பிறவி ஞானி அஷ்டவக்கிரர்

அஷ்டவக்ரர் பேருண்மையான சத்தியம் பற்றிப் பேசுகிறார் ,பேருண்மை அதனளவில் எப்படி இருக்கிறதோ, அப்படி அதைப் பற்றி பேசுகிறார்.

அவர் தன்னுடைய பார்வையாளர்களை ஒரு பொருட்டாக கருதவில்லை. பார்வையாளர்கள் தான் சொல்வதை புரிந்து கொள்கிறார்களா, இல்லையா என்பதைப் பற்றி அவர் அக்கறை காட்டுவதில்லை.

அந்த அளவுக்கு தெளிவாக அவர் பேசுவதை போல முன்பு எங்குமே கண்டதில்லை.இனியும் அது சாத்தியமில்லை.அஷ்டவக்கிராவைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியவில்லை. அவர் ஒரு சமூகவியலாளரல்ல. அரசியல்வாதியுமில்லை. அவரை பற்றிய வரலாற்று செய்திகளும் கிடைப்பதில்லை.ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே தெரிய வருகின்றன. அவை வியப்பைத் தருவதாக இருக்கின்றன. அவற்றை நம்பமுடியவில்லை. ஆனால் நீங்கள் அதைப் புரிந்து கொண்டால் ஆழமான அர்த்தங்களை காணலாம்.

முதலாவது அஷ்டவக்ரா பிறப்பதற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி.தாயின் வயிற்றில் கருவாக இருந்த போது நடந்தது. அவருடைய தந்தை மிக சிறந்த அறிவாளி.அவரின் தந்தை தினமும் வயிற்றில் இருக்கும் தன் குழந்தைக்காக வேதங்களை பாடுவார். அதை அஷ்டவக்ரா தன்னுடைய தாயின் வயிற்றிலிருந்து கவனித்தபடி இருந்தார். திடீரென ஒருநாள் தாயின் வயிற்றிலிருந்து குரல் கேட்டது.

“நிறுத்து! அர்த்தமில்லாதது!! வெறும் வார்த்தைகளில் ஞானம் எதுவும் இல்லை.வெறும் வார்த்தைகளின் குவியல்! திருமொழிகளில் அறிவுக்கு இடமில்லை. அறிவு என்பது ஒருவருக்குள்ளே இருக்கிறது. வார்த்தைகளில் ஏது பேருண்மை? பேருண்மை என்பது ஒருவரின் உள்ளேயே அடங்கியிருக்கிறது”.

இதைக்கேட்ட அவர் தந்தை கடும் கோபம் கொண்டார்.அஷ்டவக்கிராவின் தந்தை அறிவாளிகளிலேயே சிறந்தவர்.மிகச் சிறந்த பண்டிதர்.சிறந்த பேச்சாளர். திருமொழிகளில் மிகுந்த புலமை உடையவர். அறிவாளியின் ஆணவம் கண்ணை மறைத்தது. கோபத்தில் மகனை சபித்தார். “அவன் பிறந்தால் அவன் உடல் எட்டு இடத்தில் வளைந்திருக்கும். அஷ்டகோணலாக பிறப்பான்”
என சாபமிட்டார்.

அவன் பிறந்த பிறகு அவன் உடலில் எட்டு இடங்களில் முடம் ஏற்பட்டிருந்தது. அதனால் அஷ்டவக்கிரன் என்று பெயர் பெற்றான்.எட்டு இடங்களில் கோணல் இருந்ததால் கூன் விழுந்து விகாரமாக இருந்தான்.

அஷ்டவக்கிராவுக்கு 12 வயதானபோது அந்த நாட்டு அரசன் ஜனகன் மிகப்பெரிய விவாதத்தை ஏற்பாடு செய்திருந்தான். நாடு முழுவதுமிருந்து எல்லா பண்டிதர்களையும் அழைத்திருந்தான். அரசன் தன்னுடைய மாளிகையில் ஆயிரம் பசுக்களை அதன் கொம்புகளில் தங்கமும் வைரமும் வைத்து கட்டி வைத்திருந்தான். யார் போட்டியில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இவை பரிசு என அறிவித்திருந்தான்.

அது மிகப்பெரிய விவாத போட்டி. அஷ்டவக்கிரன் தந்தையும் பங்கு கொண்டிருந்தார்.மாலை நேரமாயும் போட்டி முடியவில்லை, அவரின் தந்தைக்கு தோல்வி நெருங்கி கொண்டிருந்தது. ஏற்கெனவே அவர் பலரை தோல்வி அடைய செய்திருந்தாலும் வந்தின் என்ற பண்டிதரிடம் அவர் தோல்வியடைந்து கொண்டிருந்தார்
இதை அறிந்த அஷ்டவக்கிரனின் தாய் தன் மகனை அழைத்து தந்தைக்கு உணவை கொடுத்துவிட்டு வா என அரசவைக்கு அனுப்பினார்.

அஷ்டவக்கிரன் அரண்மனைக்கு சென்றான். விவாத மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.விவாதம் கூட முழுமை பெற்று அரசரின் தீர்ப்புக்காக காத்திருக்கும் நேரம் அஷ்டவக்கிரன் அவைக்குள் பிரவேசித்தான். அங்கிருந்த பண்டிதர்கள் அவனைப் பார்த்தார்கள். அவனுடைய அஷ்டகோணாலான திருகலான உடம்பை பார்த்தவுடன் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். அவன் ஒவ்வொரு அடி வைக்கும்போது சிரிப்புச் சத்தம் கூடிக்கொண்டே போனது.அவை அறிஞர்கள் அனைவருமே சிரித்தனர்.அஷ்டவக்கிரன் புன்னகைத்தவாறே கூச்சலிட்டு சிரித்தான்.

