அம்மா அண்ணன் சிரிச்சிட்டான்சிறுகதை - ஊதா மூங்கில்

அம்மா...! அண்ணன் சிரிச்சிட்டான்

வீதியோர தற்காலிக மரகம்பங்களில் கட்டப்பட்ட நிலையில் இருந்த ஒலிபெருக்கிகள், தெய்வீக பாடல்களை வீசி கொண்டு இருக்க, அவ்வொலி அலாரம் வைத்தது போல், ஊரையே எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தது. கோவில் ஊழியர்கள், தீமிதி விழாவிற்கான வேலையை மும்முரமாக தொடங்கினர்.

ஆடி மாத பண்டிகை என்பதாலும், ஊரின் முக்கியமான இடத்தில் அமைந்து இருக்கும் கோவில் என்பதாலும், அந்த மாரியம்மன் கோவிலில், மக்கள் கூட்டம் காலை பொழுதே அதிகமாக காணப்பட்டது. பண்டிகையை சிறப்பிக்கும் வண்ணம், அக்கோவிலை சுற்றி இருக்கும் பகுதிகள் யாவும், வண்ண தோரண மாலைகளை அணிந்து, அழகு வடிவாய் இருந்தன.

கோவில் அருகில் போடப்பட்டு இருந்த பண்டிகைக்கால விசேஷ கடைகள் முன், சிறு சிறு குழந்தைகள் நின்று, அவர்களுக்கு பிடித்த பொம்மைகளையும் பொருட்களையும் தேர்வு செய்யும் முயற்சியில் இருக்க, அவர்களுடைய பெற்றோர்களோ அவர்களை அங்கு இருந்து நகற்றும் முயற்சியில் இருந்தனர். ஊரே இப்படி பரபரப்பாக இருக்க, தேவி வீட்டிலும் இப்பரபரப்பிற்கு குறைவில்லை.

தேவி, மாநிற மேனியும், உடல்வாகுக்கேற்ற உயரமும் கொண்டவள். இரு குழந்தைகளுக்கு தாய் என்ற அந்தஸ்தில் குடும்பத்தை கவனித்து கொள்ளும் ஓர் இல்லத்தரசி.

“இந்தா'ம்மா இதை உரி”என்று சொல்லி, தேவி தன் கையில் தாங்கி கொண்டு இருந்த சில பூண்டுகளை தன் தாய் செல்வியிடம் குடுக்க, செல்வி அதை கொஞ்சம் கோவத்துடன் பெற்று கொண்டு,

"ஏன்மா, இதை ஏன் இவ்வளவு அவசர அவசரமா செய்யன்னும். இப்போ ஏதாவது, இட்லி சாம்பார் ன்னு செஞ்சிட்டு, மதியம் இதை கொஞ்சம் பொறுமையா செய்ய கூடாதா ? வேலைக்கு போற மனுசன் லீவ் நாள்ல தான் கொஞ்சம் நல்லா தூங்குவாரு. அவரை இப்படி தூங்க விடமா காலைலயே எழுப்பி கறி வாங்க அனுப்பனுமா ?"ன்னு சொல்ல,

"ம்.... ஏன் சொல்ல மாட்ட, நேத்து தரணிகிட்ட காவ்யா'வ பண்டிகைக்கு கூட்டிட்டு போடன்னு சொன்னதுக்கு, முடியாது நான் பசங்களோட படத்துக்கு போறேன்னு சொல்லி என்னா குதி குதிச்சிட்டு இருந்தான்"

"அவனதான் அப்புறம் சமாதானம் பண்ணியாச்சே. அவனும் காவ்யா'வ கூட்டிட்டு போறேன். போயிட்டு வந்து, மதியம் படத்துக்கு போறேன்னு சொல்லிட்டானே. அப்புறம் என்ன ?"

