உயிர் தோழி

கிழிந்த நாராய் மடியிலே மயங்கிக் கிடப்பவளை பார்க்கப் பார்க்க விழிநீர் பெருகிற்று அமுதவாணிக்கு. மான்குட்டி எனத் துள்ளித் திரிந்தவளை வேட்டையாடிய கயவர்களை எண்ணி மனம் கொதித்தது.
அமுதவாணியின் கண்ணீர் வினித்ராவின் பூமுகத்தை நனைத்தவேளை மூடியிருந்த இமைகள் மெல்லப் பிரிந்தன. திறந்த விழிகளிலே அளவிடமுடியாத வலியும் வேதனையும் அப்பிக் கிடந்தன. அமுதவாணிக்கோ வினித்ராவின் கசங்கிய முகத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. விம்மிக் கொண்டே முகத்தை வேறுபுறம் திருப்பினாள்.
மெல்ல அமுதவாணியின் மடியிலிருந்து எழுந்து குளியலறையை நோக்கி நடந்தாள் வினித்ரா. தானும் கூடவே நடந்து, "hospital கு போகணும் வினி" எழும்பாத குரலில் வினித்ராவின் காதருகில் முணுமுணுத்தாள். வினித்ரா பதிலேதும் கூறாமல் வருத்தமான முறுவலுடன் குளியலறைக்குள் சென்று தாழிட்டாள்.
வெளியில் நின்ற அமுதவாணியோ தன்தோழிக்கு நேர்ந்த கதியை நினைத்து குமுறிக் குமுறி அழுதாள். அமுதவாணியின் குமுறல் வினித்ராவின் காதுகளையும் எட்டியது. தன்னாலேயே அவள் விழிகள் நீரைச் சொரிந்தன. குளியலறையிலிருந்த பற்பசையை கையில் எடுத்து அங்கிருந்த கண்ணாடியில் "Sorry" என்று எழுதினாள். எழுதி முடித்தவேளையில் அவள் அழுகையும் அதிகரித்திருந்தது. தனக்கு நேர்ந்த விபத்தை எண்ணியல்ல. தன் தோழியை அனாதையாக தனியே விட்டுச் செல்வதை எண்ணித் தான். அமுதவாணி பார்க்காவண்ணம் மேசையில் இருந்து எடுத்து வந்த கத்தியை துயரத்தோடு ஏறிட்டாள்.
அரைமணி நேரமாகியும் வினித்ரா வெளியில் வராததால் பயந்துபோனாள் அமுதவாணி. கதவை தட்டிப் பார்த்தாள். பதிலேதும் வராமல் போகவே தன் பலம் கொண்ட மட்டும் கதவை இடித்தும் தள்ளியும் பார்த்தாள். அது கொஞ்சமும் அசையவே இல்லை. பயமும் பதற்றமுமாக மீண்டும் கதவைத் தள்ளினாள். இம்முறை கதவு திறந்து கொண்டது. திறந்த கதவினூடாக அமுதவாணி பார்த்த காட்சி அவள் உயிரையே உறைய வைத்தது. கழுத்திலிருந்து வழிந்த இரத்தம் குளியலறைத் தரையை தழுவியிருக்க இரத்தவெள்ளத்தில் உயிரற்றுக் கிடந்தாள் வினித்ரா.
அமுதவாணியினதும் வினித்ராவினதும் குடும்பங்கள் பல காலமாக நெருங்கிய நட்புக் கொண்டிருந்தனர். ஒரே வயதினராக இருந்தபடியால் இவர்களுக்குள்ளும் அந்த நட்பு மலர்ந்தது. இருவருக்கும் பத்தொன்பது வயதாக இருக்கும் போது இரு குடும்பங்களும் சேர்ந்து சுற்றுலா ஒன்றுக்கு சென்றிருந்தனர். அப்பொழுது நேர்ந்த கொடூர விபத்தில் இரு குடும்பத்திலும் இவ்விருவரைத் தவிர அனைவரும் அகால மரணம் அடைந்தனர். காயங்களுடன் தப்பிய இருவரும் ஒருவருக்கொருவர் உற்ற துணையாக புது வாழ்க்கையை ஆரம்பித்தனர்.
தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருந்த இருவரது வாழ்விலும் மூன்றாவதாக ஒருவன் நுழைந்தான் வினித்ராவின் காதலனாக. அமுதவாணிக்கு ஏனோ அவனைப் பிடிக்கவில்லை. அவன் பார்வையில் ஏதோ தவறிருப்பதாக அவளுக்குப் பட்டது. இது குறித்து வினித்ராவை எச்சரித்தபோதோ அவள் புரிந்துகொள்ளவில்லை. காதல் அவள் கண்களை மறைத்திருந்தது. புரிந்துகொள்ளும் தருணம் வந்த போதோ காரியம் கைமீறிப் போயிருந்தது.