சக்கிரவர்த்தி ஜனகர் ஆச்சரியமடைந்து கேட்டார், “குழந்தாய்! நீ ஏன் சிரிக்கிறாய்? இங்குள்ள அனைவருமே சிரித்தார்கள் அதன் காரணத்தை நான் புரிந்துகொண்டேன்.ஆனால் நீ சிரித்ததின் காரணம் எனக்கு புலப்படவில்லை”

அஷ்டவக்கிரன் சொன்னான், “ செருப்புத் தைக்கிற சாமர்கள் கூட்டத்தில் பேருண்மையான சத்தியத்தை விவாதிக்கிறார்களே என்றுதான். மனிதன் உண்மையிலே அபூர்வமானவன் தான்!

அவையிலுள்ளோர் கோபமுற்றனர்,அரசரும் கோபமடைந்தார். “என்ன சொல்கிறாய்”?
இவர்கள் என் தோலை மட்டுமே பார்த்து என்னை முடிவு செய்து விட்டனர்.இவர்கள் வெறும் தோலை மட்டுமே,வளைந்து திருகலான என்னுடைய ஊனத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆகவே இவர்கள் சாமர்கள். தோலைக் கொண்டே எதையும் தீர்மானிப்பவர்கள்.
அரசே! கோபுரம் வளைந்திருந்தால் வானமும் வளைந்திருக்குமா? பானை உடைந்துபோனால் காற்றும் உடைந்து போகுமா? வானத்தை மாற்றி அமைக்க முடியாது! எனது உடல் வளைந்திருக்கிறது நான் அப்படி இல்லை! நான் எனக்குள்ளேயே பார்க்கிறவன்.எனக்குள் உள்ள அவனைப் பார்க்க வேண்டும். அதைப்போன்ற நேர்மையான தூய்மையான ஒன்றை நீங்கள் பார்க்க முடியாது”.

இதை அவர் சொல்லி முடித்த பிறகு அவையே அமைதியாகிவிட்டது.ஜனகர் வியந்துவிட்டார்,அதிர்ச்சியடைந்து விட்டார்,கலக்கமுற்றார், வருத்தமடைந்தார், ஏனெனில் அவரும் சேர்ந்துதான் சிரித்தார்.அரசரால் எதுவும் பேசமுடியவில்லை.அப்படியே எழுந்து அவையை விட்டு சென்று விட்டார்.

அடுத்த நாள் நேராக அஷ்டவக்கிராவை காண சென்றார். அஷ்டவக்கிராவை கண்டவுடன் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கினார். முந்தைய நாள் அவையோர் முன்பு அப்படி செய்ய அவருக்கு துணிச்சல் வரவில்லை. ஏனெனில் அஷ்டாவக்கிரன் 12 வயது பாலகன். ஆனால் இப்போது அவனுடைய வயதை கவனிக்கவில்லை,குதிரையிலிருந்து இறங்கியதுமே அவரின் காலில் விழுந்தார்.தன்னை புனிதப்படுத்திக்கொண்டார்.

பின்னர் பணிவுடன் அஷ்டாவக்கிரரிடம் , “தயைகூர்ந்து என்னுடைய அரண்மனைக்கு வாருங்கள்! என்னுடைய சந்தேகங்களை தெளிவியுங்கள்!நான் உங்களை புரிந்துகொண்டேன். இரவு முழுவதும் தூக்கம் இல்லை,நீங்கள் மிகச் சரியாக அதை சொன்னீர்கள்.எவரெல்லாம் வெறும் உடலை மட்டுமே இனம் கண்டுகொண்டு இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் புரிதலின் ஆழத்தை எப்படி உணர முடியும்? அவர்கள் ஆன்மாவைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்,ஆனால் அவர்களுடைய கவனமும் நோக்கமும் உடலைப் பற்றியதாகவே இருக்கின்றன. விருப்பும்,வெறுப்பும் இன்னும் அவர்களிடமிருக்கின்றன. அவர்கள் மரணத்தை மட்டுமே கவனிக்கறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.மரணமில்லாத நிலை பற்றி விவாதிக்க அவர்களுக்கு தகுதியில்லை என்பதை உணர்ந்துகொண்டேன்.தாங்களே மரணமில்லாத நிலை பற்றிய என் சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடியவர். இப்போதே வாருங்கள்! என வேண்டினார் ஜனகர்.

அலங்கரிக்கப்பட்ட மாளிகையில் 12வயதே ஆன அஷ்டவக்கிராவுக்கு மிகச்சிறந்த வரவேற்பை ஜனகர் அளித்து தங்க சிம்மாசனத்தில் அமர்த்தி அரசர் அவரிடமிருந்து ஞானம் பெற்றார்.

அஷ்டவக்கிராவைப்பற்றி இதற்கு மேலும் நாம் எதையும் கேட்டதில்லை. மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமுமில்லை.இதுவே போதுமானது.வைரங்களை நூற்றுக்கணக்கில் வைத்துக் காணமுடியாது.கூழாங்கற்களையும், பாறைகளையும் சாதாரணமாகப் பார்க்கலாம்.

ஒரே ஒரு வைரம் மட்டும் போதும்.

OSHO
MAHA GEETHA

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (9-Aug-16, 7:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 291

மேலே