ஒரு காதல் விண்ணப்பம்
இனியவளே !
கல்லிலே
வார்த்தெடுத்த சிற்பமாய் !
வண்ணங்கள் குழைத்தெழுதிய
ஓவியமாய் !
வார்த்தைகள்
வரிசைப்படுத்திய
கவிதையாய் உன்னை
வர்ணித்து உன்
சுயத்தை சூறையாட
எனக்கு விருப்பமில்லை !
ரதியழகாய் நீ
வர வேண்டாம்,
அதற்கு நான்
மன்மதனுமில்லை
அவ்விதமாகும்
எண்ணமும் எனக்கில்லை !
காதலிப்பதாய்
காலம் கரைப்பதில்
எனக்கு உடன்பாடில்லை !
இன்றைய இயந்திர வாழ்வு
மனதால் மட்டுமல்ல !
பணத்தாலும் ஆனது !
காலம் எதற்காகவும்
யாருக்காகவும்
காத்திருப்பதில்லை !
அனுபவமே அடிப்படையாய்,
அறிவே ஆதாரமாய்,
முயற்சியே மூலதனமாய்,
உழைப்பே ஓர் நோக்கமாய்
வாழ்ந்து, வாழ்வெனும்
வார்த்தைக்கு புது
இலககணம் வகுப்போம் !
நேற்றைய நினைவுகளோடு,
இன்றை இயன்றவரை
பயன்படுத்தி நாளை
நமதாக்கிட, இந்த
நிமிடத்தையும்
சேர்த்தே அர்த்தப்படுத்திட
எழுந்து வா என்னவளே !