அணுகுண்டு - அதன் திகில் கதை, ஆனால் இது நிஜம்

உலகில் 20,000அணுகுண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றில் 10,000 குண்டுகள் தகுந்த இடங்களில் ஆயத்தமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குண்டுகள் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் இருக்கின்றன.

நல்லவேளையாக, கடந்த 64 ஆண்டுகளில் மீண்டும் அணுகுண்டு பயன்படுத்தப்படவில்லை. ஆனால், அப்படி ஒரு அழிவை நெருங்கிய தருணங்கள் பல உண்டு. 1962 க்யூபா ஏவுகணை பிரச்னையின்போது அமெரிக்கா அணுகுண்டைக் கையில் எடுத்தது. 1983ல் ரஷ்யாவில் இருந்த எச்சரிக்கை அமைப்பில் ஏற்பட்ட தவறால் அமெரிக்காவின் ஐந்து ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி வருவதாக தகவல் கிடைத்தபோது, ரஷ்யா அணுகுண்டுகளைத் தயார் செய்தது. 1995ல் நார்வேயிலிருந்து ஒரு ராக்கெட் ஏவப்பட்டபோது, அதை அணுஆயுதத் தாக்குதலாக நினைத்தது ரஷ்யா. 2007 ஆகஸ்ட் 29-30ந் தேதி அணுகுண்டு பொருத்தப்பட்ட ஆறு ஏவுகணைகள் ஏற்றப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானம் ஏங்கோ சென்றுவிட்டது. அந்த விமானம் எங்கே சென்றது என 36 மணி நேரம் வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இப்படி மனிதத் தவறுகளினால் ஏற்படும் அபாயங்கள் போக, வேறு சில பயங்கரங்களும் இருக்கின்றன. உலகெங்கும் இருக்கும் பயங்கரவாதிகள் அணுகுண்டுக்கான மூலப் பொருள்களையும் அதற்கான தொழில்நுட்பத்தையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவை கிடைத்துவிட்டால், அணுகுண்டைச் செய்து அதை நிச்சயம் பயன்படுத்துவார்கள். எதிரி நாடு தம்மீது அணுகுண்டைப் பயன்படுத்தாமல் இருக்க அணுகுண்டு வைத்திருப்பதாகப் பல நாடுகள் சொல்கின்றன. பயங்கரவாதிகளிடம் இந்த வாதம் எல்லாம் செல்லாது. தவிர, இணையத் தொழில்நுட்பம் வளர்ந்துவருவதால், ஒரு நாட்டின் அணு ஆயுத கட்டுப்பாட்டை பயங்கரவாதிகள் எளிதில் கைப்பற்றும் வாய்ப்பு இருக்கவும் செய்கிறது.

சுமார் 40 நாடுகளிடம் அணு ஆயுதப் பொருள்கள் இருக்கின்றன. அவை எல்லாமே பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்ல முடியாது. இணையத்தில் தகவல்கள் கொட்டிக்கிடக்கும் இந்த யுகத்தில், இந்தப் பொருள்களை வைத்து அணு ஆயுதம் செய்யும் தகவல்களை பயங்கரவாதிகள் எளிதாகப் பெற்றுவிட முடியும். தற்போது இருக்கும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் போதுமானதாக இல்லை. இதனால் வரும் ஆண்டுகளில் அணு ஆயுதத்தை வைத்திருக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். 15-20 நாடுகள் அணு ஆயுத நாடுகளாகிவிட்டால், உலகம் உண்மையிலேயே மிக அபாயகரமான இடமாகிவிடும். அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தேசங்கள் அணு குண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருள்களையும் அதற்கான தொழில்நுட்பத்தையும் விரைவிலேயே பெற்றுவிடும் என்பது மற்றொரு அபாயம்.

ஒவ்வொரு நாடும் அணுகுண்டை வைத்திருப்பதற்கு பெருந்தொகையைச் செலவிடுகிறது. 2008ல் அமெரிக்கா மட்டும் கிட்டத்தட்ட 52.4 பில்லியன் டாலர்களை அணு ஆயுதங்களுக்கும் அது தொடர்பான திட்டங்களுக்கும் செலவிட்டது. தனது அணு ஆயுதத் திட்டத்தை மேம்படுத்தவும் அவற்றை வைத்திருக்கவும் சுமார் 29 பில்லியன் டாலர்களை வருடந்தோறும் செலவிடுகிறது அமெரிக்கா. இந்தத் தொகை இந்தியாவின் பட்ஜெட்டைவிட அதிகம். உலகம் முழுவதும் அணு ஆயுதங்களை மேம்படுத்த ட்ரில்லயன் கணக்கில் செலவிடப்படுகிறது. அணு ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் 110மில்லியன் டாலர்கள் செலவிடப்படுகின்றன.

Thanks: Kopi krish

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (27-Sep-16, 12:54 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 180

மேலே