யன் நடராஜ்