எப்போது நான் கவிஞனாவேன்

இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை
முப்பொழுதும் மறையாத முகஸ்துதி மானுடங்களில்
தப்பிப் போனவைகளைத் தேடிக்கொண்டு
துப்பிய எச்சிலாய் துவண்டு கிடக்கிறேன்
எப்போது நான் கவிஞனாவேன்?

முக்குளித்து எழுகையில் மறைந்து போகும் நதி நீரிலும்
வக்கிரம் பிடித்த வாரிசு சாதிகளை
தக்கவைத்து நாளும் தடுமாறிப் போகையில்
எக்குலத்திலும் தேடுவேன் என்பிறப்பெனும் சுயநலக்காரனாய்
எப்போது நான் கவிஞனாவேன்

பரிசுகள் கொட்டிய பரிசல்களில்
பாத யாத்திரை செய்தன
என் கவிதைக் கனாக்கள்....
நிரப்பிய மை வெள்ளம் தீர்ந்த பின்னும்
இன்னும் எழுதவில்லை
கவிதையென்ற ஒன்றை என் பேனா....
நான்-
மலைகளில் முடவனாகவும்
மழைகளில் மூப்பனாகவும்
நடக்கிறேன்.
எப்போது நான் கவிஞனாவேன்.

எழுதியவர் : சுசீந்திரன். (3-Sep-16, 8:05 pm)
பார்வை : 51

மேலே