ரயில் பயணங்களில்
ஆனந்திக்கு இது முதல் ரயில் பயணம்.
அதாவது,ஆண் துணை இல்லாமல், தனது இரண்டு பிள்ளைகளுடன், தாம்பரத்தில் ஏறி சிதம்பரம் வரை பயணிக்கிற முதல் பயணம்.
ஆனந்திக்கு பயமாகத்தான் இருந்தது.
''தைரியமா போ..சிதம்பர ஸ்டேஷன்ல அப்பாவும்,மாமாவும் நிப்பாங்க..அடிக்கடி போன் ல தொடர்பு வச்சுக்க'' என்று கணவர், ரயிலில் ஏற்றிவிட்டு
ஜன்னல் வழியாக டாட்டா காட்டினார்.
பிள்ளைகள் டாட்டா காட்டிய போது,ரயில் கிளம்பிக்கொண்டிருந்தது.
ஆனந்திக்கு இப்போது பயம்,அந்த பெட்டியில் மற்ற பயணிகள் யாருமில்லாதது தான்.
அந்த அந்தி நேரத்தில் ,ஜன்னலோரோம் அமர்ந்துக்கொண்டு,வெளியே வேடிக்கை பார்த்த பிள்ளைகள்,
''ஜிலு ஜிலு ன்னு காத்து வருதும்மா ''என்று மகிழ்ச்சியில் சிலிர்க்கும்போது,
ஆனந்தி கடமைக்கு,''ம்ம்..'' என்று விட்டு,
'சிதம்பரம் வரைக்கும் சேப்டியா போய் சேரணுமே' என்று
உள்ளுக்குள் வேண்டிக்கொண்டாள்.
அவளை,மேலும் அச்சம் உண்டாக்கும் வகையில்,
செங்கல்பட்டில் ஒரு அம்பது வயது, தடித்த மனிதர் ஒருவர் ஏறி, அவர்கள் எதிரில் அமர்ந்தார்.
அவர் மிகவும் களைத்திருந்தார்.
அடிக்கடி தன் முகத்தை குற்றால [?]துண்டால் துடைத்துக்கொண்ட அந்த கிராமவாசி,
எதிரில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்த ஆனந்தியிடம்,
''மகளுக்கு தலைபிரசவம்..மருமவன் வெளிநாட்டுல இருக்கார்..அவளுக்கு அம்மாவும் இல்ல..
அதனால ஊருக்கு அழைச்சுகிட்டு போகல..இங்கய வச்சி, பிரசவம் பாத்தாச்சு..நாலு நாள் ஆச்சும்மா குளிச்சு..இப்போ தான் ஊருக்கு போறேன்..சீர்காழி..''என்று சிரித்தவர்,
''ஆமா..உனக்கு எந்த ஊரும்மா ?'' என்றார்.
அந்த ஆளின் தோற்றம், ஆனந்திக்கு பயத்தை உண்டாக்கியது.
திருடர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசி, ஏமாற்றுவார்கள் என்று, உள்ளறிவு உணர்த்த,
''சிதம்பரம் '' என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி,முகத்தை திருப்பிக்கொண்டாள் அவள்.
''அட..நமக்கு பக்கம் தான் ''என்றவர், பிள்ளைகள் பக்கம் திரும்பி,
''அருமையான புள்ளைங்க'' என்று அவர்களின் தாடையை தடவி கொஞ்சினார்.
பிள்ளைகள்,வெட்கத்தை விடையாக தந்துவிட்டு, ஜன்னலோரோம் திரும்பிவிட்டார்கள்.
இந்த இடைப்பட்ட நேரத்தில்,ஆனந்தி ,அப்பாவுக்கு ஒரு போனை போட்டு,
''வந்துகிட்டு இருக்கோம் பா..'' என்றாள்.
[உண்மையில்,அந்த அழைப்பு சென்று சேரவில்லை..]
''விடிஞ்ச பொறகு போய் சேரப்போற வண்டிக்கு,இப்பவே வந்து ,கொசுக்கடில ஸ்டேஷன் ல காத்திருப்பாரே அப்பா..ஹஹஹஹா...அதான் அப்பா..'' என்ற அந்த ஆள்,
தன் மடியில் வைத்திருந்த பொட்டலத்தை பிரித்து,
''இன்னிக்கு முழுக்க சாப்பிடல..வரும்போது அவசரமா ஆறு மெதுவடை வாங்குனேன்..எனக்கு மூணு போதும்..
இந்தாங்க ஆளுக்கொன்னு சாப்பிடுங்க ''என்று ,
முதல் வடையை ஆனந்தியிடம் நீட்டினார்.
''ஸாரி..எனக்கு இதெல்லாம் பிடிக்காது..''என்ற ஆனந்தி,
தனது பிள்ளைகளுக்கு கொடுக்க போனதையும் தடுத்தாள்.
''எண்ணை பலகாரம் ,அவங்களுக்கு ஆகாது ''என்று.
''ஓ சரிம்மா ''என்ற அந்த நபர்,பொட்டலத்தை மூடி, கொஞ்சம் நேரம் கம்மென்று பயணித்தார்.
ரயில் தன் போக்கில் விரைந்துக்கொண்டிருந்தது அந்த கடும் இருட்டில்.
சிறிது நேரத்திற்கு பிறகு,
அந்த ஆள்,தன் இருக்கையை விட்டு,பொட்டலத்தோடு கிளம்பிவிட்டார்.
ஆனந்திக்கு தெரியாததா என்ன..?
ரயில் பயணத்தில்,இப்படி,பலகாரத்தில் மயக்க மருந்தை கலந்து, கொடுத்து, கொள்ளையடிக்கிற விசியம்..?
தான் உஷாராக நடந்துக்கொண்டதில், ஆனந்திக்கு திருப்தியாக இருந்தது.
தாம் மசியவில்லை என்பதால், அந்த ஆள் இடத்தை காலி செய்து போய்விட்டதாக ஆனந்தி நினைத்தாள்.
ஆனால் அடுத்த பத்து நிமிடத்தில், அந்த ஆள் மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்தார்.
இப்போது அவர் கையில் அந்த பொட்டலம் இல்லை.
பிள்ளைகள் இப்போது தூங்க தொடங்கியிருந்தனர்.
சிறிதாய் ஏப்பம் விட்டுக்கொண்ட அவர், ஆனந்தியைப்பார்த்து,
''ரொம்ப பசிம்மா..புள்ளைக முன்னாடி, வடை சாப்பிட மனசு கேக்கல.. அதான்,படிக்கட்டுல போய் உட்கார்ந்து, சாப்பிட்டு வந்துட்டேன்..'' என்றார்.
___________________________________
நன்றி: முகநூலில் செந்தில் குமாரன்