தழும்புகள்

இன்னக்கும் விடிஞ்சிருச்சு
இத்த வரை போயிருச்சு
இல்லாத என் பொறுப்பு
இழுக்குக்கு வந்திருச்சு

கூட்டி வச்ச குப்பையோட
கூட நின்ன பிச்சக்காரி
கூட்டிப்பிடிச்சு -அவ மகளை
ஊட்டி விட்ட கதை,நான்-
தட்டி விட்டு வந்த சொல்ல
வலிக்கும் வரை உறுத்துதெனக்கு

கடற்கரைக்கு நாம வந்தா
கீறி வச்ச பொட்டிக்குள்ள
கட்டம் தொட்டு ஆடயில
கால்ல ஒரு முள் குத்தும்

நெருஞ்சி முள்ளு விசமென்னு
நெருங்கி நீ ஓடி வந்து
மடி மேல கால வச்சி
அப்ப நீ புடுங்கி விட்ட
விஷ முள்ளு வலிக்குதா னு
விரலால நீவி விட்ட
மண்ணளவு புண்ணுக்குள்ள
மணலேதும் போகாம
மெல்ல மெல்ல தட்டி விட்ட

கொஞ்சமா கசிஞ்ச ரெத்தம்
கொள்ளையா வர முதலே
புண்ணு மேல வாய் வச்சி
பக்குவமா உறிஞ்சி விட்ட

திண்ணையில தட்டு வச்சி
வண்ணமா சோறு வச்சா
தின்னையில சிந்துவன் னு
எண்ணி எண்ணி புடி புடிச்சி
ஒவ்வொண்ணா ஊட்டி விட்ட

கபில பறட்டை முடி
கறுக்கும் வரை எண்ணெ வச்ச
காவி பட்ட சட்டை
வெளுக்கும் வரை நீ துவைச்ச

வேருத்து நான் வந்தா
வத்தும் வரை பொறுத்திருந்து
வெந்நீர நீ வச்சு
வெறுந்தண்ணி கலந்து என்ன
வடிவா குளிக்க வச்ச

இத்தனையும் நீ செஞ்ச
இன்னமும் நீ செஞ்ச

பள்ளி பாடம் புரியல னு
படிக்காம இருந்த என்ன
கண்டிப்போட தண்டிச்ச

பட்டினம் போய் நான் உளைப்பன்
பத்து காசு நான் சேப்பன்
பசிச்சா நானே தின்பன்
பட்டம் எதுக்கெனக்கு
படிப்பு எதுக்கெனக்கு
எனக்கடிக்க நீ ஆரு
எனக்கிப்ப பதினாறு னு
எகத்தாளமா வசனம் பேசி
எட்டு வச்சி நான் வந்தன்
ஒன்னு விட்ட சித்தப்பன் கடைக்கு

வேல எல்லாம் செஞ்சாலும்
வேளைக்கு சாப்பாடில்ல
ஓட்டு பிங்கான் கழுவய்க்க
ஓரமா இருந்த வெடிப்பு
ஒரு இஞ்ச்சு கீறிரிச்சு
ஒரு நாயும் கண்டுக்கல

சட்ட கழுவி நாளாச்சு
சடை சீவி நாளாச்சு
சனிக்கிழமை வந்தா மட்டும்
சத்த நேரம் சாஞ்சிக்கிரன்

சாமிய பழி சொல்லி
சத்தியமா பயனில்ல
சித்தப்பன குறை சொல்லி
எனக்கொன்னும் ஆனதில்லை

உத்துணர்ந்து பார்க்கய்க்க
தப்பெல்லாம் என் பக்கம்
உள்ளதெல்லாம் சொல்லிட்டு
ஊருக்கு வாறேன் மா

எதிரத்து பேசினன்னு
ஒதுக்கி வச்சிராத
உட்டுட்டு போனன்னு
ஊட்டாம விட்றாத
ஓங்கி அறஞ்சாச்சும்
ஒன்னோட சேர்த்துக்கோ
ஏங்கி அழுதாலும்
என்ன அணச்சிக்கோ...

இப்படிக்கு
உன் பிள்ளையோட
ஆறாத காயங்கள்...!

எழுதியவர் : ச.மு.இன்ஸிமாமுல் ஹக் (29-Aug-16, 3:24 pm)
Tanglish : THALUMBUGAL
பார்வை : 1514

மேலே