அகலிகையும் இந்திரனும் தேவேந் திரனொரு பெண்கிறுக்கன் மாற்றான்

அகலிகையும் இந்திரனும் ..


தேவேந் திரனொரு பெண்கிறுக்கன் மாற்றான்
மனைவியர் சுந்தரி என்றால் ஒருமுறை
எங்ஙன மாயினும் உள்ளம் குளிர
சுகித்திடநி னைப்பான் அவன்

பூமியைச் சுற்றி முதலில் வருபவர்
யாரோ அவரைத் திருமணம் செய்வாள்
அகலிகை என்றோர் நிபந்தனை வைத்தார்
அவளது தந்தைபிரம் மா

கௌதம மாமுனி தேவாதி தேவர்
சபையில் பசுவை ஒருமுறை சுற்றிவந்து
பல்லோரும் வாழ்த்தி யருள பிரம்மன்
மகளகலி யைமணந் தார்

திருமண மாகி அகலிகை கௌதமர்
இல்லற வாழ்வு இனிதே தொடரவே
வில்லன் உருவினில் இந்திரன் ஓர்நாள்
குடில்முன்வந் தேநின்றா னங்கு

அகலிகை மேனி அழகில் மயங்கிய
இந்திரன் கௌதம மாமுனி இல்லத்
தருகே இரவும் பகலிலும் காத்திருந்தான்
தன்னிருகண் கள்மூடா மல்

மார்கழி மாதம் குளிர்பனி காலம்
அகலிகை கௌதமர் வாழ்விடம் வந்து
ஒருநாள் இரவினில் சேவல் உருவினில்
இந்திரன்கூ வல்விடுக் க

கௌதம மாமுனி தூக்கம் கலைய
குளித்திடச் சென்றார் நதிக்கரை யோரம்
உறங்கும் நிலையில் நதிநீர் இருக்க
விரைந்தார் குடிலைநோக் கி

இரவின் குளிரில் முனிவர் உருவில்
அகல்யா அருகினில் சென்றவ ளையணைக்க
வான்மேல் நிலவை கருமுகில் சூழ
குடில்உள் புகுந்த திருள்

குளிர்பனி காலம் கணவன் விரல்கள்
மனைவியின் மேனியைத் தீண்டும் பொழுது
மனதில் எழுமோர்உற் சாகம் அதற்கொரு
ஈடிணை வேறிலை யே

மார்பிளஞ் சூடில் மகிழ்ந்திரு வேளையில்
கார்முகில் வானில் கலைந்து விடவே
முழுநில வொன்றில் கறைகள் படிய
குடிலுள் நுழைந்தார் முனி

அணைத்திரு கைகள் தளர்த்திய போது
அருகில் இருவர் பதிபோ லிருக்க
எழுந்த அகல்யா அகத்துள பீதி
அவளிருகண் ணில்தெரி ய

இத்தனை காலம் கடுந்தவமி ருந்ததும்
இங்கன மோர்செயல் காண்பதற் காகவோ
கற்பை இழந்துநிற்கும் பெண்ணேநீ கல்லாய்
கிடவெனச பித்தார் முனி

சினத்தில் சிவக்கவே கண்களி ரண்டு
அகலிகை கல்லாய் கிடந்தது கண்டு
முனிவுரு வந்தவன் யாரெனக் கண்டு
கொடுத்தார் கடும்சாபம் ஒன்று

அரிய பதவி கிடைத்ததோர் ஆணவத்தில்
மாற்றார் மனைவியர் றென்றுமே பாராத
இந்திரன் அங்கத்தில் தோன்றட்டும் பெண்குறிகள்
என்றே சபித்தார் முனி

முனிவர் மனதிரு கோபம் தணிய
இருவர் கதறல் செவிகள் பிளக்க
இருவரின் மீதிரக்கம் கொண்டு வழிகள்
வகுத்தாரா வர்முக்திக் கு

கல்லாய் இருந்த அகல்யா கரைந்து
அறியா பிழைக்கு இதுவோ முடிவு
அனைத்து மறிந்தவர் முக்திக் கொருவழி
சொல்வீரென் றேகத ற

அகிலம் புகழும்மா மன்னர் வருவார்
படுமே அவர்திருப் பாதமும் உன்மேல்
பெறுவாய்நீ முக்தி அதுவரை ராமபிரான்
நாமம் ஜெபித்திருயென் றார்

பிழையிது போல்யினி ஓர்பொழுதும் செய்கலேன்
பாவியெனக் கோர்பரி காரமிலை யோமா
முனியே யெனக்கண்ணீர் மல்கியே இந்திரன்
கௌதமர் காலடிதொ ழ

முப்பெரும் தேவர் அரிஅரபி ரம்மன்
இணைந்திரு லிங்கம் திரைக்கட லோரம்
உளதொரு ஆலயம் நள்ளிரவில் நாளும்
தொழவேநீங் கும்யென்சா பம்

அங்கம் முழுதிலும் பெண்குறி தோன்றவே
தன்மானம் காக்கவே தாமரைத் தண்டில்
பகலைக் கழித்து இரவில் உலவி
ஒருநாள்வந் தான்சுசீந்தி ரம்

யாரும் அறியா பொழுதினில் வந்து
தினம்தினம் பூஜைகள் செய்து வணங்க
இறுதியில் மேனியி லுள்ள குறிகள்
அனைத்தும் மறைந்தன வே

06-11-2016

எழுதியவர் : (7-Nov-16, 12:18 pm)
பார்வை : 120

மேலே