மகளெனும் தேவதைகள்

தேவதை கதை சொல்கிறாள் மகள்
கேட்டுக் கொண்டிருக்கிறேன் நான்
"தேவதை"
கதை சொல்ல சொல்ல...
*
பசிக்குமென்று பிஸ்கெட்டை வாயிலூட்டுகிறாள்
தாயென மாறிய மகள்
'ஆ'வென வாய் பிளந்து நிற்கிறது
சைவத்திற்கு மாறியிருந்த
சிங்கம் கரடி பொம்மைகளெல்லாம்..
.*
கர்ப்பம் தரித்திருக்கலாம் இந்நேரம்
மூடிய புத்தக பக்கங்களில்
குட்டி போடுமென்ற நம்பிக்கையில்
மகள் வளர்க்கும் மயிலிறகுகள்..
.*
சுட்டு சுட்டு போடுகிறாள் மகள்
வட்ட வட்டமாய் சுருட்டிய முறுக்கென
இன்பத்தில் இளித்துக் கிடக்கிறது
திரும்ப திரும்ப பிரசவிக்கும்
பிஞ்சு விரல்களின் "இ"னாக்கள்
.*
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
பாடிக் கொண்டிருக்கிறாள் மகள்
கவணிக்காமல் செல்கிறது எங்கோ
ஐயோ பாவம்தான்
காது கேட்காத நிலா.

எழுதியவர் : மணி அமரன் (1-Nov-16, 7:44 pm)
பார்வை : 115

மேலே