"அப்புறம் என்ன'வா ? ஏன் அப்படி சொல்லிட்டு மூஞ்ச தூக்கியே வச்சி இருந்ததை நீ பார்க்கலையா. ஏதோ அவனுக்கு பிடிச்ச கறி சாப்பாடு செஞ்சாவாவது, ஆசையா சாப்டுட்டு காவ்யா'அ சந்தோசமா பண்டிகைக்கு கூட்டு போவானேன்னு தான் இதுலாம் பண்ணிட்டு இருக்கேன்"

"நான் தான் நேத்தே சொன்னனே பக்கத்துவீட்டு பிள்ளைகளோடு காவ்யா'வை அனுப்பி வை'ன்னு"

"நானா வேணாம்'ன்னு சொல்லுறேன். எல்லா பிள்ளைங்களும் அவளை கூப்பிட்டுட்டு தான் இருக்குறாங்க. ஆனா இவளோ, போனா அண்ணன் கூட தான் போவேன்னு ஒரே அடம்"ன்னு சொல்லிட்டு இருக்கும் போதே,

தூரத்தில் ஏதோ அழகிய குரல், "பேம்பேம் பேம்பேம்" என்ற சத்தத்துடன் கேட்க, தேவி சத்தம் வந்த திசையில் திரும்பினாள். வீட்டின் வாசலில் அந்த குரல் உள்நுழைந்தது. காவ்யா, காற்றினாலான கற்பனை வண்டியின் மேல் அமர்ந்துகொண்டு வந்தாள். ஆறு வயதிற்கே உரிய குறும்பு தனமும், சந்தோசமும் அவளிடம் எந்த குறையும் இன்றி இருந்தது. காவ்யா'வை பார்பவர்களால் அவளை தூக்கி கொஞ்சாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு அழகு, அப்படி ஒரு சுட்டித்தனம்.

வண்டி வீட்டினுள் நுழைந்து, நேராக தேவி இருக்கும் இடத்திற்கு வந்தது. தேவி, காவ்யா'வை பார்த்து,

"வண்டி எங்க இருந்து வருது ?"ன்னு கேட்க,

காவ்யா அந்த வண்டியில் நின்ற இடத்திலே சுற்றி கொண்டே, "பக்கத்து வீட்ல இருந்து"

"என்ன சேதி கொண்டு வந்து இருக்கீங்க ?"

"அங்க எல்லாரும் கோவிலுக்கு கிளம்பிட்டாங்க....."ன்ற படி நின்ற இடத்தில் சுற்றி கொண்டு இருந்த வண்டியை, காவ்யா திசை திருப்பி, வட்டமிட தொடங்கினாள்.

பின் தேவி, "அப்போ நீங்க எப்போ கிளம்புறது ?" என கேட்க,

அதற்கு செல்வியோ, "வயித்து வஞ்சனையை தீர்த்ததும் இந்த வண்டியும் கிளம்பிடும்"என்று சொல்லி, காவ்யாவை கிள்ள கை நீட்ட. காவ்யா'வோ அதில் இருந்து தப்பிக்க, வட்டத்தை கொஞ்சம் விரிவு செய்ய, திறந்து இருந்த அலமாரி கதவின் மேல், காவ்யா தனது இடது ஓர நெற்றியில் மோதி கொள்ள, வண்டி "டொய்ங்"என்ற சத்தத்துடன் நின்றது.

காவ்யா தலையை தேய்த்து கொண்டே, "அண்ணன் எங்க ?" என்று கேட்க,

அதற்கு செல்வி, “நீ இங்க காத்துல வண்டி ஓட்டிட்டு இருக்குற மாதிரி, அங்க அவன் கனவுல வண்டி ஓட்டிட்டு இருக்கான்”என்று சொல்ல,

காவ்யா அதிர்ச்சியுடன், “அப்போ அண்ணன் இன்னும் எந்திரிக்கவே இல்லையா ?”

அதற்கு தேவி,“இல்லைம்மா”

“இதுக்குமேல எந்திரிச்சி, எப்போ நாங்க பண்டிகைக்கு போக...”என்று கொஞ்சல் சலிப்புடன் கேட்க,

“நீயே போயி அண்ணனை எழுப்பி கூட்டிட்டு வா”என்று தேவி கூறினாள்.

காவ்யா'வும் அதற்கு “சரி”என கூறி விட்டு, மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டுக்கு சென்றால், அதுவரை வண்டியாக இருந்த அந்த காற்று வாகனம், இப்பொழுது ஓர் அழகிய சிறிய குதிரையாக மாறி, காவ்யாவை சுமந்த படி, படிகளை ஏறத்தொடங்கியது.

