நட்பு

சின்ன சின்ன வண்ணப் பூக்களில்
தன்னைத் தொட்டதும் மலர்ந்திடும் பூவே
உதயம் என்பது உனக்கொரு நொடிதான்
இதயத்தில் உதிராது வசிப்பது உன்னுறவுதான்......


தேசம் விட்டு தேசம் சென்றும்
நேசம் வைத்திடும் இளந்தென்றலே
வெண்ணிலவாய் வானில்நீ ஒற்றைப் புள்ளி
எண்ணிக்கையில் விண்மீன்களாய் தொடரும் புள்ளி......


கன்னல் உள்ளிருக்கும் கனிந்த அமுதே
மின்னுகின்ற பொன்னொளி வடிவே
ஆலமர விழுதுகள் போன்று
ஆபத்தில் தாங்கிடும் கரங்கள் உன்னுடையதே......


முளைத்த பயிர்களின் உள்ளம் அனைத்திலும்
விளைந்திடும் விலை மதிப்பற்ற செந்நெல்லே
களைத்த நெஞ்சத்திற்கு களிப்பூட்டி
கவலைத் துரத்திடும் கலைஞனும் நீதானே......


இமையாய் விழிகளுக்கு குடை விரித்தும்
சுமைகளை இறக்கி வைத்தும் சுகமளிப்பாய்...
வேதனைகள் சில நேரம் தந்தாலும்
சாதனையில் விலகாது துணை நிற்பாயே......


மதமென்றக் கோட்டையை வதம் செய்து
மனிதமென்ற வீட்டுக்குள் குடிபுகுவாய்...
சாதிகள் என்பது உனக்கு இல்லை
சமத்துவம் கொண்டது உனது எல்லையே......


இதயம் இல்லாது உடல் வாழாது...
நட்பு இல்லாது துடிக்கும் இதயமேது...
நரம்பு இல்லாது வீணையும் இசைக்காது...
நண்பன் இல்லாது மனிதனும் இங்கேது......


கறந்தப் பாலினைப் போன்று
வெள்ளை மனம் கொண்டு
களர் நிலத்திலும் விதையாய் விழுந்து
வளர்கின்ற ஓர் உயிர் நீதானே......


ஈன்றதால் தாய் தந்தைப் பாசம்...
உடன் பிறந்ததால் சகோதரப் பாசம்...
உறவுகளின் கூட்டில் பிறந்திடாது
உணர்வுகளில் கலந்திடுவது நட்பின் பாசமே......


மூன்று எழுத்து பொது மொழியில்
நான்கு எழுத்து உறவுக் கொண்டு
பாதியிலே வந்துச் சேர்ந்தாலும்
ஆயுள் வரை மணம் வீசுமே..............தோழமைகள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .........

எழுதியவர் : இதயம் விஜய் (7-Aug-16, 5:35 pm)
Tanglish : natpu
பார்வை : 538

மேலே