உன்னுடனான என் பயணம்

பூக்களைப் போல்
கவிதைகளும் செடியில் பூத்தால்
பறித்துக் கொடுத்துவிடலாம்

ஆழ் மனதிலும்
அலைக் கடலிலும்
வீசும் காற்றிலும்
வான வெளியிலும்
வயல் வெளிகளிலும்
இயற்கையின் அதிசயங்ககளிலும்
கவிதைகள் நிரம்பித்தான் கிடக்கின்றன
ஆனால்
உனக்கான கவிதையை
தேடியெடுப்பதுதான் கடினம்

வாழ்க்கைப் பயணத்தில்
பக்கத்து இருக்கையில்
இருப்பவர்களை விட
பத்து இருக்கைகள்
தள்ளி அமர்ந்திருப்பவர்களும்
பாதி வழியில்
இறங்கி போனவர்களும்
மனதில் அமர்ந்துவிடுகின்றனர்
நிரந்தரமாக

கவிதையின் அர்த்தங்களை
வார்த்தைகள் மட்டுமே நிர்ணயிப்பதில்லை
அதை எழுதுபவரும்
பெறுபவரும் மாற
அர்த்தங்களும் மாறும்

காலம் கடந்து
எழுதபட்ட கவிதைகள்
வேதனைகளை மட்டுமே
சுமக்கின்றன

உன்னுடனான என் பயணத்தில்
தோளோடு தோள் சேர்த்து
இணையாக பயணம் செய்யும்
வாய்ப்பு எனக்கில்லை
பக்கத்து இருக்கைக்கும்
வாய்ப்பில்லை

நீ கடந்துபோகும்
ஆயிரங்களில் ஒருவனாகத்தான்
நானும் இருப்பேன்

ஆனாலும்
காலங்கள் கடந்து
என்மீதான நினைவுகள்
உனக்குள் வரும்பொழுது
கடைசி வரிசையில் நின்று
உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்
என்னைப் பார்த்து
ஒரு புன்னகை பூக்க
மறந்து விடாதே

எழுதியவர் : சூரியகாந்தி (8-Oct-16, 11:56 pm)
பார்வை : 364

மேலே