தினமணி கவிதைமணி தந்த தலைப்பு

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !




என் ஓட்டம் என் இலக்கு ! கவிஞர் இரா .இரவி !







கவிதை எழுதியபோது என்னைப் பார்த்து

கேலி பேசினார்கள் சில நண்பர்கள் !




கேலிக்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தியிருந்தால்

காணாமல் போய் இருப்பேன் நான் !




சில நண்பர்கள் பாராட்டும் சொன்னார்கள்

சிந்தையில் இரண்டையும் ஏற்றவில்லை !





மகாகவி ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை உள்ள

மாபெரும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன் !




நுழைவாயிலில் இருக்கும் பாரதிசிலை தினமும் பார்த்தேன்

நுழைந்தது என் சிந்தை முழுவதும் பாரதி ஆளுமை







தமிழ் மீதான பற்றும் என்னுள் பற்றி வளர்ந்தது

தன்னம்பிக்கையுடன் கவிதைகள் எழுதி வந்தேன் !




பிரபல இதழ்கள் முதலில் பிரசுரம் செய்யவில்லை
பிரபலமானதும் நேர்முகம் பிரசுரம் செய்தன !


சிற்றிதழ்களே என்னை அன்றும் இன்றும்
சிகரம் ஏற்றி மகிழ்ந்து வருகின்றன !




மதுரைமணி நாளிதழில்தான் எந்தன்

முதல் கவிதை அச்சில் ஏறியது !




அச்சில் கவிதையைக் கண்டு மகிழ்ந்தேன்

அடுக்கடுக்காக கவிதைகள் பிரசுரமாகின !




இளவல் அரிகரன் தொகுத்த தொகுப்பு நூலில்

என் கவிதைகளும் இடம் பெற்றன !



குமுதம் வாரம் இதழ் தொகுப்பு நூலில் இருந்த என்
கவிதையை பு(து)த்தகம் பகுதில் பிரசுரம் செய்தது !




பிரசுரமானவற்றை தொகுத்து வந்தேன்

பின் கவிதைச்ச்சாரல் முதல் நூல் வந்தது !




ஒரு ஆயிரம் நூல்கள் சென்று அடைய

ஒரு வருடங்களுக்கு மேல் ஆனது !




படைப்பு பலரை விரைவாக சென்றடைய

பல வழிகள் சிந்தித்தபோது இணையம் உதயம் !




கவிமலர் இணையத்தில் கவிதைகள் பதித்தேன்

கடல் கடந்த அயல் நாட்டவரும் வாசகர் ஆனார்கள் !




தமிழ் ஆதர்ஸ் ,பிரதிலிபி ,லங்காசிறி உள்பட
தமிழ் முன்னணி இணையங்கள் பிரசுரம் செய்தன !




எந்த வெளிநாடும் நான் சென்றதில்லை ஆனால்

எனக்கு எல்லா வெளிநாட்டிலும் வாசகர் உண்டு !




இங்கிலாந்து ஜெர்மனி சிங்கப்பூர் மலேசியா

எல்லா நாட்டிலும் நண்பர்கள் கிடைத்தார்கள் !




கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த

கவியரங்க வாய்ப்பால் கவிதைகள் குவிந்தன !




மூத்த எழுத்தாளர் திருச்சி சந்தரின் ஊக்கத்தால்

மனம் நூல் மதிப்புரை எழுதிட வைத்தது !




வெள்ளமாக ஓடிக்கொண்டு இருந்த என்னை

விவேக நதியாய் மாற்றினார் தமிழ்த்தேனீ இரா .மோகன் !




வானதி பதிப்பகத்திற்கு அறிமுகம் செய்து என் நூல்கள்

வெளிவர பிரசவம் பார்த்த மருத்துவர் தமிழ்த்தேனீ இரா .மோகன் !




முது முனைவர் வெ. இறையன்பு அவர்கள்

முழுமனதுடன் அணிந்துரைகள் தந்து மகிழ்வித்தார்கள் !




மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்தபோது

மனம் திறந்து பாராட்டி உத்வேகம் தந்தார்கள் !





கவிஞர் மு .முருகேசு தந்திட்ட ஊக்கத்தால்

கவனம் ஹைக்கூ எழுதுவதில் லயித்தது !




பட்டம் படிக்க நான் கல்லூரி சென்றதில்லை

பி .காம் . அஞ்சல் வழியிலேயே பயின்றேன் !




பல்கலைக் கழகங்களில் பாடமானது என் ஹைக்கூ

பல கல்லூரிகளில் பாடமானது என் ஹைக்கூ !




என் மகன் பிரபாகரனுக்கு மனபாடப் பகுதியானது

இனிய தியாகராசர் கல்லூரியில் என் ஹைக்கூ பத்து !




கவிஞாயிறு தாரா பாரதி விருது கிடைத்தது

கவிதை உறவு ஏர்வாடியாரின் விக்ரமன் விருது வந்தது !




கவிமுகில் நடத்திய ஈரோடு தமிழன்பன் எண்பது விழாவில்

கவிமலருக்காக விருது செல்லப்பனார் வழங்கினார் !




சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான விருதை

சிங்கார புதுவை துணைநிலை ஆளுநர் வழங்கினார் !





அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம்

அன்போடு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது !





விளையாட்டாக தொடங்கிய நூல் எழுதும் பணி

விவேகமாகி பதினைந்து நூல்கள் வெளி வந்து விட்டன !





என் ஓட்டம் என் இலக்கு ஓடிக் கொண்டே இருக்கிறேன்

என் இலக்கு அடையும் நாள் தூரத்தில் இல்லை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (7-Sep-16, 11:23 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 153

மேலே