கவிஞனுக்கு கவிதை
காஞ்சியில் பிறந்த முத்து இரத்தினமே
நெஞ்சம் நீங்காத கவிதைச் சித்திரமே
மஞ்சள் காமாலை வளர்ந்து முதிர்ந்ததால்
மஞ்சத்தில் ஆழ்ந்து உறங்கி விட்டாயே......
நதிகள் போடுகின்ற ஜதிகளுக்கு நீ
மதியில் பூத்த வரிகளைத் தந்தாய்...
விதியும் வரிகளில் மயங்கி விட்டதோ?...
சதிகள் செய்துன்னை அழைத்துக் கொண்டதே......
ஆனந்த யாழினைத் தங்கமீனில் மீட்டினாய்
மனதை வசியம் செய்ததே நின்மொழிகள்...
அழகே அழகேயென்று சைவத்தில் கொட்டினாய்
அழகாய் தெரிந்ததே இயற்கையின் முகங்கள்......
ஆசிகள் தந்த தமிழ் அன்னையால்
தேசிய விருதுகள் இரண்டுப் பெற்றாய்...
சிவாஜி கஜினி அயன் வெயிலுக்கு
சிறந்தப் பாடலாசிரியர் பெயரும் பெற்றாய்......
தென்றலாய் தவழ்ந்து வரும் கவிதையில்
தேன்துளியும் கொஞ்சம் சேர்த்துத் தூவினாயோ?...
இன்னும் என்ன கலந்து வைத்தாயோ?...
வென்றாய் மனிதர்களின் இதயத்தை நீ......
கண் இமைக்கும் அந்த நொடியில்
விண் இடிந்து விழுந்தச் செய்தி
இலக்கியப் பயணத்தில் சரித்திரம் படைத்து
வலம்வந்தக் கவிஞன் மூச்சு நின்றதென்று......
உன்விரல்கள் தொடாது எழுதுகோல் ஏங்குகிறது...
காகிதங்களும் கசங்கி இன்று அழுகிறது...
மலர் கோர்த்தப் பூச்சர மென்றுதான்
இறைவன் உன்னை அணிந்துக் கொண்டானே......
மலை ஊற்றாய்ப் பொங்கும் சிந்தனையில்
அலை கடலாய் வற்றாத எழுத்தை
கலையின் பணியில் நாளும் வித்திட்டாய்
நிலைத்து நிற்குமே வையத்திலுன் புகழ்......