நினைவே நிலைத்திரு

நிலைத்திருக்கும் நினைவுகளில் நிழலாடும் கனவுகளே !
கலையாத கனவுகளில் காலத்தின் நித்தியங்கள் .
விலைகொடுக்க முடியாத விந்தையான நினைவலைகள் .
மலைமலையாய்த் தெரிகிறது மாசற்றக் காதலுள்ளம் .


நினைவுகளின் வாழ்க்கையிலே நிசமாகும் காதல்மனம் .
மனையாளாய் இருந்தநாளே மனத்தினிலே நிலைத்திருக்கும் .
எனைமட்டும் நேசித்த என்னவனின் அன்புள்ளம் .
வினையாகக் கட்டுப்பட்டு விளையாட்டாய்ப் பற்றிக்கொண்டேன் .


அந்தநாளின் நினைவெல்லாம் அப்படியே பிம்பமாக
இந்தநாளில் கண்முன்னே இனிமையாகத் தெரிகிறது .
எந்தநாளும் அந்நினைவு எனைவிட்டுப் போகாது .
பந்தத்தின் பண்புமிகு பக்குவத்தின் நன்னாளாம் .


பாசமிகு இல்லறத்தின் பாவையுமே நானன்றோ ?
நேசமிகு என்னவனின் நேர்மையினை என்சொல்வேன் !
வாசமிகு காதலன்றோ வண்ணமிகு வாழ்வன்றோ ?
மாசிலா மங்கைநானே ! மாறிடுமோ நினைவுகளே !


வயதாகிப் போனாலும் வாலிபமே உள்ளத்திலே
பயமின்றி நானும்தான் பார்க்கின்றேன் பாரினையே .
வியப்புடனே நோக்காதீர் விடிவெள்ளி நானேன்பேன் .
முயற்சிதனை மேற்கொண்டே முடிந்தவரை வாழ்ந்திருப்பேன் .


காதலுக்கு அழிவில்லை காதலுக்கு அகவையில்லை
சாதலுக்கு மாற்றாக சாற்றுகின்றேன் காதலினை
மோதல்கள் காதலுக்குள் மோகமுள்ளாய் நின்றுவிடும் .
காதலுள்ளம் என்றனுள்ளம் காலமெல்லாம் நினைவுகளே !

பாவாக்கம் :-
பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி , தமிழ்நாடு , இந்தியா .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Sep-16, 5:04 pm)
பார்வை : 202

மேலே