நகர்வு

நகர்வு...
அதிகம் பேசாதீர்கள் ,அதிர்ந்து சிரிக்காதீர்கள்
அப்பா அம்மாவுக்கு அறவே பிடிக்காது -அவளின் கட்டளை
என் அண்ணன் ,என் தம்பி உங்களைப்போல் அல்ல
ஏதாவது ஏடாகூடம் வேண்டாம்
பிறந்தநாள் பரிசுப்பொருளை பிரிக்காமலேயே
பிறந்த வீடாயிருந்தால் நீட்டி முழக்குவாள்
பண்டிகை நாட்களில் அவள் வீட்டில்
யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும் பட்டியலிடுவாள்
எனக்கென்ன பிடிக்கும் பிள்ளைகளுக்கு
என்ன பிடிக்கும் அறவே அறியாள்
இருபதுக்கும் மேற்பட்ட எங்கள் காதல் கடிதங்களை
எரிப்பதாய் முடிவெடுத்த அந்நாளில்
என் கடிதம் இரண்டு மட்டுமாவது இருக்கட்டுமே என்றேன்
திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட போலி ஆவணம் என்றாள்
நான் செய்ததெல்லாம் தவறா
நான் செய்த தவறில் இதுவும் ஒன்றா
உடைந்து போன என் உள்ளம் சொன்னது
மிகுந்த வலியைத் தருவது அன்பாகாது
ஏதும் செய்வதறியாது
விடியாத இரவை நோக்கிய நகர்வில் நான் ...
MULLAI RAJAN KAVITHAIGAL - முல்லை ராஜன் கவிதைகள்