ஒரு அவசர கல்யாணம்
ஒரு அவசர கல்யாணம்
அதிகாலை மணி நான்கு.நான் துணிப்பையில் சில துணிமணிகளை திணித்துக் கொண்டிருந்தேன்.சுவற்றில் மாட்டியிருந்த என் குடும்ப புகைப்படத்தை கழற்றினேன்.ஒருமுறை ஏக்கத்தோடு அதை தடவிப் பார்த்தேன்.அப்புகைப்படத்தையும் துணிப்பையில் வைத்தேன்.
மெல்ல சத்தமில்லாமல் அம்மா அப்பாவின் படுக்கையறை கதவைத் திறந்தேன்.அப்பா குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.அம்மாவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
இன்று நான் செய்யப்போகும் இந்த காரியத்திற்கு பிறகு அம்மா இனி எப்பொழுதுமே என்னிடம் பேசாமல் கூட போகலாம்.அம்மாவுக்கு இந்த காதலில் சிறிதும் விருப்பம் இல்லை.அவர் தன் பாசமலர் அண்ணனை தனக்கு சப்பந்தியாக்கிவிட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.
நானும் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைக்க பார்த்தேன்.அப்பா ஒத்துக்கொள்வார் போல தெரிந்தது.ஆனால் அம்மா "இனி இந்த வீட்டுல காதல் கீதல்னு எதாவது பேச்சு வந்துச்சி நடக்கிறதே வேற" என்று முடிவாக சொல்லி விட்டார்.
"இனியும் என்னால காத்திருக்க முடியாது.வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான் " என்று சிவா சொல்லி விட்டான்.
"வீட்டுக்கு தெரியாமலா.அம்மாவுக்கு தெரிஞ்சா கொன்னு போட்டுருவாங்க" என்றேன். "பின்ன என்ன பண்ண சொல்லற" என்றான்.
"இருந்தாலும் அம்மா அப்பாவுக்கு தெரியாம..." இழுத்தேன். "அவங்கள விடு.உனக்கு இதுல சம்மதமா இல்லையா அதை முதல்ல சொல்லு" என்றான் சிவா.
முதலில் அவன் எடுத்த இந்த முடிவிற்கு நான் சம்மதிக்கவே இல்லை.ஒரு வாரமாக வற்புறுத்தினான்.
திருமணத்திற்கு பிறகு எப்படியாவது அம்மா அப்பாவுக்கு சொல்லி புரிய வைத்து கொள்ளலாம் என்றான்.ஒரு வழியாக அரை மனதோடு சம்மதித்தேன்.
சேலையை உடுத்திக் கொண்டேன்.கையில் துணிப்பையை எடுத்துக் கொண்டேன்.மெல்ல சத்தமில்லாமல் வீட்டின் பின் கதவை நோக்கி நடக்க முற்படுவதற்குள் என் கைத்தொலைபேசி அலறியது.சிவாதான் அழைத்தான். எரிச்சலோடு சட்டென கைத்தொலைபேசியை அடைத்தேன்.
அப்படி என்னதான் அவசரமோ அவனுக்கு.கைத்தொலைபேசி சத்தம் கேட்டு அம்மாவோ அப்பவோ விழித்துக் கொண்டால் என் கதை கந்தல்தான்.
வீட்டின் பின் வாசல் கதவை திறந்தேன்.இதயம் படக் படக்கென அடித்து கொண்டது.உடல் லேசாய் வியர்த்திருந்தது.
இதுநாள்வரை பெற்றோரின் பேச்சை மீறாத நான் இன்று முதல் முறையாக அவர்களுக்கு தெரியாமல் ஒரு காரியத்தை செய்யப் போகிறேன்.அதனாலேயே உள்ளுக்குள் ஒரு பயம் நடுக்கம்.
வீட்டின் பின் புறத்தில் ஒரு குட்டிச் சுவர்.அங்கே கதவு கிடையாது.சுவரை எகிறி குதித்துதான் வெளியேற முடியும்.வீட்டின் முன் வாசல் வழியாக செல்லலாம்.ஆனால் வாசலில் அம்மாவின் விசுவாமிக்க செல்ல நாயை கட்டி வைத்திருப்பார்கள்.
அந்த நாய் என்னை பார்த்ததும் பேய் குறை குறைத்து அம்மாவையும் அப்பாவையும் தூக்கத்திலிருந்து விழிக்க வைத்து என்னை காட்டிக் கொடுத்தாலும் கொடுத்துவிடும்.
சுவரின் மீது ஏறி சாலையை எட்டிப் பார்த்தேன்.ஆட்கள் யாருமில்லை.எங்கோ சற்று தூரத்தில் நாய்கள் குரைத்துக் கொண்டிருக்கும் சத்தமும் வண்டுகளின் ரீங்கார சத்தமும் மட்டும் கேட்டன.
