பெண்கள் காலடியில் ஆண்கள்

நானும், என் மனைவியும் சென்ற 15.08.2016 ல் என் இளைய மகன் குடும்பத்துடன் சென்னை சென்று வேளச்சேரியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது 25.08.2016 அன்று ஆவடி vel tech பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர் விடுதியில் உள்ள என் பேரனைப் பார்க்கச் செல்வதற்காக SRP tools பஸ் நிறுத்தம் சென்றேன். நானும், என் மகனும் திருவான்மியூர் ரயில் நிலையம் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.

என் மகன் ஓட்டுநருடன் முன் இருக்கையில் அமர்ந்தார். நான் ஓட்டுநர்க்குப் பின்னால் உள்ள கீழ் இருக்கையில் அமர்ந்தேன். மேல் இருக்கையில் (IT நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நினைக்கிறேன்) இள வயதுப் பெண்கள் இருவர் அமர்ந்திருந்தனர். அவர்கள் பக்கம் திரும்பி சிரித்தபடி அவர்களிடம் சொன்னேன்.

’பெண்கள் காலடியில்
ஆண்கள்..
ஷேர் ஆட்டோ’

என்றேன்.

அவர்கள் கூச்சத்துடன் புன்னகைத்தபடி ‘ஐயா! மேலே வாருங்கள்’ என்று சொல்லி நகர்ந்து அமர்ந்தனர்.

நான் பதிலுக்கு, ’சகோதரிகளே! நன்றி. பயணத்தில் சிறிது தூரமென்றாலும், நகைச்சுவைக்காக அப்படிச் சொன்னேன்’ என்றேன். அடுத்த நிறுத்தத்தில் விடைபெற்று இறங்கிச் சென்றனர்.

திருவான்மியூரிலிருந்து மின்சார ரயிலில் பூங்கா நகர் – சென்ட்ரல் – ஆவடி சென்று திருவான்மியூர் திரும்பி வர இருவழி பயணக் கட்டணம் ஒருவர்க்கு ரூபாய் 20 மட்டும். ஆனால், முதல் வகுப்பில் சென்று வர ஒருவர்க்கு ரூபாய் 280/. நாங்கள் இருவரும் சாதாரணக் கட்டணத்திலேயே சென்று வந்தோம். கூட்டமும் அவ்வளவாக இல்லை.

எல்லாவிதமான தின்பண்டங்கள் விற்பனை செய்பவர்களும், பலவித குறைபாடுகளுடன் பிச்சை எடுப்பவர்களும் அதிகம். ஒரு இள வயதுப் பையன் சோளப்பொறி மட்டும் இடுப்பளவு உள்ள பாலிதீன் பையில் விற்பனை செய்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன்.

திரும்பி வந்து கந்தன்சாவடி என்ற இடத்தில் சரவண பவன் ஓட்டலில் ஒரு காபி அருந்தினோம். ஒரு காபியின் விலை ரூபாய் 29 மட்டும். பட்டணத்துப் பகல் கொள்ளை. கொள்ளையர்களைத் தேடி காட்டிற்குச் செல்ல வேண்டியதில்லை; உணவு வியாபாரம் செய்யும் ஓட்டல்களில் காணலாம்.

இரு விகற்ப நேரிசை வெண்பா

கொள்ளையரைத் தேடியே காட்டிற்குச் செல்லவேண்டாம்;
அள்ளுவர் நோட்டைத்தான் ஆரவார – சள்ளையின்றி
ஓட்டல்கள் என்ற பெயரில் உணவகங்கள்
தேட்டமுடன் வைத்துள்ள வர்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Sep-16, 10:25 pm)
பார்வை : 140

மேலே