அம்மா இடும் மாக்கோலங்கள் - கற்குவேல் பா

சீரான தரையிலும்
சிதறியே விழும் புள்ளிகள்,
புள்ளிகளை அணைக்க மறந்து
தனிவழி செல்லும் கம்பிகள்,
சாணத்தில்
சரிவர அமராத பூசணிப் பூ ;
இப்படி,
ஒழுங்கற்றே கண்களில் விழும்,
அம்மா இடும் கோலங்கள் ..

சீரில்லா தரையிலும்
சிறப்பாக விழும் புள்ளிகள்,
புள்ளிகளை
கச்சிதமாக அணைத்துச் செல்லும் கம்பிகள்,
கம்பிகளை
அழகே நிரம்பிச் செல்லும் வர்ணங்கள் ;
இப்படி,
காணாக் கண்களையும்,
தன்வசம் சுண்டி இழுக்கும்,
மனைவி இடும் கோலங்கள் ..

மனைவி இடும்
சுண்ணாம்புக் கோலங்கள்,
மறுநாள் காலைவரை அழிவதில்லை,
காற்றும் அவற்றை,
கரைக்க முயல்வதில்லை ..
இட்டபடி அழகே,
இட்ட இடத்தில இருக்கும் ;
மறுநாள் அவள் ,
வாசல் தெளித்து கலைக்கும்வரை !

அம்மா இடும்
மாக்கோலங்கள்,
அந்திசாயும் நேரம் வரைகூட
தாக்குபிடிப்பதில்லை,
எறும்பும், விட்டிலும்,
கோழியும், குருவியும்,
கொத்தியே கரைத்து விடுகின்றன ;
காற்றும்
கொஞ்சம் பருகித் தேறும் !

#நியூட்டன்_அறியா_கதைகள்_3

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (14-Oct-16, 1:38 pm)
பார்வை : 128

மேலே