சுவற்றில் ஏறி எகிறி குதித்தேன்.அம்மா அப்பாவுக்கு தெரியாமல் இப்படி திருட்டுதனமாய் சுவரை எகிறி குதித்து செல்வேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.யாரும் பார்ப்பதற்குள் வேகமாக நடந்து தெருமுனைக்கு சென்றேன்.
தெருமுனையில் சிவாவின் தோழிகள் இருவர் காரில் எனக்காக காத்துக் கொண்டிருந்தனர்.எல்லாம் சிவாவின் ஏற்பாடுதான்.
காரில் ஏறினேன்.சிவாவின் தோழிகள் இருவரும் என்னை பார்த்து புன்முறுவல் செய்தனர்.அந்த இருவரும் எனக்கு நன்கு பழக்கமானவர்கள்.ஒருத்தியின் பெயர் கீதா இன்னொருத்தி மாலா.
எனக்கு லேசாக முச்சு வாங்கியது.பயத்தினால் என்று நினைக்கிறேன்.
"எல்லாம் ரெடியா" என்று கேட்டேன்."சிவாவும் மத்த ப்ரண்ஸ்சும் கோயில்ல ரெடியா இருக்காங்க.உங்களுக்காகதான் வெய்ட்டிங்" என்றாள் கீதா.
"உங்களுக்கு இந்த சேலை ரொம்ப அழகா இருக்கு அருந்ததி " என்றாள் காரை ஓட்டியபடியே மாலா.
கோயிலை அடைந்தோம். சிவாவும் மற்ற நண்பர்களும் கோயில் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்.
காரிலிருந்து இறங்கிய எனக்கு திடீரென உள்ளுக்குள் ஒரு உறுத்தல் பாசமாய் வளர்த்த அப்பா அம்மாவுக்கு தெரியாமல் இப்படி ஒரு கல்யாணம் அவசியம் தானா.பேசாமல் இப்படியே திரும்பி வீட்டிற்கு போய் விடலாமா என்று தோன்றியது.
வேட்டி சட்டை உடுத்தி என்னை நோக்கி வேகமாய் நடந்து வந்து கொண்டிருந்த சிவாவின் முகத்தை பார்த்த ஒரு நொடியில் அந்த எண்ணம் அப்படியே மறைந்து போனது.
இதை எல்லாம் அவனுக்காக தானே செய்கிறேன்.அவனுக்காக நான் எதையும் செய்வேன்.அவ்வளவு நல்லவன் அவன்.நான் என்றால் அவனுக்கு உயிர்.அவனை புரிந்து கொள்ள என்னால் மட்டுமே முடியும்.
என்னை கண்டதும் சிவாவின் முகத்தில் ஒரு மகிழ்ச்சி ஒரு நிம்மதி.
"அதுக்குள்ள என்ன அவசரம் எதுக்காக போன் பண்ண.சத்தம் கேட்டு அம்மா அப்பா யாராவது முழிச்சிக்கிட்டு இருந்தா என்ன ஆயிருக்கும் " அவனை கடிந்தேன்.
"ஒருவேளை அப்பா அம்மாவுக்கு பயந்து வராம போயிடுவியோன்னு ஒரு பயம்தான்.அதான் போன் பண்ணேன்" என்றான்.
"நீ என் மேல வச்சிருக்குற நம்பிக்கை இவ்ளோதானா "
"அப்படியில்ல நீதான் அம்மா பிள்ளையாச்சே....அதான்....
"ஆமா நான் அம்மா பிள்ளைதான்.பின்ன உன்ன மாதிரியா...
"சரி சரி சண்டை வேண்டாம். முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு. உனக்காகத்தான் எல்லாரும் காத்துக்கிட்டு இருந்தோம். வா " என்றான்.
எளிமையாக அழகாக அலங்கரிக்கப்பட்ட மணவறைக்கு அருகே கையில் இரண்டு மாலைகளோடு சிவாவின் நண்பன் நின்று கொண்டிருந்தான்.
சிவாவை மணவறையில் அமர வைத்து ஐயர் தமிழில் மந்திரங்களை ஓதினார்.இந்த அவசர கல்யாணத்திலும் தமிழில் மந்திரம் ஓதும் ஐயர் தான் வேண்டும் என்று பிடிவாதமாய் எப்படியோ சிரமபட்டு ஏற்பாடு செய்திருந்தான் சிவா.
"பொண்ணை அழைச்சுகிட்டு வாங்க" என்றார் ஐயர்.பதற்றத்தில் எதோ யோசனையில் நின்று கொண்டிருந்தேன் நான்.சிவா என்னை நிமிர்ந்து பார்த்தான்.
