காதலை தேடி-20

காதலை(லே) தேடி-20
மௌனமென்னும் சிறையில் அடைத்து
என்னை சிதைக்க வேண்டாம்
என் காதல் இதயமே.........
நீ இல்லாது போனால்
நான் இங்கே நில்லாது போவேன்
இதை அறிந்துகொள்ளாமல்
என்னை விட்டு பிரிந்து செல்லாதே
என் வாழ்வின் உதயமே.......
கலங்குகிறேன் நான்
கலங்கடிப்பவளாக புன்னகைத்து செல்கிறாய்......
உறங்கவில்லை நான்
என் உறக்கம் கலைத்ததை நினையாது
வெண்ணிலவாய் என் மெத்தைக்குள் உறைகிறாய்....
எத்தனை நாளுக்கு இந்த
காதல் யுத்தமோ???
உன் முத்தம் ஒன்றே போதும்
முற்றுப்புள்ளி வைக்க......இதை
அறியாமலே என்னை தள்ளி வைக்கிறாய்!!!!
பெருமூச்சொன்றில் நாட்களை
கடந்து வருகிறேன்
என்னை கடத்தி சென்றவளின்
மூச்சுக்காற்றை யாசித்து...
இதற்க்கு மேலும் பொறுக்க முடியாது, பொறுமையை இழந்தவனாக மேலே சென்று பார்த்தால் கதவை பூட்டிக்கொண்டு சத்தமில்லாமல் உள்ளே இருக்கிறாள் என் சகி...
"சகி, கதவை திறக்க போறயா இல்லையா? என்னமா இது, எதுக்கு இவ்ளோ கோவம்? நான் அடிச்சது தப்பு தான், எதோ ஒரு மனநிலையில அடிச்சிட்டேன்....இனி இப்படி ஒரு தவற எப்பவும் செய்ய மாட்டேன், கதவை திறடா....சகி இப்போ நீ கதவை திறக்கல நான் உன்கிட்ட பேசப்போறதே இல்ல...."இப்படி கொஞ்சி, கெஞ்சி, மிரட்டி பார்த்துவிட்டேன், எதற்கும் அசைந்து கொடுக்காமல் ரூம்குள்ளேயே தவமிருக்கிறாள்......
"சகிகிகிகி........"
பெரிய காட்டு கத்தலாய் என் குரல் அவள் காதை அடைக்க சில நொடித்துளிகளுக்கு பிறகு கதவு திறக்கப்பட்டது.....
"இப்போ எதுக்கு இவ்ளோ சத்தம் போட்டுட்டு இருக்கீங்க, நான் என்ன செத்தா போய்ட்டேன்?, இல்ல எனக்கு காது இல்லையா ?"
அந்த வார்த்தையை அவள் சொன்னதும் கோவம் மண்டை உச்சிக்கு இறங்கி அவளை அறைய என் ஐவிரலும் துடித்தது, இவளை சாக விடவா மல்லுக்கட்டிக்கொண்டு என் பதி ஆக்கினேன்,
இவளோடு குடும்பம் நடத்த இதுவரை குரங்கை போல அதுக்கும் இதுக்குமாய் தாவி கொண்டிருக்கிறேன்.. இருந்தாலும் விட்ட ஒரு அறையில் ரூமுக்குள் போய் பூட்டிக்கொண்டு விளையாட்டு காட்டுகிறாள்.....இன்னொரு அறை விட்டால் என்னை வீட்டை விட்டு தள்ளி பூட்டிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை....சாரதி பொறுமையை கை விடாதே என்று இறுக்கி பிடித்துக்கொண்டு அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்தேன்......
"சகி நான் தான் சாரி கேட்டுட்டேன்லமா, இன்னமும் எதுக்கு இந்த கோபம்? உனக்கு நான் சாரி சொன்னதுக்கு அப்புறமும் கோவம் போகலனா நான் உன்ன அடிச்ச மாதிரி நீயும் என்ன அடிச்சிரு"
இதை சொன்னதுக்கப்புறம் செண்டிமெண்டலா "அத்தான் அப்படிலாம் சொல்லாதீங்க, உங்களை நான் அடிக்கிறதா, என்ன பேசறீங்க, எனக்கு உங்க மேல இருந்த கோவம் எல்லாம் போச்சுன்னு அந்த கால பதிவிரதையா டைலாக் பேசுவானு நான் நினைக்கல தான், இருந்தாலும் இந்த சகி அட்லீஸ்ட் பேச்சுக்காவது மன்னிச்சிட்டேன்னு சொல்லுவானு எதிர்பார்த்தேன், ஆனா எல்லாம் பிளாப், ஒரு லேசான பார்வை, அவ்ளோ தான்....நான் இருக்கறத கூட மறந்தவளா வேகவேகமா போய் புக் எடுத்துக்கிட்டு வந்து புரட்ட ஆரம்பிச்சிட்டா....
அடுத்து வந்த மணித்துளிகள் எல்லாம் அவளின் மௌனத்திலே கடந்து போனது....எனக்கு செய்யும் எந்த வேலைகளையும் அவள் மறந்து போகவில்லை தான், இருந்தாலும் எதோ அந்நியப்பட்டதாய் உள்ளுக்குள் ஒரு வருத்தம்...
