சொல்லா காதல்
"இன்று தான் கல்லூரியில் மாணவர்களாக நீங்கள் இருக்கும் கடைசி நாள்;நாளை முதல் நீங்கள் அனைவரும் மாணவர்கள் கிடையாது; பொறுப்பான பட்டதாரிகள், எனவே நீங்கள் எடுக்கும் முடிவுகள் தீர்க்கமாக ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டும்" என் கல்லூரி பேராசியர் உருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால் என் எண்ணம் முழுவதும் கவிதாவிடம் என் காதலை கூறுவதை பற்றி தான் இருந்தது.
கவிதா தெருவில் நடக்கும் தேவதை.அவளின் அழகு அனைத்து பெண்களின் மனதிலும் பொறாமையை ஏற்படுத்தும்.கல்லூரியில் சேர்ந்த தினத்திலிருந்தே அளவில்லா பிரியம் அவள் மீது.
மூன்று ஆண்டுகளாக அவளிடம் என் காதலை கூற நினைக்கிறேன்.முடியவில்லை.
அருகில் செல்லும் போது அவளின் கூந்தல் வாசம் என் வாயை முடிச்சு போடுகிறது. பேசுவதற்கு வார்த்தைகள் பிறக்க மறுக்கின்றன.
ஒரு நாள் கடிதத்தில் என் காதலை சித்திரமாக்கி அவளிடம் கொடுத்தேன்.பிரித்து படிக்க தொடங்கிய நேரத்தில் அவளின் தோழிகள் கடிதத்தை சேதப்படுத்தி விட்டனர்.
எதேச்சையாக அவள் என்னை பார்க்கும் பொழுது என் மனதிற்குள் சந்தோஷம் பட்டாசு போல வெடிக்கிறது.
மௌனம் காத்து கண்களால் பேசும் போது கூட்டத்தில் தொலைந்த குழந்தையின் நிலையை அடைகிறேன்.
எப்போதாவது அவளின் மென் தீண்டல் கிடைக்கும் பொழுது ஊக்க மருந்து உண்டதைப் போல சுறு சுறுப்பாகிறேன்.
அவளின் குழந்தை தனமான சண்டைகளை காணும் போது நானும் குழந்தையாகிறேன்.
இன்றாவது அவளிடம் காதலை கூற வேண்டும்.