"என்ன அருந்ததியக்கா நிற்குற நீதான தோழி பொண்ணு போய் பொண்ணை அழைச்சுகிட்டு வா" என்றான் சிவா.
மணப்பெண் அறைக்கு சென்றேன்.அங்கே மணப்பெண் கயல்விழி இன்னும் சிறிது நேரத்தில் என் தம்பி சிவாவின் மனைவியாகப் போகிறவள் அழகான சேலையில் தேவதை போல இருந்தாள்.
மகாலட்சுமியை போல இவ்வளவு அழகான பெண்ணை போய் தன் மருமகளாக எற்றுக் கொள்ள அம்மா சம்மதிக்கவில்லையே.
எவ்வளவு பிடிவாதம் அம்மாவுக்கு.
"வந்துட்டீங்களா எங்கே வராம போயிடுவீங்களோனு சிவா தவிச்சுகிட்டு இருந்தாரு" என்றாள்.
பூச்செண்டை அவள் கைகளில் கொடுத்தேன்.மெல்ல அவள் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை மணவறையை நோக்கி தள்ளிக்கொண்டு சென்றேன்.
ஆம் அவளால் நடக்க இயலாது.பிறந்த பொழுதே இரண்டு கால்களும் ஊனமாய் தான் பிறந்தாளாம் சிவா சொன்னான்.அவளுக்கு அம்மா அப்பா கிடையாது.ஆதரவற்ற இல்லத்தில்தான் வளர்ந்தாளாம்.
அவள் என் தம்பி சிவா வேலை செய்யும் அலுவலகத்தில்தான் வேலை செய்கிறாள்.உடல் ஊனமாய் இருந்தாலும் தன் முயற்சியால் படித்து பட்டம் வாங்கி இன்று நல்ல நிலையில் இருக்கும் கயல்விழி மீது சிவாவுக்கு காதல்.கயல்விழிக்கும் சிவா என்றால் உயிர்.
காதல் விசயத்தை வீட்டில் சொன்னான்.அம்மா ருத்ர தாண்டவமே ஆடி விட்டார்.
"இவரு பெரிய தியாகி ஊனமான பொண்ணை கட்டிக்கப் போறானாம்.நீ என் அண்ணன் பொண்ணைத்தான் கட்டிக்கணும் நான் முடிவு பண்ணிட்டேன்.அந்த பொண்ணை மறந்துடு" என்று கண்டிப்பாய் சொல்லி விட்டார் அம்மா.
சிவாவும் அம்மாவை சம்மதிக்க வைக்க எவ்வளவோ மன்றாடி பார்த்தான்.நானும் அம்மாவிடம் பலமுறை பேசி பார்த்தேன்.அம்மா அசையவில்லை.தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றார்.
என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்த பொழுதுதான் அம்மா அவசரமாக தன் அண்ணன் மகளை சிவாவுக்கு பேசி முடித்தார்.சிவாவின் சம்மதம் இல்லாமலேயே அம்மா இதையெல்லாம் செய்தார்.
வேறு வழியில்லாமல் சிவா அம்மா அப்பாவுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்தான்.சிவாவுக்கு என் மீது பாசம் அதிகம்.எதையும் என்னிடம் சொல்லாமல் செய்ய மாட்டான். கயல்விழியை காதலிப்பதையே என்னிடம் தானே முதலில் சொன்னான்.
அவனுடைய முடிவை என்னிடம் சொல்லிய பொழுது நான் முடியவே முடியாது என்றேன்."அப்போ என்னை என்னதான் செய்ய சொல்ற கயல்விழிய என்னால மறக்க முடியாது" என்றான்.
உடனே என்னால் எதையும் சொல்ல முடியவில்லை.ஒரு வாரமாக நன்கு யோசித்தேன். அதன் பிறகு அவனை என் அலுவலகத்திற்கு வரச் சொல்லி தனியாக பேசினேன்.
"நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்" என்றேன்.
"என்ன" என்றான் சிவா.
"நீ கயல்விழி மேல வச்சிருக்கறது காதலா இல்ல பரிதாபமா.உண்மைய சொல்லு"
"நிச்சயமா பரிதாபம் இல்ல"
"அவளை வாழ்க முழுக்க உன்னால நல்லா பாத்துக்க முடியும்னு நினைக்கிறியா.நான் ஏன் சொல்றன அவளுக்கு ரெண்டு காலும் ... ஒரு வயசு வேகத்துல நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு பின்னாடி நீ....."
அவனுக்கு புரிந்தது.
