தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

இரவு நேரம்,
ஊரே அடங்கிய நேரத்தில்,
இன்னும் அடங்க மறுத்து அல்லோலப் படும்
குப்பத்து குடி இருப்பு.

அங்குள்ள சிறிய வீட்டில்
நான் மட்டும் தனியே,
உறக்கம் பிடிக்காத விழிகளுக்கு
உறங்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த சமயம்...

டப் டப் டப்!
டப் டப் டப்!!
தெரடி கதவ, தெர!.
ஒரு தரம் தெர.....
தொந்தரவு செய்யாம வந்துட்டு ஓடிறேன்...!
டப் டப் டப்!
டப் டப் டப்!!

அமைதி!
நடு நடுங்கி, சுருங்கி கொண்டேன்.

டமார் டமார்!
டப் டப் டப்!!
டமார் டமார்....!!!
அக்கா தெரங்கக்கா,
நானெல்லாம் இதுக்காக எங்க போக முடியும்...?
தெரங்க!

மீண்டும் அமைதி!
இன்னும் எத்தனை நாட்கள்
இவர்களோடு போராட, தெரியலையே மஹேஸ்வரா!!!

டம் டம் டம்...!
அடச்சீ தெர!!,
உனக்கும் தேவதான....?
எங்க போயி, யாருகிட்ட கேட்கப்போற?
பொறம்போக்கு!

இன்னும் ஏதேதோ கேட்க்கிறது!
கண்ணில் வழக்கம் போல் தாரை
தாரையாய் தண்ணீர் பெருகி
தரையை நனைக்கிறது...!

கண்ணில் வடியும் உப்புத் தண்ணீர்
தூக்கத்தை அண்டவிடாமல் செய்ய...
வழிதெரியாமல் நான் வந்த வழியை
நினைவு கூர்த்தேன் எப்போதும்போல ...!

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.....!

டப் டப் டப்!!
இன்னும் எவளோ நேரம்
துணி போடுவா?
நேரமாச்சு...வெளிய வா...!

அப்பாவின் அதட்டல்,
என்னை ஒன்றுமே செய்யவில்லை.!

டப் டப் டப்!
உன் தம்பி சிங்கமாதிரி
சீருடை போட்டு வெளியே வந்துட்டான்,
நீ மட்டும் என்ன தான் பண்ணுவியோ?

உள்ளே நான், நெகச் சாயம் அடித்து,
உதட்டு சாயம் மிட்டு,
கண்ணாடியில் அழகு பார்த்து,
பிறகு அதை துடைத்தெறிந்து
பள்ளி கிளம்பினேன்.

காத்திருந்த ஆட்டோவில் தம்பி
தாவி ஏறினேன்!
நானோ அன்ன நடை நடந்ததால்,
நேரா நடக்க மாட்ட, சனியனே என்று,
முதுகில் ஒரு போடு போட்டாள், அம்மா!

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.....!

டம் டம் டம்!
டமார் டமார் டமார் !
ஒழுங்கு மரியாதையா,
வெளியே வந்திடுங்க,
இல்ல பெரம்பால தோலை உரிச்சிடுவேன்!

செய்வதறியாமல்,
தொங்கிய தலையுடன்,
நானும் நாகராஜும் பள்ளி
கழிப்பறியில் இருந்து வெளியே வந்தோம்.

என் ஆடை கசங்கி இருந்தது.
அவன் தலைமுடி திசைமாறி இருந்தது.

பள்ளியில் பல மாணவர்கள்
என் பாலுணர்ச்சியின்பால்
கேலி செய்து சீண்டிருந்தாலும்.
நாகராஜ் மட்டுமே,
பாலுணர்ச்சி மீது மோகம்
கொண்டு தீண்டத் துணிந்திருந்தான்.

அந்த காரணத்தினாலே,
நட்பு எல்லை தாண்டிற்று!
ஆம்!
நான் நாகராஜை காதலித்தேன்.
அவனோ அவன் பணத்தேவைக்காக
மட்டும் காதலித்தான்.