காவ்யா மேல் மாடியில் இருந்த அவளது அண்ணன் தரணியின் அறையின் வாசலில் குதிரையை நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள். உள்ளே தரணி இன்னும் எழாமல் படுத்து கொண்டு இருக்க, காவ்யா அவனை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டாள். அவன் அருகில் சென்று அவனை தட்டியபடி,

“அண்ணா எழுந்திரி’ண்ணா”எனக்கூற,

தரணி மெல்ல விழிகளை திறந்து, கொஞ்சம் சலிப்புடன் கூடிய எரிச்சல் குரலில், “ஏய், ஒழுங்கா தூங்க கூட விடமாட்டியா”எனக்கூற,

“பண்டிகைக்கு போகணும்'ன்னு நேத்தே சொன்னேன் தானே”

“இப்போ அதுக்கு என்ன அவசரம் ? பொறுமையா போகலாம்”

“பொறுமையாவா…! நீ அப்புறம் படத்துக்கு போகணும்'ன்னு சொல்லி அவசர அவசரமா கூட்டிட்டு வந்துடுவா”என சொல்லி அவன் அருகில் சென்று,

தரணியின் கன்னங்களை கொஞ்சலாக கிள்ளியபடியே, “அண்ணா ப்ளீஸ்'ண்ணா ப்ளீஸ்'ண்ணா ப்ளீஸ்'ண்ணா”என சொல்லி கொண்டே இருக்க,

“சரி கீழ போ வரேன்”என தரணி கூறினான். காவ்யா'வும் அதை கேட்டு துள்ளிகுதித்து கொண்டு அந்த அறையில் ஒரு வட்டம் அடித்து கொண்டு வேகமாக கீழ வந்து, அவளது அம்மாவும் பாட்டியும் இருக்கும் இடத்தை தாண்டி சென்றாள்.

செல்வி காவ்யா கையை பார்த்து விட்டு தேவியிடம், “அவ என்ன எதோ கவர் எடுத்துட்டு போயிட்டு இருக்கா ?”

“தெரியலையே, எங்க இருந்து எடுத்துட்டு வரா'ன்னு. இப்படி தான் போன வாரத்துக்கு முதல் வாரம், அவங்க அப்பா போனை சுத்தம் பண்ணி தாரேன்னு எடுத்துட்டு போயி, தண்ணி ஊத்தி சோப் போட்டு கழுவி கொண்டு வந்து தந்தாள். அந்த மாதிரி இன்னைக்கு என்ன பண்ண போறாளோ தெரியல”எனகூறி கொண்டு இருக்கும் போதே, மேல்மாடியில் இருந்து, தரணியின் குரல் ஒலித்தது.

“காவ்யா, குளிக்க ஷேம்பு வாங்கிட்டு வா”

இதைக்கேட்டதும், குளியல் அறைக்கு பக்கத்தில் இருந்த மேஜையோரமாக நின்று கொண்டு இருந்த காவ்யா,”தோ…………..”என்று ஒலித்தபடி நின்ற இடத்தில் இருந்து, வீட்டின் முன் வாசல்க்கு வேகமாக ஓடினாள்.

காவ்யா அப்படி ஓடும் பொழுது, அருகில் இருந்த மேஜை, வழியில் கீழே இருந்த சில பாத்திரங்கள் என தன்வழியில் இருந்த அனைத்தையும் இடித்துவிட்டு வேகமாக ஓட, வழியில் அமர்ந்து இருந்த அவளது பாட்டியையும் அவள் விட்டு வைக்காமல் ஒரு இடி இடித்து விட்டு அவர்களை தாண்டி சென்றாள்.

காவ்யா இடித்து விட்டு சென்ற பிறகு, செல்வி தேவியிடம், “என்னா இடி இடிச்சிட்டு போறா! அண்ணன் கூப்பிட்டுட்டா போதும், என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாலும் அப்படியே போட்டுட்டு ஓடுறது”

“காவ்யா'க்கு தரணி மேல ரொம்ப பாசம். தினமும் அவன் கூட தான் சாப்பிடுறா, அடம்பிடிச்சாவது அவன் கையால ஒருவாய் ஊட்டிவிட சொல்லி சாப்பிடுவா. அவனுக்கு தான் இந்த பாசம்லாம் கொஞ்சம் கூட இல்லை. எப்பவும் அவள் கிட்ட மூஞ்ச மூஞ்ச காட்டிட்டு இருக்கான்”

