கலங்காது இரு மனமே

கலங்காது இருந்திடு மனமே என்றும்
விளங்காது நீயும் தவிக்காதே நாளும் !
நடந்திடும் நல்லதே இறுதியில் எதிலும்
விடிந்திடும் நமக்கு முடிந்திடும் இருளும் !
ஈழத்துத் தமிழனும் போரிட்டான் உரிமைக்கு
தந்திட்டான் உயிரை தலைமுறை வாழ்ந்திட !
விளைந்தது வீரமும் பிறந்தது இனஉணர்வும்
கலங்காதே மனமே காலமும் கனிந்திடும் !
மொழிப்பற்று வழிமாறிச் சென்றது இங்கேயும்
தமிழார்வம் குறைகிறது தமிழரின் வாழ்விலும் !
ஆதிக்கம் செலுத்துகிறது அந்நியரின் மொழியும்
கலங்காதே மனமே மங்காதென்றும் சங்கத்தமிழ் !
வெறுக்கிறான் தமிழனே தன்மானத் தமிழனை
ஒதுக்கிடும் எவருமே ஒன்றிடுவான் ஒருநாள் !
சறுக்கி விழுந்தவனும் வெகுண்டு வந்திடுவான்
கலங்காதே மனமே இணைந்திடுவான் களத்தில் !
அரசியல் ஆழ்கிணறு இழுக்கிறது விழுபவனை
காழ்ப்பு அரசியலால் தாழ்ந்திட்டான் தமிழனும் !
விழியிலா மனிதனாய் வழியறியா தவிப்பவனே
கலங்காதே இனிநீயும் நற்காலமும் பிறந்திடும் !
ஒத்துப்போகாத் தமிழினமும் கத்துக்க வேணும்
எத்திக்கும் வாழ்ந்திடும் வான்புகழ் தமிழனும்
கணநேரம் சிந்தித்தால் கருத்துக்கள் புரிந்திடும்
கலங்காது மனங்களும் கண்ணீரும் வடிக்காது !
பழனி குமார்