"அவளுக்கு அப்படி ஒரு குறை இருக்கறதா நான் என்னைக்குமே நினைச்சதில்ல.என் வாழ்க்கையே அவதான்.நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்" என்ற அவனுடைய அந்த வார்த்தைகளில் ஒரு உண்மையான உறுதியான காதலை என்னால் உணர முடிந்தது.
எவ்வளவு நல்ல மனம் அவனுக்கு.அவனுக்காக அவனுடைய அந்த புனிதமான காதலுக்காக எதையும் செய்யலாம் என்று தோன்றியது.
அவனுடைய முடிவுக்கு சம்மதித்தேன்.அவனுடைய திருமண ஏற்பாடுகளை அவன் நண்பர்களோடு சேர்ந்து அம்மா அப்பாவுக்கு தெரியாமல் ரகசியமாக செய்தேன்.
சிவா கயல்விழியின் கழுத்தில் தாலியை கட்டினான்.நான் பெருமூச்சை இழுத்து விட்டேன்.எப்படியோ கடவுளின்
ஆசிர்வாதத்தாலும் நண்பர்களின் உதவியாலும் நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தது.
சம்பிரதாய முறைப்படி திருமணம் முடிந்தப்பின் காலை பத்து மணியளவில் சிவாவும் கயல்விழியும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள்.சிவாவுக்கு பதிவு திருமணத்தில் சாட்சி கையெழுத்து நான்தான் போட்டேன்.
அப்பாவும் அம்மாவும் இந்நேரம் வீட்டில் என்னை காணாமல் பதறி போயிருப்பார்கள்.நிச்சயம் என் கைத்தொலைபேசிக்கு அழைத்து பார்த்திருப்பார்கள்.எல்லாம் தெரிந்துதான் கைத்தொலைபேசியை அடைத்து வைத்திருந்தேன்.
சிவா பினாங்கில் தங்கி வேலை செய்வதால் அவனுடைய சில துணிமணிகள் மட்டுமே வீட்டில் இருந்தன. அவற்றைத்தான் துணிப்பையில் போட்டு கொண்டு வந்திருந்தேன்.
"இந்தா பிடி' என்று சிவாவிடம் துணிப்பையை கொடுத்தேன்."என்ன இது " என்று கேட்டான்.
"உன்னோட துணியும் நம்ம குடும்ப படமும்"
"குடும்ப படமா"
"ம்...எப்படி இருந்தாலும் அம்மா இனிமே உன்னை வீட்டுல சேர்க்கவும் மட்டாங்க.பேசவும் மட்டாங்க.அதான் அவங்க ஞாபகம் வந்தா இந்த போட்டோவ பார்த்துக்கோ" என்றேன் சிரித்துகொண்டே .
சிவா கண் கலங்கினான்."எனக்கு மட்டும் இந்த மாதிரி அம்மா அப்பா விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசையா என்ன.எல்லாம் என் தலை விதி" என்றான்.
"அதை நினைச்சு கவலைப்படாதே.இப்போதைக்கு கயல்விழியோட சந்தோசமா வாழ போற வாழ்க்கையை பத்தி மட்டும்தான் நீ யோசிக்கணும்"
"அம்மாவும் அப்பாவும் என்னை மன்னிப்பாங்களா"
"அப்பாவை சமாளிச்சுடலாம்.அம்மாதான் ரொம்ப கஷ்டம்.சொல்லி மெல்ல புரியவைக்க பார்க்குறேன்.ஆனா இன்னிக்கு வீட்டுக்கு போனவொன்ன என் கதி என்னாகுமோ தெரியல " என்றேன்.
எல்லாம் முடிந்தபின் பேருந்தில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டேன்.அப்பாவை பற்றி கவலையில்லை எப்படியேனும் சமாதானப்படுத்தி விடுவேன்.அம்மாவை பற்றி நினைக்கவே பயமாக இருந்தது.
இன்று அம்மா என்னை எப்படியெலாம் திட்ட போகிறாரோ.இப்படி ஒரு காரியம் செய்ததற்காக அம்மா என்னை பளார் பளார் என்று என் கன்னம் பழுக்க அரை விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இப்படி மனதில் பல பயத்தோடு பேருந்தில் அமர்ந்து கிடந்தேன்.இவ்வளவு பயத்துக்கும் நடுவில் மனதில் ஒரு பெரும் திருப்தி மகிழ்ச்சி. சிவாவுக்கு அவன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து வைத்து விட்டதில் வந்த மகிழ்ச்சிதான் அது.
இனி என்ன நடந்தாலும் கவலையில்லை.எப்படியாவது சமாளிக்க வேண்டியதுதான் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி என் வீட்டை நோக்கி நடந்தேன்.
*******************
# நண்பர்களே உங்களின் கருத்துக்களை பெரிதும் எதிர்பார்க்கிறேன்.நன்றி