“அப்படிலாம் சொல்லாத, ஆம்பள பசங்களுக்கும் பாசம் இருக்கும், ஆனா காட்டிக்க தெரியாது. காட்டவும் மாட்டாங்க. தங்கச்சி மேல பாசம் இல்லாமதான், காவ்யா'க்கு பச்சை கலர்ல பட்டு பாவாடை சட்டை எடுத்ததும், அவனும் பச்சை கலர்லையே சட்டை வேணும் ன்னு சொல்லி எடுத்து கிட்டானா ?”

“அவன் கிட்ட அந்த கலர்'ல சட்டை இல்லை. அதனால அவன் அதை எடுத்துகிட்டான்”

“இதைலாம் நீ பேசாத. முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் ஏதே மூணு நாலு வருஷம் இடைவெளி விடுவாங்க. நீங்க பத்து வருஷம் கழிச்சி அடுத்த பிள்ளை பெத்தா. அவனுக்கு ரெண்டும் கெட்டான் வயசு, இவளுக்கு குழந்தை வயசு.பதினாறு எப்படி ஆறோட ஒத்து போகும். அவன் சந்தோசமா சுத்ததான் பார்ப்பான்”என சொல்லி முடிக்கும் போது, தரணி கீழே வந்து குளியல் அறையை நோக்கி சென்றான்.

தரணி குளியலறையில் நுழையும் போது, “அம்மா, அடுப்புல என்ன இருக்கு ? தீயிற வாடை வருது பாரு”என சொல்ல,

அதற்கு தேவி, செல்வியிடம், “அடுப்புல எதுவுமே இல்லையே, இவனுக்கு எங்க இருந்து தீயிற வாடை வந்தது”என கூறி கொண்டு இருக்கும் போதே,

காவ்யா ஷேம்பு வாங்கி கொண்டு தேவியிடம் வர. தேவி அந்த ஷேம்பினை வாங்கி கொண்டு, காவ்யாவிடம், “அப்பா வீதி முக்கு கறிக்கடையில இருப்பாரு. சமையலுக்கு வேண்டியதுலாம் தயார் ஆயிடிச்சாம். உங்களை சீக்கிரம் வர சொன்னங்க'ன்னு சொல்லி, அவரை கையோட கூட்டிட்டு வா. வர வழியில மளிகை கடையில பிரியாணி பௌடர் ரெண்டு பாக்கெட் வாங்கிட்டு, சீக்கிரம் வாங்க”என சொல்ல, காவ்யா மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினாள்.

தேவி, ஷேம்பினை தரணியிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் சமையல் வேலைகளில் இறங்கினாள். தரணி சிறிது நேரம் கழித்து குளித்து முடிந்து வெளியே வர, அந்த கருகிய வாடை அதிகமா வந்து கொண்டு இருந்தது.

“அம்மா, அடுப்புல என்ன வச்சி இருக்க ? கருகுற வாடை வருது'ன்னு முன்னமே சொன்னேன் தானே”என சொல்லிக்கொண்டே அருகில் இருந்த மேஜையை பார்த்தான்.

அதை அவன் பார்த்ததும், “அம்மா………..” என சத்தமா கத்தினான். அந்நேரம் வீட்டினுள் காவ்யா'வும் அவளது அப்பா சூர்யா'வும் நுழைந்தனர். இப்பொழுது அனைவரும் தரணியின் முன் ஒன்று கூடினர்.

தரணியிடம் அவனது அப்பா, “என்னடா ஆச்சு ஏன் இப்படி கத்துற ?”என கேட்க,

தரணி கையில் இருந்த பச்சை நிற சட்டை ஒன்றை உயர்த்தி காட்டினான். அந்த சட்டை கீழ் ஓரத்தில் கருகி ஓட்டையாகி இருந்தது. அது அவனுக்கு பண்டிகைக்காக எடுத்த சட்டை என்பதை அனைவரும் நொடி பொழுதில் உணர்ந்து கொண்டனர்.

“யார் இதை இப்படி ஓட்டை பண்ணினது ?”

