மகளதிகாரம் 3 மகள் என்பது

மலைமகள் மௌனப் பனிமனம் கசிய
நதிமகள் தோன்றி வளர்ந்தாள் நடந்தாள்;
நதிமகள் நயந்து தழுவிடத் தழுவிட
நிலமகள் பூத்துச் சிரித்தாள் சிலிர்த்தாள்;
கடல்மகளோ சந்திரச் சூரியரை
எழுப்பாட்டிக் குளிப்பாட்டி அனுப்பும் கன்னி;
நிலாமகளோ ஒரு நித்தியக் கனவு
நீங்காத காதலின் தீராத கவிதை;
வான்மகள் சேலையில் தாரகைப் பூக்கள்
வைகறை அவளது தெய்வீக ராகம்
அந்தி அவளது பொன்னான நேரம்
வையம் அவளின் சிறகிடை குஞ்சு;
இயற்கை அன்னையோ மகளாய் இருக்கிறாள்
மகள் என்றுமே அன்னையாய்ப் பிறக்கிறாள்
மகள் என்பது,
சீதைக்குக் கிட்டாத வரம்
யசோதை செய்யாத தவம்
அடிநெஞ்சில் உயிர் பாடும் சந்தம்
ஜென்மங்கள் தொடர்கின்ற பந்தம்
***