வெடிக்கிறது செல்போன் சிதறுகிறது உறவுகள்

பேசத் தெரியாத குழந்தையும் செல்போனை காதில் வைத்து ‘போஸ்’ கொடுக்கிறது.

ஸ்மார்ட்போனை விளையாட கொடுத்தால்தான் பள்ளிக் குழந்தைகள் வீட்டுப்பாடம் எழுதுகின்றன.

டீன்ஏஜ் பெண்களின் போர்வைக்குள் ரகசியமாக செல்போன் ‘லைட்’ மின்னி மின்னி மறைகின்றன.

குடும்ப பட்ஜெட்டில் செல்போன் ரீசார்ஜ்– இன்டர்நெட் பில் கணிசமான தொகையை விழுங்குகிறது.

இவையெல்லாம் நாம் ஸ்மார்ட்போன் அடிமை களாக மாறிவிட்டதன் அடையாளங்கள்.

காலையில் எழுந்ததும் வாட்ஸ்அப்பில் வணக்கம் சொல்வதையும், இரவில் கண்கள் சொருகும்வரை செல்போனை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதையும் பலரும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதில் சிறியவர், பெரியவர் என்ற பேதம் இல்லை. ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏராளமான பிரச்சினைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. குற்றங்கள் அதிகரிக்கின்றன. உறவுகள் பந்தாடப்படுகின்றன.

இது பற்றிய ஆய்வு முடிவுகள் ஒவ்வொன்றும் அதிர வைக்கின்றன!

87 சதவீதம் இளைஞர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களை எப்போதும் கையில் வைத்திருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். 80 சதவீதம் பேர், 15 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது ஸ்மார்ட்போனில் நுழைந்து அழைப்பு மற்றும் மெசேஜ் வந்திருக்கிறதா? என சோதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

12 சதவீதம் உறவு முறிவுகளுக்கு காரணம் செல்போன் தொடர்புகள்தான்.

27 முதல் 34 சதவீத விபத்துகளுக்கு முக்கிய காரணம் செல்போன்களே. விபத்து உருவாகும் சூழ்நிலைகளை அதிகப்படுத்துவதும் செல்போன் பயன்பாடுதான்.

ஐந்தில் 2 இளைஞர்கள் அதாவது 40 சதவீத இளைஞர்கள் ‘செக்ஸ்’ தொடர்பான விஷயங்களுக்காகவே செல்போன்களை பயன்படுத்துகிறார்கள்.

80 சதவீத அமெரிக்கர்கள் போனை அருகில் வைத்துக் கொண்டுதான் தூங்குகிறார்கள். இவர்கள் விலை உயர்ந்த போன்களுக்கு அடிக்கடி மாறுவதை கவுரவமாக நினைக்கிறார்கள்.

ஸ்மார்ட்போன் மயக்கத்தில் இருந்து விடுபட..

* வேறுவேலை பார்க்கும்போதாவது ஸ்மார்ட்போனை சுவிட்ச் ஆப் செய்யுங்கள். ஆன் செய்து, கைக்கு எட்டும் தூரத்தில் வைத்திருந்தால் கூட செல்போன் பூதம் உங்களை கவர்ந்து இழுத்து, உங்கள் வேலைக்கு இடைஞ்சலாகிவிடும்.

* சமைப்பது, படிப்பது, ஓவியம் தீட்டுவது, இசைப்பது, பாட்டுப்பாடுவது போன்ற கலைகளில் ஈடுபட்டு, செல்போன் பயன்பாட்டு நேரத்தை குறையுங்கள்.

* விளையாட்டு, உடற்பயிற்சி, அரட்டையடித்தல் என போனை தாண்டிய விஷயங்களில் பொழுதை கழியுங்கள். நல்ல பொழுதுபோக்குகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்.

* மெயில் பார்த்தல், வலைத்தளங்களில் நண்பர்களுடன் உறவாடுதல் போன்றவற்றுக்கு குறைந்த அளவே நேரம் ஒதுக்குங்கள். மற்ற நேரங்களில் போனை தொடாதீர்கள்.

* பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைத்தளங்களிலும், கேண்டிகிரஸ், டெம்பிள் ரன் போன்ற விளையாட்டுகளிலும் அடிமையாகி சிக்கித்தவிப்பவர்கள் கொஞ்சமும் வருத்தப்படாமல் இப்படி நேரம் குடிக்கும் அப்ளிகேசன்களை ‘அன்இன்ஸ்டால்’ செய்துவிடலாம். இது உங்களுக்கு பல்வேறு விதங்களில் நன்மை பயக்கும்.

