ஒரு பா ஒரு பஃது

சேவடி பற்றினேன் செங்கோட்டு வேலவனே!
சேவற் கொடியுடை சேயோனே!- தேவரின்
தேவனே! அன்பால் திருவுளம் பூத்திடுவாய்
காவடி யாடிவரக் கண்டு. 1.

கண்டேனுன் பொற்பாதம் கைக்கூப்பி மெய்சிலிர்த்தேன்
தண்டையின் நாதமோ தாலாட்டத் - தண்கழலில்
கொஞ்சும் சிலம்பொலி கொள்ளையுங் கொண்டிட
நெஞ்சம் மலர்வித்தாய் நீ . 2.

நீயே கதியென்று நித்தமும் போற்றுகின்றேன்
நாயேனை யாட்கொள்வாய் நாடிவந்து! - நோயேதும்
அண்டாமல் காத்திடுவாய் அம்பிகை பாலனே
புண்பட்ட நெஞ்சைப் புரிந்து.3.

புரிந்தும் புரியாதான் போல நடிப்போ
கரிமுகன் சோதரனே கந்தா - சரியோ?
உனையே சரணென உள்ள முருகி
நினைத்தேன் அணைகரம் நீட்டு . 4.

நீட்டிய கைகளுக்குள் நிம்மதியாய் நானிருக்க
வாட்டிய துன்பம் மறைந்துவிடும் - காட்டிடு
நல்வழியை யென்றனுக்கு ஞான மருளிடு
நில்லா மனத்தை நிறுத்து . 5.

நிறுத்தும் வழியறியேன் நெஞ்சத் துடிப்பைச்
சிறுவா புரிவாழும் செல்வா! - பொறுத்தெனையாட்
கொள்வாயா? குற்றங் குறையிருப்பின் தேவானை
வள்ளியுடன் கூடியே வந்து. .6.

வந்தால் சிலிர்த்து மகிழ்வேன் கதிர்காமக்
கந்தா! சரவணா! காங்கேயா!- சிந்தை
முழுதும் நிறைந்தாய் முருகைய்யா வுன்னைத்.
தொழுதிட நீங்கும் துயர் . 7.

துயராலென் னுள்ளம் துடிப்பதைக் கண்டும்
தயவுசெய் யாமை சரியோ? - வயலூரா
பக்தியை மெச்சிப் படியிறங்கி வந்தெனக்குச்
சக்திதரு வாய்முருகே சா ! 8.

சாகும் பொழுதிலே சண்முகனே உன்நாமம்
போகும் கடைவழிக்குப் புண்ணியமே!- வேகுமுன்
ஆட்கொள மாட்டாயா? ஆடுமயி லேறியே
காட்சிதர வந்திடுகு கா ! 9.

காவாமல் போனாயேல் கைத்தட்டி எள்ளிடுவர்
நாவா லுனைப்பாடும் நல்லோரும்! - தேவா,வா!
பால குமாரா! பரிவுடன் பற்றினேன்
வாலறிவ! நின்சே வடி . 10.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (14-Oct-16, 12:42 am)
பார்வை : 49

மேலே