கருகும் பூக்கள்
ஓடி ஆடிய மென்மை பூவில்
ஒழுகிய கண்ணீர் இரத்தத் துளியா?
வாடி வதைந்த மயிலின் முகத்தில்
வாழ்நாள் கிழித்தது காமக் கோடா?
ஜோடி கிடைக்க காளை ஒன்று
தேடிப் பிடித்தது மானின் உடலா?
ஆங்கே கதறும் குயிலின் குரலோ
என்ன சத்தம்? வலியின் மொழியா?
விடியல் வருமுன் சரிந்து விழுகிற
விண்மீன் உடலில் ஆயிரங் கரங்கள்!
விடிய விடிய காம ஆலையில்
வெந்து தவிப்பது கிளியின் இனங்கள்!
புன்னிய நதியில் குளித் தெழுந்தாலும்
வாசனை வீசும் காமத் தடங்கள்!
ஒற்றை நாளில் கண்மணி உடலில்
கற்பின் இழப்பு எத்தனை முறைகள்!
கருகிய பூவில் வருகிற சாம்பல்
உங்கள் கனவினை சொல்லி போகட்டும்!
காமத் தழலில் சிந்திய குருதிகள்
உங்கள் வேதனை சொல்லி ஆறட்டும்!
மோக வெறியால் ஒடியும் எலும்புகள்
உங்கள் தியாகம் சொல்லி பறக்கட்டும்!
சூரிய ஒளியில் காமம் ஒழிய
உங்கள் இறப்புகள் பயனாய் இருக்கட்டும்!