அதிர்ச்சி தரும் பாதிப்புகள்!

ஸ்மார்ட்போன் பயன்பாடு மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு ‘நோமோபோபியா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஸ்மார்ட்போன் அதிக பயன்பாட்டால் ஏற்படும் தொல்லைகள்:

புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம்வராது. இந்த பாதிப்பின் பெயர் ‘இன்சோம்னியா’.

திடீர்திடீரென்று கவலைகள் உருவாகி மனதை அழுத்தும். அந்த பாதிப்புக்கு ‘டெக் அனாக்சிட்டி’ என்று பெயர். விருப்பமானவரிடம் இருந்து போன் அல்லது மெசேஜ் வரவில்லையே என்பதிலிருந்து, அழைப்பு செய்தும் அவர் ஏற்கவில்லையே, என்னாச்சோ? என ஏங்குவது வரை எண்ணற்ற கவலைகளை இந்த போன்கள் உருவாக்குகின்றன.

இந்தக் கவலைகளால் பல்வேறு உடல் மற்றும் மன நல பாதிப்புகள் உருவாகும்.

கண் எரிச்சல், கண் அழற்சி, கண் பொங்குதல் போன்ற தொந்தரவுகள் தோன்றும். மணிக்கட்டு மற்றும் தோள்பட்டையில் வலி உண்டாகும்.

அதிகமாக பேசுவதாலும், எழுத்து உரையாடல்களாலும் எண்ணங்கள் அலைமோதல் அதிகமாகும், மனஅமைதி குலையும். சகிப்புத்தன்மை குறையும். உறவு முறிவுகள் உருவாகும்.

வலைத்தளங்களில் ஏற்படும் கருத்துப் பகிர்வால் எதிர்பார்ப்புகளும், கருத்து மோதல் களும் கூடும். இதனால் மன உளைச்சலும், மனக்கசப்பும் அதிகமாகும். நட்பு முறிவு–பகை உண்டாகும்.

பண்பு நலன்களில் மாற்றங்கள் ஏற்படும். தனிமை விரும்பி களாகவும், தடம்புரண்ட பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகலாம். குற்றச் செயல்களில் ஈடுபடும் எண்ணமும் தூண்டப்படலாம்.

அதிக பணமும், பொன்னான நேரமும் வீணாக கரையும்.



நீங்கள் எப்படி?

கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதிலளித்து நீங்களும் செல்போன்களுக்கு அடிமையாகிவிட்டீர்களா? இல்லையா? என்பதை கண்டறிந்துவிடலாம்!

1. செய்யும் வேலைக்கு இடையே அடிக்கடி செல்போனை எடுத்து மெசேஜ், மெயில், வாட்ஸ்அப் வந்திருக்கிறதா என பார்க்கிறீர்களா?

2. காலையில் எழுந்ததும் நீங்கள் தொடும் முதல் பொருள் செல்போனாக இருக்கிறதா?

3. போனை பயன்படுத்திக் கொண்டு சென்றதால் வாகனங்களை தவறவிட்டிருக்கிறீர்களா?

4. அடிக்கடி செல்பி/ போட்டோ எடுக்கிறீர்களா? அதை வலைத்தளத்தில் போட முடியவில்லை என வருந்துகிறீர்களா?

5. நான் பேசுறது காதில் விழுதா? இல்லையா? என்று பெற்றோரிடம் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?

6. போனை வீட்டில் மறந்துவைத்துவிட்டால் பர பரப்பு தொற்றிக்கொள்கிறதா?

7. புதிதாக வந்த ஸ்மார்ட்போன் மாடல் உங்களிடம் இல்லையே என ஏங்குவீர்களா?

8. செல்போன்கள் பையில் இருப்பதைவிட கை களில்தான் அதிக நேரம் இருக்கிறதா?

9 கழிவறைக்கும் ஸ்மார்ட்போனை கொண்டு செல்கிறீர்களா? அங்கே தவறி விழுந்திருக் கிறதா?

10. ஒன்றுக்கும் மேற்பட்ட பேட்டரிகளை பயன் படுத்துகிறீர்களா?

11. மெசேஜ் வந்ததை அறிந்தால் அதை திறந்து பார்க்காமல் வேறு வேலை செய்ய முடியவில்லையா?

