இனிப்பான பொய்கள்

நீ சொல்லுவாய்
சில நேரம் பொய்கள்
என்னை பயமுறுத்த
அமைதி படுத்த

உன்னை தவிட்டுக்கு
வாங்கினேன் என்று
அழ வைப்பாய்

மிச்சம் வைக்கும் சாதத்திற்கு
இப்படி செய்தால்
கடவுள் உன் கடைசி
காலத்தில் பட்டினி போடுவார் என்பாய்
பூசண்டியிடம் பிடித்து கொடுத்து விடுவேன் என்று பயங்காட்டி உன் பேச்சை கேட்க வைப்பாய்

மரத்தில் முனி இருக்கிறது என்று
விளையாட போகாதே என்று சொல்வாய்
விழுந்து விட கூடாது என்பதற்கு
இப்படி ஒரு பொய்

உன்னோடு தூங்க வேண்டும் என்று
நாய் ஊளை இட்டால்
பேய் வருகிறது என்று
பயப்பட வைப்பாய்

இலந்தை பழ கொட்டை
விழுங்கினேன் என்றால்
ஐயோ மரம் முளைக்கும் என்பாய்

நீ எத்தனை பொய் சொன்னாலும்
அத்தனையும் மெய் தானடி

உன்னை தவிர இத்தனை பொய்கள்
அழகாக யாரால் சொல்ல முடியும்

நீ நான் வளர்ந்து விட்டாய் என்று
நிறுத்தி கொண்டாய்

ஆனால் இன்னும் தொடர்கிறது
உன் பேத்தி
உன்னை போல் ...

சொல்கிறாள் பொய்
கனவில் சூப்பர் மென் வந்தான் என்று

நட்சத்திரத்தில் வீடு கட்டினேன் என்று

இத்தனை இனிப்பான பொய்கள்
ஒரு சுகம் தான் அம்மா





எழுதியவர் : தமிழ் கோமதி (27-Jun-11, 7:58 pm)
சேர்த்தது : sarah geneema
பார்வை : 459

மேலே