செல்வி,“காவ்யா தான் எதோ கவர் ஒன்ன எடுத்துட்டு வந்தாள்”

தரணி காவ்யாவை முறைக்க, காவ்யா படபடப்புடன்,

“ஐயோ நான்லாம் அதுல ஓட்டை போடல ?”

“அப்புறம் எப்படி இது தானா ஆச்சா ?”என தரணி கேட்க, காவ்யா யோசிக்க தொடங்கினாள். பின் எதோ நினைவு வந்தது போல்,

“ஆ… நீ ஷேம்பு வாங்கிட்டு வா'ன்னு சொன்ன தானே, அப்போ நான் ஓடும் போது மேஜை மேல இடிச்சிகிட்டேன். அப்போ அயர்ன் பாக்ஸ் துணிமேல சாஞ்சி இருக்கும்”

“உன்னை யாரு துணிய இங்க வைக்க சொன்னது ?”

“சட்டையை அயர்ன் பண்ணலாமே'ன்னு எடுத்துட்டு வந்து வச்சேன்”

“ஏய் லூசு புது துணியை யாராவது அயர்ன் பண்ணு வாங்களா ?”

“நேத்து முன்தினம், நீதானே துணி அயர்ன் பண்ணலன்னு அம்மா கிட்ட அழுத. அதான் சரி நீ குளிச்சிட்டு வரது'குள்ள அயர்ன் பண்ணி வைக்கலாம்னு பார்த்தேன்”என காவ்யா சொல்ல,

அதற்கு தரணி, “உன்னை”என்ற படி காவ்யாவை அடிக்க, சூர்யா அவனை தடுத்து,

“டேய் தெரியாமநடந்துச்சி. குழந்தை தானே அவள். அவளுக்கு என்ன தெரியும். சட்டை தானே போச்சு, சாயந்திரம் வேற ஒன்னு வாங்கிக்கலாம். இப்போதைக்கு இருக்குற சட்டை ஒன்னு போட்டுட்டு வந்து சாப்பிட்டு. சாப்பாடு இன்னும் கொஞ்ச நேரத்துல ரெடியாகிடும்”

“எனக்கு சட்டையும் வேணா, சாப்பாடும் வேணா நீங்களே எல்லாத்தையும் வச்சிகோங்க”என்று கோவமாக கையில் இருந்த சட்டை தூக்கி வீசி விட்டு, மேல் மாடிக்கு செல்லும் படியை நோக்கி வேகமாக நடந்தான்.

அதை பார்த்து தேவி,“வேதாளம் முரங்கைமரம் ஏறிடிச்சி. இனி அதுக்கா தோணும் போது தான் இறங்கும்” என சொல்லிவிட்டு திரும்ப,

செல்வி தேவியிடம், “ஷேம்பு குடுக்க நீ அங்க போன தானே. உனக்கு கருகுற வாடை வரலையா ?”

“எனக்கு தான் ரெண்டு நாளா சளியாச்சே. எனக்கு எந்த வாடையுமே தெரியல”என சொல்லி கொண்டே, சமையல் அறைக்குள் சென்றாள். பின், சமையல் வேலைகள் நடக்க தொடங்கின.

சமையல் செய்து முடித்ததும், ஓர் தட்டில் சாதம் போட்டு, சாப்பிடும் மேஜையின் மேல் கன்னத்தில் கை வைத்த படி அமர்ந்து இருந்த காவ்யாவின் முன் ,”ஏய் வாண்டு. இந்தா சாப்பிடு” என்று வைத்தாள், தேவி. காவ்யா தன் ஒரு கையால் அவளது மூக்கை மூடி கொண்டு,

“அண்ணன் சாப்பிட்டா தான் நானும் சாப்பிடுவேன்”என சொல்ல,

“அவன்கிட்ட போயி என்னால கெஞ்ச முடியாது. நீயே போயி அவனை கூட்டிட்டு வா” என சொல்லி, மேஜை மேல் அமர்ந்து இருந்த காவ்யாவை கீழே இறக்கி விட்டாள் தேவி. காவ்யா'வும் “சரி”என்ற படி தலையை ஆட்டிவிட்டு, மேல்மாடியில் இருக்கும் தரணியின் அறைக்கு சென்றாள். அங்கே தரணி கோவமாக உட்கார்ந்து இருக்க,

காவ்யா அவனிடம், “அண்ணா நீ என்னை பண்டிகைக்கு கூட்டிட்டு போகலனாலும் பரவால வந்து சாப்பிட்டு”என சொல்ல,

தரணி கோவமாக காவ்யாவை பார்த்தான்.

