கோபுரம் தாங்கும் பொம்மைகள்
கோபுரம் தாங்கும் பொம்மைகள்.....!
பிறந்தகம் துறந்து உடன்பிறவிகள் பிரிந்து
புகலிடமாய் புதுமண உறவுடன் கலந்து
தாரமாய் தண்ணிலவு விளக்கேற்றப் புகுந்தாள்
தார்மீக உரிமைகளை சுடர்த்திரியாய் எரித்தாள்
ஆதிக்கத்தின் ஆதியந்தம் அறிந்த மாமியார்
அடிமைசாசனத்தின் மூலப் பத்திரமாய் மாமனார்
கூடாமல் கூடியறுக்கும் கிடி நாத்தனார்
கூட்டிப் பெருக்கி பற்றவைக்கும் குரோதனார்
நிரந்தரம் பிரிதானப் பிறந்தவீடு
சுதந்திரம் பறிபோனப் புகுந்தவீடு
இரண்டிற்கும் இடையே படும் இடிபாடு
இல்லற வாழ்க்கையில் இவள் பலியாடு
சொரணையற்ற நடப்பிற்கு அனுசரணை
சுயசிந்தையற்றுப் பணிபவள் பதிவிரதை
சமையலறை சாம்ராஜ்ஜியத்தின் பேரிகை
சம்சார ஆளுமைக்கு இவள் பேளிகை
தன்மானத்தின் பிரதானம் சுய வருமானம்
தகவாழ்வியலில் கைக்கொடுக்கும் வெகுமானம்
பெறுமானமாய் துணைநலம் கை சேர்ப்பின்
தாங்கியவள் பெற்றிட வேண்டும் சன்மானம்
உணர்வற்ற உரிமை உறவுகளிடையே
ஊமையாய் வாழ்ந்திட மௌனமொழி பழகுபவள்
ஊரார் பார்வைபட வாழையிலையில் நெய்தடவி
உள்ளாடை ஒட்டை மறைக்க பட்டாடைக்கட்டி உலவுபவள்
கூட்டிற்குள் முடங்க இறகறுத்தப் பட்டாம்பூச்சி
வீட்டிற்குள் அடங்க திறவுகோல் தொலைத்த பட்சி
மனைமாட்சிக்காய் வார்க்கப்பட்ட அச்சி
கலசங்கள் தாங்கிடும் இவள் கோபுர உச்சி
கவிதாயினி அமுதா பொற்கொடி

