மகளதிகாரம்

================
காற்றடைக்கப்படாத பலூனை
ஊதித்தரும்படி பரபரக்கும்
உன் அவசர நிமிசமொன்றில்
மூச்சுமுட்ட ஊதும்போது
பெரிதாகிக்கொண்டே வந்துவிடும்
உன் மகிழ்ச்சி .

ஊசிக் குத்தும் தாதியிடத்து
நீங்க நல்ல அக்கா இல்ல ..
நான் உங்களுக்கு மிட்டாய் தாரேன்
ஊசிக்குத்தாதீங்க என்றக் கெஞ்சியும்
குத்திய தடுப்பூசியில்
வலிமட்டும் எனக்கு.

மருந்தகம் சென்று திரும்பும் வழியில்
குளிர்பானம் வாங்கிக் கொடுக்கவில்லை என்று
நீ வைக்கும் முறைபாடுகளை ஏந்திக்கொண்டு
உன் அம்மாவை விசாரணை செய்து முடித்துத்
தீர்ப்பெழுதுகையில் தீர்ந்துபோகின்ற
உன் பொய்க்கோபத்தில் தாகசாந்தி கொள்கிறேன்

விளையாட்டுப் பொம்மையின் முதுகில்
செல்லமாய்த் தட்டித் துயிலவைக்கும்
சமயங்களில் எல்லாம் உனக்கு அது
தலையணையாகி விடுகின்ற நகைச்சுவைகளை
பரிசளிக்கும் என்பதை நீயும் உன்
பொம்மையும் அறிவதேயில்லை.

மெத்தையிட்டு துயிலவைத்தாலும்
தரையில் உருண்டுவரும் உனது
நித்திரை நிமிசங்களில் நீ
கடவுளோடு பேசக்கேட்டு மகிழ்கிறேன்

பூவை சிறைக்குள் தள்ளிவிடுவதாகத்தான்
தோன்றுகிறது கொசுக்களுக்குப் பயந்து
வலைகூடையுள் உன்னை மூடிவைக்கையில்

மேலதிகாரி எதைக்கேட்டாலும்
உடனுக்குடன் எடுத்துக் கொடுத்து
நல்லபேர் வாங்கும் எனக்கு நீ
மிட்டாய் சுற்றப்பட்ட காகிதத்தை
நீக்கி கொடுப்பதற்குள்
போதும் போதும் என்றாகிவிடுகிறது .

கல்கண்டைக் காக்கைகடிக் கடித்துத்
தருவதாகச் சொல்லிவிட்டு
கடித்ததும் பேச்சுமாறும் உன் மழலை
நீ வளர்ந்தபின்னும் இனிக்கிறது

திடீரென்று ஒருநாள்
உன் அம்மாவின் சேலையைக்
கட்டிக்கொண்டு எதிரில் வந்து
என் அம்மாவை உயிர்ப்பித்து விட்டாய்.

தாரை தாரையாய் வடியும் கண்ணீரை
வார்த்துக் கொடுப்பதனால்தான்
தாரை வார்த்துக் கொடுத்தல் என்னும்
சம்பிரதாயத்தை திருமணத்தில்
வைத்தார்கள் என்ற உண்மையை
உன்னால் கண்டேன் என் மகளே..

என்றாலும் கண்ணீரைப்போல்
வற்றிவிடுவதல்ல நமது பந்தம்
நீண்ட கங்கைக்கும் நிறைந்தக்
கடலுக்குமான
நிரந்தர சொந்தம் அது.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (7-Sep-16, 2:19 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 130

மேலே