“எனக்கு ரொம்ப பசிக்குது. வந்து சாப்பிடு வா”என சொல்ல,

அதற்கு தரணி, “உனக்கு பசிச்சா நீ போயி சாப்பிடு. என்னை கூப்பிடாத”

“நீ சாப்பிடாம நான் எப்போ சாப்பிட்டு இருக்கேன். வா'ண்ணா”என்று கூறி காவ்யா தரணியின் கையை பிடித்து இழுக்க, தரணி அந்த கையை எடுத்து விட்டு, காவ்யா'வை, “ஏ, போ”என்று கூறி ஒரு தள்ளு தள்ளினான்.

அந்த தள்ளால், காவ்யா அறையின் கதவில், தனது வலதுபக்க நெற்றில் இடித்து கொண்டாள். பின் எதுவும் கூறாமல், தலையை தேய்த்து கொண்டே கீழ் இறங்கி நேராக சமையலறையை நோக்கி நடந்தாள். சமையலறை வாசலில் நின்று கொண்டு இருந்த தேவி, காவ்யா'விடம்,

“என்ன உன் அண்ணன் உன்னை அடிச்சிட்டான ?”

“இல்லை. நான் கதவுல முட்டிகிட்டேன்”என கூறி கொண்டே, பாத்திரங்கள் அடுக்கி வைத்து இருந்த அலமாரியை நோக்கி சென்றாள், காவ்யா.

பின் அங்கு அடுக்கி வைத்து இருந்த பாத்திரங்களில், அவளது தலைக்கு பொருத்தமான ஒரு பாத்திரத்தை எடுத்து அவள் தலைமேல் கவிழ்த்து கொண்டாள். அப்பாத்திரம் காவ்யாவின் விழிகளை மறைத்து மூக்குவரை இருந்தது. அதை பார்த்த தேவி சிரித்து கொண்டே,

“இது என்னடி கோலம் ?”என கேட்க,

காவ்யா தன் பிஞ்சு விரல்களில் இரண்டை மட்டும் நீட்டி மேல் நோக்கி காட்டியவாறு, “காலைல இருந்து ரெண்டு முறை தலைலையே இடுச்சிகிட்டேன். இனிமே இடிச்சிக்க கூடாது. ரொம்ப வலிக்குது”என கூறினாள்

“சரி உங்க அண்ணன் சாப்பிட என்ன சொன்னான்”

“சாப்பாடு வேணாமாம். உனக்கு வேணும்'ன்னா நீ சாப்பிடுன்னு சொல்லிடிச்சி”எனக்கூற,

தேவி காவ்யாவை அழைத்து கொண்டு, மேல் மாடிக்கும் செல்லும் படிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கீழ் இருந்தபடியே பேச தொடங்கினாள்.

“டேய் தரணி சாப்பிட வாடா”

“எனக்கு வேண்டாம். நீங்களே சாப்பிடுங்க”

“டேய் அதான் அப்பா சாயந்திரம் சட்டை வாங்கி தரேன்னு சொன்னார் தானே”

“சாயந்திரம் வாங்கி தந்து, நான் படத்துக்கு புது சட்டை தான் போட்டுட்டு போகணும். வாங்கி தரதா இருந்தா இப்பவே வாங்கி தாங்க”

“டேய் இப்போ துணி வாங்க போன, வரதுக்குள்ள பண்டிகை முடிஞ்சி போயிடும் டா. காவ்யாவை பண்டிகை க்கு கூட்டிட்டு போகணும் தானே”

“என்னாலலாம் கூட்டிட்டு போக முடியாது. துணி வாங்கி தரதா இருந்தா தான். நான் கீழயே வருவேன்”என கூற,

தேவி கொஞ்சம் கோவமாக, “வரவர உன் ராவிடி அதிகமாயிடிச்சி. இப்போ நீ சாப்பிட வரியா வரலையா ?”

“எனக்கு வேண்டாம்”

“நீ சாப்ட்டா சாப்பிடு. சாப்பிடாட்டி போ”எனக்கூறி, தேவி அவளது பார்வையை காவ்யாவிடம் கொண்டு சென்றாள்.