12. ஸ்மார்ட்போனை ஆன் செய்து வைத்திருந்தால்தான் தூக்கம் வருகிறதா?

* மேற்கண்ட கேள்விகளில் பெரும்பாலானவற்றுக்கு ‘ஆம்’ என்பது பதிலாக இருந்தால், நீங்கள் நிச்சயம் ஸ்மார்ட்போன் அடிமைதான். உங்கள் பழக்க வழக்கங்களை மாற்ற முயற்சி செய்யுங்கள். தேவைப்பட்டால் மனநல ஆலோசகரின் உதவியை நாடுங்கள்.

* பெரும்பாலான கேள்விகளுக்கு இல்லையென்பது பதிலாக இருந்தால், ‘அப்பாடா தப்பித்தோம்’ என்று நீங்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுக்கொள்ளலாம்.

* பாதி கேள்விகளுக்கு ‘ஆம்’ என்றும், மீதி கேள்விகளுக்கு இல்லை என்றும் பதில் வந்தால், நீங்கள் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறீர்கள். செல்போன் வலைக்குள் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

‘தனிமையில் இருக்கும்போது உங்களால் எவ்வளவு நேரம் செல்போனை நோண்டாமல் இருக்க முடியும்?’

– ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பலரும் 2 நிமிடம், 3 நிமிடம் என பதிலளித்தனர். ஆனால் அவர்களை, அறையில் தனிமையில் அமர வைத்து செல்போனையும் கொடுத்து சோதித்தார்கள்? ஆராய்ச்சி முடிவு ஆச்சரியம் தந்தது. ஆண்களால் சராசரியாக 21 விநாடிகள் மட்டுமே போனைத் தொடாமல் இருக்க முடிந்தது. பெண்கள் 57 நொடிகள் வரை போனைத் தொடாமல் பொழுதை கழித்தனர். ஆக, சராசரியாக 44 விநாடிகளுக்கு மட்டுமே நம்மால் போன் இன்றி அமைதியாக இருக்க முடிகிறது. இல்லாவிட்டால் எதையோ இழந்ததுபோன்று பரிதவித்துப்போய்விடுகிறோம்.

– பயணங்களின்போதும் செல்போன்கள் மனிதர்களை விடுவதில்லை. 95 சதவீதம் பேர் தாங்கள் பயணத்தில் செல்போனை பயன்படுத்துவதை ஒப்புக் கொண்டுள்ளனர். 50 சதவீத பயண நேரத்தை இணையத்தில் நுழைந்தும், வலைத்தளத்தில் அரட்டை அடித்தும் கழிப்பதாக கூறி உள்ளனர்.

– முன்பெல்லாம் ஷாப்பிங் சென்றுவருவது சுற்றுலா போல இல்லத்தரசிகளுக்கு இன்பம் தரும். இப்போது இருந்த இடத்திலேயே ஆன்லைன் ஷாப்பிங் செய்து விடுகிறார்கள். இந்தியர்களின் ஆன்லைன் ஷாப்பிங், இரண்டு ஆண்டுகளில் ஒருமடங்கு, இரண்டு மடங்கு அல்ல, 11 மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

– இவ்வளவு ஏன் தூக்கத்தைக்கூட செல்போன்களும், இணையமும் ஆக்கிரமித்துவிட்டன. தூங்குவதற்கு கூட தனி இணையதளம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

‘இன்டர்நெட் பெட்ரூம்’ என்ற அமைப்பு, வாடிக்கையாளர்களை இணையதளத்தில் தூங்க அனுமதிக்கிறது. வேறொன்றுமில்லை வெப் கேமராவை ஆன்செய்து வைத்துவிட்டு, தூங்க வேண்டியதுதான் வேலை. தனி அறைகளை ஏற்படுத்தி நிறைய பேரை தூங்கவிட்டு கண்காட்சி நடத்தி சாதனை படைத்திருக்கிறது இந்த அமைப்பு. வீட்டில் இருந்தபடியும் தூங்கி வழிந்து போட்டியில் கலந்து கொண்டார்கள் மக்கள்.

நாம் இணையத்திற்கு அடிமையாகிவிட்டோம் என்பதை பயன்படுத்தி இதுபோன்ற புதுமையை செய்கிறார்கள் அவ்வளவுதான்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (18-Sep-16, 2:07 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 741

சிறந்த கட்டுரைகள்

மேலே