உண்மைநிலை

அறிவும் சூழலும் நமது உண்மைநிலையை ஒத்து மேம்படுகிறது அல்லது மாறுபடுகிறது எனலாம்.

உண்மைநிலைதான் முழுவீரதிற்கு முதற்புள்ளி. உண்மையாக இருத்தல், உண்மையோடு வாழ்தலைவிட பெரியதொரு தர்மமில்லை. பெரியதொரு மகிழ்ச்சியோ கம்பீரமோ இல்லை. உண்மைநிலை என்பது நிர்வாண நிலைக்கு சமம். உண்மையாக இருப்பதொரு வரம். உண்மையாக இருப்பவர்க்கு வாழ்க்கை தோற்பதோ பயத்தினுடையப் பள்ளத்தில் தள்ளுவதோயெல்லாம் நிகழ்வதில்லை. உண்மையாக இருப்பவரின் ஆன்மபலம் பன்மடங்கு பெருகுவதற்கான சாத்தியக்கூறுகளும் தானாக வாழ்வின் அடுத்தடுத்தப் படிகளோடு சேர்ந்துக்கொள்வதை நாமே தானாகப் பின்னாளில் உணரமுடியும்.என்றாலும்; மானசீகமாய் உண்மை பிறழாமல் உள்ளது உள்ளபடியாக நடந்துக்கொள்வதென்பது அவரவர் பிறப்பிலிருந்தும் வருகிறது. வளர்கையில் தனது வாழ்பனுபவத்தின் மூலமும் உடன்வந்து ஒட்டி அது ஒருபக்கம் பெருத்த ஞானமாக வளர்கிறது. ஞானமெனில் எது? நடுநிலைத் தன்மை இனிக்குமிடம் ஞானம் சிறக்குமிடமாகும். உன்னை நானிழுத்துத் தள்ளுவதும் என்னை நீயிழுத்துத் தள்ளுவதும் நடைமுறையில் இருந்துக்கொண்டிருக்க, உன்னை நானும் என்னை நீயும் ஒருவர்மீது ஒருவர் பற்றில்லாவிட்டாலும் மன்னித்து மனிதத்தோடு ஒருவர் ஒருவரைக் காத்துக்கொள்வதே நடுநிலை தன்மையாகும்.

மனதின், எண்ணத்தின், அறிவின் நடுநிலைப் புரிதலிலிருந்துதான் சமச்சீர் நிலை வாழ்வாதாரத்தோடு ஒட்டிவருகிறது. அதன் சுவை தாயன்பில் இனிக்கும் மேன்மைக்குச் சமம். ஒரு தாயால் மட்டுமே தனது இருவேறு பிள்ளைகளையும் ஒன்றாகக் கருதி வளர்க்க இயலுமெனில், இருவேறு துருவங்களை சமபங்கில் மன்னித்து ஏற்று வளர்த்து வாஞ்சையோடு மனிதர் மனிதரை ஒட்டுமொத்தமாக அணைத்துக்கொள்ளவும் இந்த நடுநிலைத் தன்மையெனும் தெளிவு அதிமுக்கிய தாய்மை இடத்தைப் பெறுகிறது.ஆக, நடுநிலை எனும் சமசீராகப் பார்த்தலும், கடைநிலை எனும் எதிலும் தொடர்பற்ற நிர்வாணத்தை மனதால் உணர்தலும் உண்மையாய் இருப்பதால் மட்டுமே நிகழ்கிறது. உண்மையாக இருத்தல் என்பது எதுவாக உள்ளோமோ அதுவாக வாழ்வது. உள்ளே இனிப்பாகத்தான் இருப்போம், தவறு செய்யக்கூடாது என்றுதான் எண்ணுவோம், அனைவரின் மீதும் கருணைக்கொண்டே நடப்போம், ஆனாலும் தக்க சூழலில் மாறிவிடுவோம். தன்னையே அறியாமல் கோபம் வரும். தனக்கே பிடிக்காமல் அழை வரும். பசியே இல்லாவிட்டாலும் சாப்பிட ஆசை யூறும். இப்படி நமக்கே பிடிக்காமல் நம்மை மாற்றுவது எது? அதுதான் நாம் நாமாக இல்லாத நிலை. அதாவது நமது உண்மையான உணர்விலிருந்துத் தள்ளி வேறு ஏதோ ஒரு போலி வேடத்தில் புரிதலில் ஆசையில் உண்மை புரியாத உணர்வுதனில் உழன்றுக் கிடக்கும் நிலை
----------------------------------------------------------------------------------------------------------------------------------
என் கோரிக்கை உலகத்தை நோக்கியல்ல என் உறவுகளே; உங்களை நோக்கி.

கொட்டும் முரசு கொட்டட்டும்;
பெய்யும் வானம் பெய்யட்டும்;
பூக்கும் மலர்கள் பூக்கட்டும்;
சிரிக்கும் உதட்டோர ஏளனம் கடந்து –
அழும் விழியோர ஈரம் கடந்து –
விடியும் ஏதேனும் ஒரு காலை பொழுது
எனை போன்றோருக்காகவும் விடியட்டும் உறவுகளே!!

படியுங்கள். படித்துவிட்டு எழுதுங்கள். காத்திருக்கிறேன்
வித்யாசாகர்

எழுதியவர் : (20-Aug-16, 1:04 pm)
பார்வை : 104

மேலே