இது தெரிந்திருந்தும்,
அவன் பின்னால பித்துப் பிடித்து
திரிந்தேன்.

நாகராஜுக்கு அடி உதையும்,
எனக்கு TC யும் தந்தது
பள்ளி நிர்வாகம்.

வேறு பள்ளிக்கு அனுப்பிவைக்க
தாய் தந்தைக்கு மனமின்றி,
வீட்டுன்னுளே அடைக்கப் பட்டேன்.

பல வருடங்கள் ஓடிற்று!

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.....!

டப் டப் !
டப் டப் !!
டப் டப் !!!
அப்பா, அம்மா!
கதவத் தெரங்கப்பா !!

நான் எந்தத் தப்பும் செய்யலப்பா...
ஏன் இப்படி மாற்றங்கள்னு தெரிலம்மா...
இருட்டு நேரம்வேற இருக்கு...
உன் புள்ளய வெளியே அனுப்பாதீங்கம்மா!
எனக்கு உங்கள விட்டா யாருமே
தெரியாதும்மா...!

எனக்கு சமைக்க தெரியாது,
சரியா படிக்கவும் இல்ல...
எந்த வேலையைக்கு போயி பொழைக்கணும்னு
தெரியாது.
உள்ளே என்ன விட்டு,
வெட்டிக் கொண்ணுடுங்கம்மா.....!

டப் டப் டப் டப் டப் டப் டப் டப் !!!!!!!

கதவு திறக்காததால்!
மெல்ல நகரத் துடங்கினேன்.
வீட்டின் வாசம்,
வீட்டின் தூசி,
மெத்தை விரிப்பு,
ரோஜா செடி,
மொறு மொறு மிதியடி,
மறைத்து வைத்திருந்த அம்மாவின்
பழைய தாவணிகள்,
கண்ணாடி வளையல்கள்,
இன்னும் எத்தனை எத்தனை
விரும்பும் பொருள்களையும்,
வெறுக்க முடியாத நினைவுகளையும்
பிரிந்து நடக்கிறேன்.

ஒரு கட்டத்தில்
மனமுடைந்து ஓ வென கத்த
ஆரம்பித்தபொழுது,
அடேய் தங்கச்சி,
அழக்கூடாது....
உன்னையும் வெளியே தொரத்தி
விட்டுட்டாங்களான்னு...
வினவி தூக்கி விட்டாள்.

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.....!

திக் திக் திக்
டிக் டிக் டிக்

யா மம்முத ராசா
காசு குடுயா !
சோத்துக்கு வழியில்லை,!

என்ன ஒரு தரம்
ஏற எறங்க பாத்திட்டு,
பர்ஸை எடுத்தான்.
கெடச்சது அஞ்சு ரூவா!

நன்றீன்னு கை புடிச்சு
முத்தங் குடுத்தேன்!
ச்சீ தூ தொடாத,
காரவுட்டு ஒதுங்கி போன்னு ...!
வெரட்டி அடிச்சான்.

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.....!

டப் டப் !
டப் டப்..!!.
நெடு நேரம் தூங்கி இருந்தேன்...!
வெளிச்சம் வீட்டுக்குள் முளைத்திருந்தது.

கதவைத் திருந்தால்,
ஜாஸ்மின் அக்கா....!
பொறப்புடுடி,
நேரமாச்சு...!

கடைத்தெருவுக்கு ரவுண்ட்ஸ் போய்ட்டு,
மதிய சாப்பாட்ட முடிச்சிட்டு,
துணிக் கட போயி,
புதுப் புடவை எடுத்துட்டு,
பஸ் புடிப்போம்...!

இரவுக்கு நேரம் பூசையில
கலந்துக்கணும்...
இது ஒனக்கு மொதோ வருசமடீ....

மறக்காம ஆளுக்கொரு மஞ்சக் கயிறு
வாங்கியானும்...!

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.....!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (23-Jul-16, 11:47 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 227

மேலே