விடுதலை
அறியாத வயதினிலே
அன்னையின் கையைப் பிடித்தபடி இரசித்தோம் ஓடிச்செல்லும் மனிதர்களை பார்த்து
நாமும் ஓடிய படியே...!
தொலைதூரம் சென்றவர்களாய் குடியேறினோம் வன்னியில்....
நீண்ட வருட அமைதி.....
மீண்டும் தொடங்கியது ஈழப்போர்
குண்டு வீச்சில் தகர்ந்தன
எம் வீட்டுக் கூரைகள்
இழந்தோம் உறவுகளை...!
ஓடிஓடியே சோர்ந்து போனோம்
கால்களோ தேய்ந்து போய்விட்டன
இழந்தோம் நம்பிக்கையை....
இருந்தும் வாழ வேண்டிய கட்டாயம்
வாழ்ந்தோம் உயிரற்ற மனிதர்களாய்.!
போரின் தாக்கம் அதிகரிக்க
மனதிலே குடி கொண்டது பயம்
உடமைகளை இழந்த நாம்
உயிரை கையில் பிடித்து
கப்பல் ஏறினோம் மகிழ்வுடன்
கடல் கடந்து யாழ்ப்பாணம் வர....!
கப்பலில் இருந்து இறங்கினோம் நிம்மதியுடன்
தொடங்கியது விசாரணை
முடிவில்லாக் கதையாய் தொடர்கிறது எம் நரக வாழ்க்கை...!
அகதி மக்களோடு அவஸ்தைப்பட்டு
நகர்கிறது வாழ்வு
விடுதலையற்ற மனிதர்களாய் நடமாடுகின்றோம் நாங்கள் விடுதலை கிடைக்காதா என்ற நப்பாசையில்
இன்றும் அதே முகாம்களில்..!!!