வண்ணப்பாடல்

சந்தக் குழிப்பு !
````````````````````
வண்ணப் பாடல் !
``````````````````````````
"தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன. - தனதானா

அகத்தி லன்புட னேதுதி பாடிட
அணைக்க வந்திடு வாயெனு மாசையில்
அழைப்பி லின்பமு மேவரு மேயெனு - முரைகேளாய் !

அடைக்க லந்தரு வாயென நாடிட
அடக்கி யென்றனை யாதரி நீகதி
அளிப்ப துன்கட னேசிவ னேயிதை - உணராயோ ?

சுகத்து டன்பரி வோடெனை வாழவை
துலக்க மிங்கிலை யேகனி வாயொரு
துடித்த நெஞ்சினி லோடிடு தேசிவ - பெருமானே !

துலக்க மோடுற வாயொரு நாகமும்
சுழித்து டம்பினி லாடிட வேமகிழ்
தொடுக்கு மன்பினி லேபிற வாவர - மருள்வாயே !

புகட்ட வந்திடு வாயென நாடிடு
பொழிப்பு டன்பல காலமு மேதொழு
பொருட்ப டுந்திரு வாசக மோதிட - மகிழ்வோனே !

புலப்ப டும்திரு மேனியில் நீறொடு
புறத்தி ருந்தவ ளாமுமை யாளொடு
பொதுக்கு மன்பிலு லாவரு வேணிய -னருள்கோவே !

நகைப்பி லஞ்சிடு வோரினை மாநடன்
நடித்த மஞ்சுள சோதிய னேநனி
நயப்பு டன்கிரி மீதினி லேறிடு - முமைகோவே !

நனைத்த நஞ்சுணி யேநட ராசனை
நடத்து மம்பிகை யேயெழி லாளொடு
நரிப்பு டன்பிறை சூடிய மாமணி - வருவாயே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Nov-16, 10:20 am)
பார்வை : 48

சிறந்த கவிதைகள்

மேலே