நலம்_தரும்_திருப்பதிகம் திருக்கொள்ளம்பூதூர்

-
சம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க திருக்கொள்ளம்புதூர் வரும் போது காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் ஆலயத்திற்குச் செல்ல ஓடக்காரன் ஒருவரும் காணப்படவில்லை. அடியார்கள் திகைத்து அக்கரை செல்வது எப்படி என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
-
அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர் என்று தொடங்கும் பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும் அவர்தம் அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டார் என்கிறது பதிக திருகுறிப்பு.
-
#கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே. (01)
-
நல்லமணம் கமழும் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலத்தில் திருநடனமாடும் இறைவனைத் தியானிப்பதால், இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. எம் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்குமுரிய சிவபெருமானே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வணங்க அருள்புரிவாயாக.
--- --- --- --- --- --- --- ---
-
#கோட்டகக் கழனிக் கொள்ளம்பூதூர்
நாட்டு அகத்து உறை நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே. (02)
-
நீர் நிலைகளும், வயல்களும் கொண்டு விளங்கும் திருக்கொள்ளம்பூதூர் என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற நம்பனைத் தியானிக்க, இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
--- --- --- --- --- --- --- ---
-
#குலையினார் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர்
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்குமாறு அருள் நம்பனே. (03)
-
குலைகளோடு கூடிய தென்னை மரங்கள் சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில், விலை கொடுத்து வாங்கிய பொருளைப் போன்ற அருமையுடன் என்னை ஆட்கொண்ட விகிர்தனாகிய உன்னைத் தியானிக்க இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
--- --- --- --- --- --- --- ---
-
#குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர்த்
தவள நீறணி தலைவனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே. (04)
-
பெண்களின் கண்களைப் போன்று குவளை மலர்கள் மலர்ந்துள்ள திருக்கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கின்ற திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள். புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
--- --- --- --- --- --- --- ---
-
#கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர்
நின்ற புன்சடை நிமலனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே. (05)
-
கொன்றை மரமானது பொன்னிறப் பூக்களை உதிர்க்கின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ள நிமலனைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடக்கத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
--- --- --- --- --- --- --- ---
-
#ஓடம் வந்தணையும் கொள்ளம்பூதூர்
ஆடல் பேணிய அடிகளை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே. (06)
-
திருநடனம் செய்யும் தலைவனான சிவபெருமானைத் தியானிக்க ஓடமானது திருக்கொள்ளம்பூதூர் என்னும் தலத்தினை அடையும்படி ஆற்றைக் கடக்கத் தானாகவே தள்ளப் படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
--- --- --- --- --- --- --- ---
-
#ஆறு வந்தணையும் கொள்ளம்பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே. (07)
-
ஆறு வந்தடைகின்ற திருக்கொள்ளம்பூதூரில் இடபம் தாங்கிய இறைவனைத் தியானிக்க ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
--- --- --- --- --- --- --- ---
-
#குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர்
அரக்கனைச் செற்ற ஆதியை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே. 08
-
குரங்குக் கூட்டங்கள் மரங்களில் ஆடிக் குதிப்பதால் உண்டாகும் ஒலி நிறைந்த திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்றவனும், இராவணனை மலையின் கீழ் நெருக்கியவனுமான ஆதி முதல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
--- --- --- --- --- --- --- ---
-
#பருவரால் உகளும் கொள்ளம்பூதூர்
இருவர் காண்பரியான் கழல் உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே. (09)
-
பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவனாய் நின்ற சிவபெருமானின் திருவடிகளைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
--- --- --- --- --- --- --- ---
-
#நீர் அகக் கழனிக் கொள்ளம்பூதூர்த்
தேரமண் செற்ற செல்வனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே. (10)
-
நீர்வளம் மிக்க வயல்களையுடைய திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ளவனாய், புத்தர்களும், சமணர் களும் பகைத்துப் பேசும் செல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியார்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
--- --- --- --- --- --- --- ---
-
#கொன்றை சேர்சடையான் கொள்ளம்பூதூர்
நன்று காழியுள் ஞானசம்பந்தன்
இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார் போய்
என்றும் வானவரோடு இருப்பாரே. (11)
-
கொன்றை மலர்களை அணிந்த சடைமுடியுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கொள்ளம்பூதூரில் நற்புக ழுடைய காழியில் வசிக்கும் ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப் பாமாலையால் இறைவனைப் போற்ற வல்லவர்கள் எப்பொழுதும் தேவர்களோடு கூடி மகிழ்வர்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (18-Sep-16, 9:46 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 109

சிறந்த கட்டுரைகள்

மேலே