காவ்யா, அவளது கண்ணை பாத்திரம் மூடி கொண்டு இருந்ததால், ஒரு கையால் பாத்திரத்தை கண் தெரியும் படி உயர்த்தி பார்த்து கொண்டு இருக்க,

“ஏ வாண்டு”, என்றபடி தேவி அந்த பாத்திரத்தின் மேல் ஒரு கொட்டு விட்டாள். அக்கொட்டு பாத்திரத்தில் ஒருவித சத்தத்தை உருவாக்க, அச்சத்தம் காவ்யாவின் காதினுள் அதிர்வலைகளுடன் ‘கிர்...’ என்று நுழைய, காவ்யா வேகமாக அவளது அம்மா வை திரும்பி பார்த்து,

கொஞ்சம் கோவமாக, “என்ன'ம்மா”

“உனக்காவது சாப்பாடு வேணுமா வேண்டாமா ?”

“அண்ணன் சாப்பிட்டா தான் நான் சாப்பிடுவேன். இல்லன்னா எனக்கும் வேணாம்”

“உனக்கும் வேணாமா, அப்போ போ. காலைல கறி வாங்க போகும் போது உங்க அப்பா சாபம் குடுத்துட்டே போய் இருப்பார் போல, இன்னைக்கு வீட்ல கறி சமைச்சும் எல்லாரும் பட்னி தான் போ” என சொல்லிவிட்டு தேவி வீட்டின் வாசலை நோக்கி நடந்தாள். காவ்யா வீட்டின் பின்புற வாசலை நோக்கி நடந்தாள்.

தரணி அவனுடைய அறையில் அப்படியே கோவமாகவே உட்கார்ந்து இருக்க, நேரம் மட்டும் நகர்ந்து கொண்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து, யாரோ அவனது அறைக்கு வருவது போல் சத்தம் ஒன்று கேட்க, அறையின் வாசலை வெறுப்புடன் பார்த்தான், தரணி.

அறையின் வாசல் ஓரத்தில், அந்தரத்தில் முதலில் ஒரு பாத்திரம் மட்டும் தெரிய, பின் ஒரு கை வந்து, அந்த பாத்திரத்தை உயர்த்தி பிடித்து எதையோ பார்த்துவிட்டு, பின் முழு உருவத்தையும் வெளிக்கொண்டு வந்தது. அது காவ்யா என்று தெரிந்ததும் தரணி அவனது பார்வை வேறுபக்கம் திருப்பி கொண்டான்.

காவ்யா மெல்ல மெல்ல நடந்து வந்து, தரணியிடம், “பச்சை கலர் சட்டை இருந்தா சாப்பிட வருவ தானே ?”என கேட்க, தரணி எதுவும் பேசாமல் இருந்தான்.

பின் காவ்யா, “இந்தா பச்சை கலர் சட்டை”எனக்கூற, தரணி வேகமா காவ்யா இருந்த பக்கம் திரும்பி பார்த்தான். காவ்யா கையில் ஒரு பச்சை நிற சட்டையை உயர்த்திபிடித்து நின்று கொண்டு இருந்தாள். ஆனால், அந்த சட்டை ஒரே வண்ணமாக இல்லாமல், சில இடங்களில் அடர்த்தியான பச்சையும், சில இடங்களில் லேசான பச்சையும், இன்னும் சில இடங்களில் மிக மிக லேசான பச்சை நிறமாகவும் காட்சியளித்தது.

தரணி அந்த சட்டையை தொட சிறிது ஈரமாக இருந்தது. பின் காவ்யா'விடம் , “இந்த சட்டை ஏது ?”

“உன்னோடது தான்”

“என்னோடதா ?”

“ஆமா. நேத்து நீ போட்டு இருந்தியே அந்த சட்டை தான்”

“நேத்து நான் போட்டு இருந்தது வெள்ளை கலர் சட்டையாச்சே!!!. இது பச்சையா இருக்கு ?”

