இலக்கிய உலகம் விந்தையானது ---முஹம்மத் ஸர்பான்
பேரலைகள் நிறைந்த கடலின் ஆழத்தையும்,மேகங்கள் குவிந்த நீல வானின் எல்லையையும் வரையறுக்க முடியாததை போல இலக்கிய உலகம் விந்தையானது.ஆயிரம் கவிதைகள், கட்டுரைகள் சிறுகதைகள் என வாசிப்பதன் மூலம் உள்ளங்கள் காதல் வயப்பட்டு இலக்கிய உலகின் கருவறையில் நாளும் எண்ணற்ற ஆர்வலர்கள் மண்ணில் பிறந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
எழுத்துக்கள் என்பது வெறும் பேனாவின் கிறுக்கல்களல்ல.அவைகள் உயிரோட்டமுள்ளவை.அதிலும் சில தெய்வீகம் நிறைந்ததாக காணப்படுகிறது.பல் வகைப்பட்ட கலாசாரங்கள் நிறைந்த சமுதாயத்தில் வேதங்கள் தான் மனிதனை நேர் வழிப்படுத்துகிறது.வேதங்களிலுள்ள வசனங்களை அடியார்கள் உணர்கையில் வாழ்க்கையும் சுத்தமாகிறது.அவனது எண்ணமும் தூய்மையாகிறது,மனிதனின் கருத்துக்களால் திருந்தாத மனிதன் வேதங்களின் எழுத்துக்களால் திருந்தி நேர் வழி செல்கிறான்.ஆகவே எழுதப்படும் எழுத்துக்கள் அனைத்தும் உயிரோட்டமுள்ளவை.
பகலும் இரவும் சுழல்கின்ற விடியலின் பொழுதில் நாட்கள் புதுமையாகிறது.மனிதனின் வாழ்க்கையில் உள்ளங்கள் எழுதும் நிகழ்வுகளில் பட்டியலை நாட்குறிப்பெனும் இலக்கிய வடிவம் தத்தெடுத்துக் கொள்கிறது.சுமந்த தாயிடமும்,தாரமான மனையாளிடமும்,நெருக்கமான நண்பனிடமும் சொல்ல முடியாத ரகசியங்களை எழுத்துக்களால் தீட்டி மனிதனின் மனம் திருப்தியடைகிறது.உலகில் பலரின் தனிமையெனும் போராட்டத்தை இலக்கியங்களின் வடிவம் தான் வென்றெடுத்து ஆயுதங்களில்லாமல் ஆயுதத்தையும் விட வலிமையான எழுத்துக்களால் உரிமைகள் வென்ற சரித்திரங்கள் மண்ணில் ஏராளம்.
தாயின் கருவறையில் பத்து திங்கள் தங்கியிருக்கும் குழந்தை பிரசவம் கனிந்த பின் மண்ணில் ஜனனமாகிறது.அதை போல் சரியா?தவறா? என்று தள்ளாடும் எண்ணங்கள் எழுத்துக்களால் கனிந்த
பின் தான் மண்ணில் பொன் மொழியாகிறது.கற்பனையில் எழுதப்படும் எல்லாம் உலகில் கண்காணாத மூலைமுடுக்குகளில் நிதர்சனங்களாய் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.பாலைவனத்தில் வழி தவறிய கவரி மான்கள் காவரிக்கு தென்றலிடம் வழி கேட்பதை போலஇலக்கியமெனும்உலகில்தொலைந்தவர்கள் இதை விட்டு போ என்று சொன்னால் கூட இலக்கியமெனும் தேசத்தில் மரணம் வரை ஒட்டிக்கொண்டு வாழத்தான் ஆசைப்படுகிறார்கள்.