என்று தணியுமோ இந்த சாதி

என்று தணியுமோ இந்த சாதி
இன்றும் சாகிறதே உயிர்கள் மோதி !
நின்று சாதிக்கத் துணிவிலா மனங்கள்
கொன்று குவிக்கிறது உயிர்களை இங்கு !
பிறந்திடும் மனிதன் அறிந்திடா சாதியே
இறந்திடும் வரைநீ தொடர்வதும் நீதியா !
சாதிக்கொரு கட்சி வீதிக்கொரு சங்கமென
மோதிக் கொண்டு சாய்வதும் காட்சியானது !
அலைமோதும் நெஞ்சில் அலையும் வெறியே
நிலைமாற்றி திசைமாறி செல்கிறது நெஞ்சும் !
தலைமுறை கடந்தும் நடைமுறை மாறாதென
விதிமுறை இருந்தும் வழிமுறை தவறுகிறது !
எங்கிருந்து வந்தான் சாதியெனும் அரக்கன்
என்றுதான் மடிந்திடும் வெறியும் மனதினில் !
வன்முறைக்கு வித்தாகி நன்முறை மறைந்து
சாதியும் சமூகத்தில் வீதிகளில் அலைகிறது !
கடுகளவும் மாறாது வெறியும் குறையாது
சுடுகாடு செல்லும்வரை சாதியும் மறையாது
பெருங்கேடு வருகின்ற காலமும் உலகிற்கு
கள்ளனவன் நெஞ்சில் நிலைத்து இருந்தால் !
இதயத்தால் இணைக இன்பமும் பெருகிடவே
சாதிதனை ஒழித்திடுக சமுதாயமும் ஓங்கிட !
உயிராய் வாழ்ந்திடுக உள்ளத்தில் கொள்வீர்
உயிர்கொல்லி சாதியை அழித்திடுக உலகிலே !
பழனி குமார்