கல்வி

குறள் வெண்பா - ( கல்வி )
`````````````````````````````````````````
1. மதியைப் பெருக்கி மனமயக்கம் தீர்த்துக்
கதிதரும் கல்வியைக் கல்.

2. தலைநிமிரச் செய்யும் தரணியில் கல்வி
மலைபோல் உயர்த்தும் வரம்.

சிந்தியல் வெண்பா
``````````````````````````````
1. ஊன்றுகோ லாய்த்தாங்கி ஊர்மெச்சச் செய்திடும் .
ஆன்றோர் நிறைந்த அவையத்து முன்நிறுத்தும்
தான்கற்ற கல்வியே சான்று .

2. வெற்றி வசமாகும் மேன்மையும் கிட்டிட்டும்
நற்பண்பும் கூடி நலமாகும் வாழ்க்கையும்
கற்றிடும் கல்வியால் காண்.

இருவிகற்ப நேரிசை வெண்பா
`````````````````````````````````````````````````
1. செல்வத்துள் கல்விதான் சீர்மிகுச் செல்வமென
நல்லோர் பலரும் நவின்றதுண்டு - கல்வியே
ஆற்றலைக் கூட்டி அறிவைப் பெருகவைத் (து)
ஏற்றம் தருமாம் இனிது .

2. கற்கச் சுரக்கும், களவுமது போகாது
வற்றாத ஊற்றாய் மகிழ்விக்கும் - பற்றுடன்
கல்வி பயில்வோர் கரைசேர்வர் இவ்வுலகில்
செல்லுமிட மெங்கும் சிறப்பு .

3. இளமையில் கற்றல் இனிமை பயக்கும்
விளங்கிடத் துன்பத்தை வெல்லும் - வளமிகு
வாழ்வை அளிக்கும் வருத்தம் துடைத்திடும்
தாழ்வை விரட்டும் தவம் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (26-Sep-16, 10:43 pm)
பார்வை : 2563

மேலே