இந்த கைய வச்சிக்கிட்டு என்ன பண்றது, என்ன சாரதி நீ இப்படி பண்ணிட்டியே என்று நிமிடத்திற்கொருமுறை எனக்கு நானே தலையில் குட்டிக்கொண்டேன்...
சாமி தரிசனம் முடிந்து அம்மா, அப்பா கூட வீடு திரும்பியாச்சு, ஆனால் என்னவளின் இயல்பு நிலை இன்னமும் திரும்பவில்லை....
பயண களைப்பில் இருந்த இருவருக்கும் எங்களின் விலகல் பெரிதாய் படவில்லை.....இப்படியே நாட்கள் ஓடி ஒரு வாரம் முடிவடைய நானும் எவ்வளவோ சமாதானம் செய்தும் சகியின் கோபம் சிறிதும் குறையவில்லை....கோவத்தை கத்தி கூச்சல் போட்டு வெளிக்காட்டும் ரகமல்ல இவள், உள்ளுக்குள்ளே வைத்து அமைதி காத்து மௌனத்தாலே எதிரியை வீழ்த்திவிடுவாள், பெரிய சண்டிகாரி தான்......
"அம்மா இன்னைக்கு ஆஃபீஸ் முடிய லேட் ஆகும், எனக்காக சாப்பிடாம வெயிட் பன்னிட்டு இருக்காதிங்க, நான் வெளிய சாப்பிட்டு வந்துடுவேன்..."சகியை பார்த்துக்கொண்டே அம்மாவிடம் சொன்னேன்...
"ஆமா உனக்காக நான் காத்துக்கிடந்ததெல்லாம் அப்போ, இப்போல்லாம் 8 மணி ஆனா தன்னால தூக்கம் வந்துடுது, 7 மணிக்கு டான்னு பசிக்க ஆரம்பிச்சிடுது, இதுல எங்க உனக்காக நான் காத்துக்கிடக்கறது, இதெல்லாம் பக்கத்துல நிக்கிற உன் பொண்டாட்டிகிட்ட சொல்லுடா"
அம்மா இருக்காங்களே, சகி அப்படி என்ன சொக்குபொடி போட்டாலோ, அம்மா எப்பவும் சகியின் பக்கம் தான், எந்த சலனமும் இல்லாத சகியின் முகத்தை பார்த்தேன், இப்பொழுது என்ன பேசியும் பலனில்லை..புரிந்துகொண்டு பெருமூச்சொன்றை வெளி தள்ளிக்கொண்டு கிளம்பினேன்.....
இந்த முதல் விரிசலே எங்களின் முழுமையான விரிச்சலுக்கும் காரணமாய் இருக்கப்போவது மட்டும் இன்றே தெரிந்திருந்தால் அவளும் சரி நானும் சரி இப்படி ஒரு முட்டாள்தனத்தை செய்திருக்க மாட்டோம்...
என் ஆஃபிஸில் கொடுக்கப்பட்ட வேலைக்காக ஒரிஸா வரை போயிருக்கவும் மாட்டேன்...
"சகி ஒரு நிமிஷம் நான் என்ன பேசறேன்னு கேளு, ஹலோ சகி"
அதற்கு மேல் அவள் இணைப்பில் இல்லை, இப்படி தான் இந்த ஒரு வாரமும் போனில் மணிக்கொருமுறை பேச முயற்சி செய்தாலும் பதிலுக்கு ஒரு வார்த்தை கூட பேச மாட்டாள், என்ன தான் இந்த பெண்ணிற்குள் இவ்வளவு கோவமோ......எனக்குள்ளும் வெறுப்பு எட்டி பார்த்தது, எத்தனை முறை சாரி சொல்லி சமாதானத்திற்கு கெஞ்சி பார்த்துவிட்டேன், இனி என்ன செய்ய வேண்டுமென்று என்னை இப்படி அலைக்கழிக்கிறாள்.....
வெறுப்பில் இருந்த எனக்கோ மிகப்பெரிய வாய்ப்பு கை தேடி வந்தது, எங்களின் புதுநிறுவன அமைப்பிற்க்காக ஒரிசாவில் மிக பெரிய முதலீட்டாளரை சந்தித்து அவருக்கு எங்களின் எதிர்கால திட்டத்தை பற்றி புரியவைப்பதற்கான மிகப்பெரிய பொறுப்பை என் தலைமையில் கொடுத்து எனக்கு பிளைட் டிக்கெட்டையும் கையில் கொடுத்து வழியனுப்பி வைத்தார் என் மேலதிகாரி....
என் நெடுநாளைய கனவிற்க்கான முதல் அஸ்திவாரம் இது என்று என் அலுவலக மூளை அறிவுறித்தியதால் இப்போதைக்கு காதல் இதயத்தை பற்றி எல்லாம் யோசிக்க தோன்றவில்லை.....
என் வெளியூர் பயணத்தை வெறும் அறிவிப்பாக மட்டுமே வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்புவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய தயாரானேன்....
விதியின் திட்டம் எதுவென்று தெரியாமல் என் வாழ்க்கையின் திட்டத்தை கணக்கு போட்டு தோற்க போவது தெரியாமல் பரபரப்பில் திண்டாடி கொண்டிருந்தேன்....