கண்ணீரில் கரைந்த நட்பு
கண்ணீரில் கரைந்த நட்பு
தாயின்றி தவித்தவளுக்கு தாய்மடி நீயும் தந்தாயடி
தந்தையை இழந்து நின்றவளுக்கு தோள் கொடுக்கும்
தோழியாய் நீயும் நின்றாயடி
தவமின்றி என் வாழ்வில் நீயும் கிடைத்தாயடி
எனை தாங்கும் வரமாய் நீயும் இருந்தாயடி....
துவண்டு போய் கிடந்தவளை அன்பு எனும்
அஸ்திரத்தால் தலை நிமிர்ந்து நிற்கவே செய்தாயடி
வலிகள் நிறைந்த என் வாழ்க்கையிலே
என் வழிகள் மறந்தே நானும் நிற்கையிலே
புது பாதை எனக்காய் அமைத்தே கொடுத்தாயடி...
கவலைகளால் என் கண்ணீர் கரைகையிலே
அள்ளி அணைத்தே என் விழி வெள்ளத்திற்கு
அணையாய் நீயே நின்றாயடி
திசை மாறிய என் வாழ்க்கை பக்கங்களுக்கே
திசையமைத்தே நீயும் தந்தாயடி....
அனைத்தையும் என் ஒருத்திக்காய் இழந்தாயடி
இறுதியில் என் வாழ்க்கை செழிப்புறவே
உன் காதலை நீயும் தியாகம் செய்தாயடி
உன் இதயம் எனக்களித்தே விண்ணகம்
நீயே சென்றாயடி....
இரத்த பந்தமற்ற என் ஒருத்திக்காய்
உன் உதிரம் நீயே கொடுத்தாயடி
இனியொரு ஜென்மம் நான் பிறந்தால்
எனக்கொரு மகளாய் நீயும் பிறந்திட வேண்டுமடி
உனை சுமந்திடும் தாயாகவே
நானும் மாறிட வேண்டுமடி.....
உதயசகி
யாழ்ப்பாணம்