“ஆமா. வெள்ளையா தான் இருந்தது. பச்சை சட்டை இல்லன்னு நீ தானே சொன்ன, அதுவும் இல்லாம உன்கிட்ட வெள்ளை சட்டையே ரெண்டு மூணு இருக்கு. அதான் ஒரு சட்டைய பச்சை கலரா மாத்திட்டேன்”

“எப்படி மாத்தின ?”என ஆச்சர்யமாக கேட்க,

“அப்பா பேனா'க்கு ஊத்த வச்சி இருந்த, பச்சை கலர் மையை எடுத்துட்டு போயி ஒரு பாத்திரத்துல ஊத்தி, இந்த சட்டையை கொஞ்ச நேரம் அதுல ஊற வச்சி எடுத்தேன். அப்புறம் சீக்கிரம் காயனும் ன்னு அயர்ன் பண்ணிட்டேன்”என கூற,

தரணி அப்போது தான் காவ்யா'வின் கையை முழுதாக பார்த்தான். அவளது கைகள் இரண்டுமே மணிக்கட்டு வரை பச்சை நிறமாக இருந்தது. தரணி, காவ்யா கொண்டு வந்த சட்டையை பார்த்து கொண்டு இருக்க, காவ்யா தலை மேல் கவிழ்த்து இருந்த பத்திரத்தை கண் வரை உயர்த்திபிடித்து தரணியை பார்த்தாள்.

அதை தரணி பார்த்தும், பாத்திரத்தை மீண்டும் பழைய நிலைக்கே விட்டுட்டு, காவ்யா தரணியிடம்,

“அதான் பச்சை கலர் சட்டை கிடைச்சிடிச்சே. சாப்பிட போலாமா ?”எனக்கேட்க,

தரணி சட்டையை ஒரு ஓரமாக வைத்து விட்டு, காவ்யாவின் பிஞ்சு விரல்களை பிடித்து, “சாப்பிட போலாமா'ன்னு கேக்குற, ஆனா உன் கைலாம் இப்படி மையா இருக்கே. எப்படி சாப்பிடுவா ?”எனக்கேட்க,

காவ்யா அவளது விரல்களை பிடித்து கொண்டு இருந்த தரணியின் விரல்களை பிடித்து, “உன் கை நல்லா தானே இருக்கு”எனக்கூற, தரணி காவ்யாவை பார்த்து புன்சிரிப்பு பூத்தான்.

காவ்யா பத்திரத்தை உயர்த்தி தரணி சிரிப்பதை பார்த்ததும் மிக்க சந்தோஷமான குரலில், “அம்மா…! அண்ணன் சிரிச்சிட்டான்”என கத்தியபடி அறையின் வாசலை நோக்கி ஓட, கண்களை பாத்திரம் மறைத்து இருந்த காரணத்தினால், அறையின் கதவில் மோதி கொண்டாள்.

கதவில் மோதும் பொழுது, கதவின் கைப்பிடி ஓரமும், காவ்யா தலையில் கவிழ்த்து இருந்த பாத்திரத்தின் ஓரமும் உராய்ந்து கொள்ள, பாத்திரம் இடத்திலிருந்து வலதுபுறமாக சுழன்றியபடி தலையில் இருந்து கழண்டி கீழே விழுந்தது. விழுந்த பாத்திரம், படிகளில் கீழ் நோக்கி உருண்டு சென்று கொண்டு இருந்தது.

காவ்யாவோ இடித்த பின்பு, ஒரு சுற்று சுற்றி நிற்க, இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த தரணிக்கு சிரிப்பு பீறிக்கொண்டு வெளியேறியது. சிரித்து கொண்டு இருந்த தரணியை பார்த்து காவ்யா, “தலை கவசம் உயிர் கவசம்”என்று அவளது தலையையும், உருண்டு சென்று கொண்டு இருந்த பாத்திரத்திரத்தையும் சுட்டி காட்டி விட்டு, உருளும் பாத்திரத்தை பிடிக்கும் முயற்சியில், அதன் பின் ஓடினாள், அந்த அழகு குட்டி தேவதை. பிறகு அந்நாள் அவர்களுக்கு இனிதாகவே கழிந்தது.

-முற்றும்-

- ஊதா மூங்கில்

[சிறுகதை பற்றிய கருத்துக்களை பகிரவும்]

எழுதியவர் : ஊதா மூங்கில் (4-Aug-16, 7:20 pm)
சேர்த்தது : ஊதா மூங்கில்
பார்வை : 741

மேலே