கந்தர் அநுபூதி - 1

முருக பக்தர்களுக்கு திருப்புகழ் இன்றியமையாதது. நிரம்ப பக்தி ரசமும், மொழி வளமும், மந்திர இயல்பும் ஒன்றியைந்து இருப்பது திருப்புகழ். இதன் சந்த நடை கேட்கும் அனைவரையும் ஆட்கொள்ள வல்லதாகும். அருணகிரிநாதர் கிளியாக மாறி, பின்பு அருளியதே கந்தரநுபூதி என்பர் அன்பர். யோக நெறியின் சாரமும், பக்திநெறியின் சாரமும் இயைந்து இருப்பது கந்தரநுபூதியாகும். இது ஒரு யோக நூல், பக்தி நூல், மந்திர நூல் எனினும் தகும். அப்படிப்பட்ட கந்தரநுபூதியில் நான் மிகவும் விரும்பிய பதிகங்களை இங்கு பதிவிடுகிறேன்.

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீ யலையோ
எல்லாமற என்னை இழந்த நலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே! - கந்தர் அநுபூதி (அருணகிரிநாதர்)

"எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்" என்பது இப்பாடலின் உயிர். எதிலும் மாற்றமில்லாத (நிலையில் திரியாதவன் இறைவன்), துன்பமில்லாத யோக வடிவினவன் இறைவன். யோகம் என்பது இறையுடன் நம்மை பொருத்தும் ஒரு உத்தி. இறை சார்ந்த சாதனைகள் எல்லாம் யோகமேயாம்! அப்படிப்பட்ட யோக மார்கத்தினை தன் சொல்லாலும் செயலாலும் அருளுபவன் இறைவன். முருகப்பெருமான் ஒரு யோக மூர்த்தி. சைவத்தின் சித்தாந்த நெறியில், சிறிது சாக்த நெறியின் தந்திர சாதனைகள் சேர்த்து தோன்றியதே கௌமாரம் எனும் முருக வழிபாட்டு நெறி (இது என் கருத்தேயாகும்- ஏனெனில் சைவ ஆகமங்களில் தந்திர சாதனைகள் மிகக்குறைவு, சாக்த வழிபாடுகளில் தந்திர சாதனைகள் மிகுந்து உள்ளது. அனால் கௌமார மார்க்கத்தில் யந்திர தந்திர முறைகள் உண்டு. சிவனுக்கு எந்தவித மூல மந்திரமும் இல்லை, நமசிவாய என்பது சிவ பஞ்சாட்சரம் எனினும் இது ஒன்றே சைவ மார்கத்தில் உள்ள மந்திரமாகும், சரபர் வழிபடு, பைரவர் வழிபடு எல்லாம் சைவத்தின் தந்திர முறைகளாய் இருக்கக்கூடும் என்பது என் கருத்து. அனால் முருகனுக்கு மூல மந்திரம் உண்டு. தேவியை உபாசிக்கும் அன்பர்கள் முதலில் உபதேசிக்கப்படுவது மஹாகணபதியும், பாலாவும் ஆகும் அவ்வாறிருக்க முருகனின் மூல மந்திரம் பாலாவின் பீஜாக்ஷரம் கொண்டும், மஹாகணபதியின் மற்றைய அக்ஷரங்கள் கொண்டும் விளங்குகின்றது. ஆனால் தமிழ் நாட்டில் கௌமாரம் பெரிதும் சைவ ஆகமத்துடனேயே தொடர்புள்ளதாக இருந்து வருகிறது) ஆதலின் முருகன் ஒரு யோகமூர்த்தியாக (குருவாக) இருக்கிறார் என்ன முதல் இரு அடிகளுக்கு பொருள் கொள்வதாகுக. தேவர்களுக்கும், இவ்வுலகிற்கும் தலைவனே, அப்படிப்பட்ட யோகநேறியினின்று என்னை, நானெனும் தன்மையினை இழக்க என் மனதிற்கு கட்டளை இடுவாயாக முருக என வேண்டுகிறார். நான் எனும் தன்மை உடையகால் மனம் உயிர்பெற்றுவிடுகிறது. மனம் உயிர் பெற்றால் அது நம்மை பரம்போருளினின்று பிரித்து விடுகிறது. தன்னை இழப்பதே நலம், நம்மை நாம் இழக்குங்கால், நம்மை நாம் இழப்பதை எவ்வாறு கண்டு கொள்வது? நம்மை இழந்தோம் என நாம் நினைக்குங்கால் மனம் உயிர்பெற்று பல விகாரமாகி மீண்டும் தன செயலினை செய்கிறது. இறந்தகாலம், எதிர்காலம் எல்லாம் அற்று தற்போது உள்ள பரமானந்த நிலையினில் நிற்பதே ஞானயோகமாகும். நம் மனம் மாய்ந்து போனது என எண்ணுங்கால், மனம் உயிர்பெற்று விடுகிறது. அவ்வாறிருக்க, தன்னை இழந்த நிலையினை சொல்ல வல்லவன் இறைவன் மட்டுமே என்பது காண்க. இறைவனே யோகா வடிவினன், அவனே யோகத்தினை வழங்கும் ஞான குருவும் ஆவான். ஆதலால் யோகா வடிவினான இறைவனை மனத்தினை மாய்க்க வேண்டுதலை உணர்தலே இப்பதிகத்தின் பொருள்.

எழுதியவர் : சௌந்தர் (1-Nov-16, 3:10 pm)
சேர்த்தது : சௌந்தர்
பார்வை : 243

மேலே