பெண் அகராதியில் ஆண்

பெண்மையும் ஆண்மையும் ஒன்றாய் கலந்ததால்
வண்ண நிலவாய் பூமியில் உதித்தேன்...
பிஞ்சிலே தோளில் சுமந்த தந்தையைத்தான்
வாழ்வின் முதல் நாயகனாய் மதித்தேன்......
ஆபத்தில் உதவும் கரமென்று காளைதனை
அழகான மணியாய் உறவில் கோர்த்தேன்...
விபத்தாய் அதுவே உருமாறி நின்றிட
கோபத்திர் வளர்ந்த நட்பினை உதிர்த்தேன்......
மலர்களின் வதனத்தில் அமிலம் தெளித்திடும்
பலரால் ஆண் இனத்தை வெறுத்தேன்...
கலவர நேரத்தில் காவல் காத்திடும்
காவலன் மனிதத்தில் என்சிறுமை குணமறுத்தேன்......
கன்னல் போன்று இனிக்கும் மனதையே
கன்னியின் நெஞ்சம் இங்கு தேடுது...
மின்னலென ஒளி பொருந்திய ஆடவனின்
தன்னலம் இல்லாத வீரத்தையும் நாடுது......
அறுசுவை உணவு சமைத்து பரிமாறியதும்
அருமையென்று பாராட்டும் குணம் கொண்டவரிலும்
விரும்பிய இதயத்தைத் தவிர மற்றவளை
திரும்பிப் பார்க்காதப் பண்பிலும் மயங்குது......
வெற்று குடமாய் பதிவந்துச் சேர்ந்தாலும்
பற்று கொண்டுதான் பாவையும் இருக்குது...
சொத்துப் பணம் என்பதனை வேண்டாது
சொன்னதை நிறைவேற்றும் நேசத்தையே வேண்டுது......
அங்கம் தழுவும் தங்கம் தேவையில்லை
உற்றவன் அன்பொன்று தழுவினாலேப் போதுமென்று
மங்கையின் மனமெனும் மாளிகை ஒன்றில்
கணவனைத் தெய்வமாய் நினைத்து வணங்குது......
உள்ளம் திறந்து வாய்மை பேசிடும்
கள்வனோடு வஞ்சி தரணியில் வாழும்...
பெண்மையில் தாய்மை காண்கின்ற ஆணைத்தான்
பெண்ணினம் இங்குப் போற்றிப் புகழும்......