​இரவல் வெளிச்சம்

இரவல் ஒளிதான் இரவில் உலகிற்கு
இரவல் அளித்து இரவைக் கிழிக்கும்
இரவல் பெற்ற இன்னுயிர் அனைத்தும்
இரவல் தந்த கதிரவனை வாழ்த்திடும் !

இரவலாய்ப் பெற்ற ஒளியை ஈர்த்து
இரவிலும் பகலிலும் உயிராய் காத்து
இன்பத்தின் விளைவால் ஈன்றிட உள்ள
உயிரான கருவிற்கு உதவிடும் அன்னை !

இரவல் வெளிச்சம் இல்லாது போனால்
இவ்வுலகும் தவிக்கும் இருளில் மூழ்கி !
இரவல் இதயமும் கிட்டா நிலையானால்
இனிக்கும் காதலும் கசந்துப் போகும் !

இரவல் வெளிச்சம் புரவலர் நிச்சயம்
பெற்றிடும் உயிர்கள் அறிவர் இதனை !
கற்றிடும் பாடமாய் காலமும் வாழ்வில்
சுற்றிடும் உலகும் உணர்ந்திடும் இதனை !

சாலையில் உறங்கி காலையில் விழித்து
அரைவயிறு நிரம்ப அன்றாடம் உழைத்து
பசியும் நீங்காது திண்டாடும் உயிர்களுக்கு
உதவிடும் இதயங்கள் இரவல் வெளிச்சமே !

இரவலாய்ப் பெறுவோம் ஈரமுள்ள இதயத்தை
வெளிச்சமாய் வாழ்வோம் இருளும் அகன்றிட
பிறந்ததன் பயனை மற்றவர்க்கு உணர்த்திட
இறந்தும் நிலைப்போம் இருப்பவர் நெஞ்சில் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Nov-16, 2:57 pm)
பார்வை : 233

மேலே