சண்டையிடுகையில்

முதுகும் முதுகும் உரசிக்கொள்கிறது
ஆளுக்கொருபக்கம் பார்த்தபடி.
சண்டையிட்டு முட்டிமோதியாச்சு
சரிக்கட்டுவது இனி சாத்தியமில்லை.

எனினும் அந்த இருவருக்குள் ஜீவன்களான
இரண்டு குழந்தைகள் நேருக்கு நேர் வெறித்தபடி
எதற்கு சண்டையிட்டோம், வீண் ஜம்பம் தானே
என்று எள்ளி நகையாடுகின்றன.

வயதுடன் வருவது வளர்ச்சியல்ல முதிர்ச்சி
செருக்கு முடியுடன் தலை தான் கனமாகும்
விளைந்த நகத்துடன் கீறல் ரணமாகும்
எந்த வயதிலும் வாழ்க்கைப்பாடம் அவசியம்

சின்னச்சின்ன விஷயங்களை பூதாகரமாக்கி
பூப்போன்ற மனமெல்லாம் புதைகுழியானால்
அழுத்தமும் அதனால் எரிச்சலும் ஒரு சேர வதையாகும்
தெளியுங்கள் நீங்களாகவே விடுபடுங்கள் வீண் ஐம்பத்திலிருந்து.

குழந்தை தானே வளரும்பொழுது குறும்பை சகித்தோம்
மனிதனாக உருவெடுக்கையில் மகத்துவம் வரவேண்டியதுதான்
மாறாக மாட்சி இங்கே மாண்பை கொடுக்காமல் வீம்பை கொடுப்பது
காலத்தின் கோலமா, செருக்கு கொண்ட மனித மனமா?

அடம் பிடிக்க இன்னும் நீ குழந்தையல்ல
என்று நீங்கள் அதனிடம் சொல்லுங்கள்.
மனத்தால் தானே இங்கு எல்லாமே
மனமிருந்தால் தானே மார்க்கம் உண்டு,

மனம் மாறுங்கள் மனங்களை மாற்றுங்கள்
குழந்தை மனிதனாகலாம், மனிதனும் தெய்வமாகலாம்.!

எழுதியவர் : செல்வமணி (1-Sep-16, 9:19 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 133

மேலே