தனது ஒன்றுவிட்ட தங்கையின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்க வேண்டும் என்று இன்று காலை வினித்ராவை வெளியே கூட்டிச் சென்றவன் மாலை கொண்டு வந்து விட்ட போது அரை மயக்கத்திளிருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடை கசங்கி கிழிந்து போயிருந்தது. கைகளிலும் , கழுத்திலும் நகக் கீறல்கள். பயந்து போய் என்னவென்று விசாரித்த அமுதவாணியிடம் கோணல் சிரிப்புடன் இருவட்டொன்றை கொடுத்து, "அமைதியா இருந்தா இந்த வீடியோ வெளிய போகாது" மிரட்டி விட்டுச் சென்றான்.
வினித்ராவை கட்டிலில் கிடத்திவிட்டு இறுவட்டை போட்டவள் கொஞ்ச நேரத்திலேயே கதறியழ ஆரம்பித்தாள். திரையில் வினித்ரா அரைமயக்கத்திலிருக்க அவள் காதலனுடன் மேலும் மூன்று பேர் சேர்ந்து அவள் கன்னிமையை சூறையாடிக் கொண்டிருந்தார்கள்.
வினித்ராவின் உயிரற்ற உடல் மீது கட்டிப் புரண்டு கண்ணீர் வற்றும்வரை அழுதவள் மெல்ல எழுந்து கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். கடிகாரக் கம்பி இரவு எட்டு மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு குளியலறைக்குள் சென்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டவள், மீண்டும் வினித்ராவிடம் வந்து அவள் கைகளில் இருந்த கத்தியை எடுத்து கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். வீதிக்கு வந்து முச்சக்கரவண்டியில் ஏறி அந்தக் கயவன் தங்கியிருந்த வீட்டை நோக்கிச் சென்றாள். அவளது நல்ல நேரம் வினித்ரா என்னும் பூவைக் கசக்கிய நான்கு அரக்கர்களுமே ஒன்றாகத் தானிருந்தனர். முழுக்குடிபோதையில் திரையில் காலையில் தாங்கள் செய்த பாவச் செயலைப் பார்த்து ரசித்த வண்ணமிருந்தனர். இரத்தம் கொதிக்க திறந்திருந்த கதவு வழியே உள்ளே நுழைந்தவள் அவர்கள் பார்க்காத வண்ணம் ஒழிந்து கொண்டாள். சரியான தருணத்திற்காக காத்திருந்தவள் நான்கு மிருகங்களும் தூங்கிய பின்னர் ஒவ்வொருவரையும் சரமாரியாக தன் ஆத்திரம் தீரும் வண்ணம் கத்தியால் குத்தினாள். காலையில் நடந்த சம்பவம் சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் தன்னுடன் எடுத்துக் கொண்டாள். கால்நடையாகவே வீட்டுக்கு வந்தவள் நடந்த அனைத்தையும் கடிதமாக எழுதி பார்வையில் படுமாறு இருந்த மேசையின் மேல் வைத்தாள். அங்கிருந்து எடுத்து வந்தவற்றையும் தன்னிடம் இருந்த இறுவட்டையும் தீயிட்டு கொழுத்தினாள். பின் வினித்ராவின் உடலிருந்த குளியலறைக்குள் வந்தாள். கண்ணாடியில் எழுதியிருந்த "Sorry" ஐ பார்த்து புன்னகைத்தவாறே கத்தியை கழுத்துக்கருகில் கொண்டு சென்றாள்.
சில நிமிடங்களில் அமுதவாணியின் ஆன்மா வினித்ராவின் ஆன்மாவுடன் கைகோர்த்தவாறு சொர்க்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

எழுதியவர் : துவாரகா (4-Aug-16, 7:31 pm)
Tanglish : uyir thozhi
பார்வை : 554

மேலே