மூட நம்பிக்கை ★★ சிந்திக்க வைத்த கதை

அண்மையில் ஒரு நிகழ்வுக்கு சென்றிருக்கையில்,
சில சடங்கு சம்பிரதாயங்களை கவனிக்க நேர்ந்தது.
பாட்டிமார்கள் சில சடங்கு முறைகளை யோசித்து
யோசித்து அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.
என்னோடு உட்கார்ந்திருந்த பிள்ளையும் அனைத்தையும்
கவனித்துக் கொண்டிருந்து சில
கேள்விகளைக் கேட்கத் தொடங்கினால்.
பதில் கிடைக்குமா என்ற ஆர்வ கோளாரில்
சிலரிடம் ஒவ்வொரு சடங்கின்
முக்கியதுவத்தை கேட்டேன். விடை
கிடைக்கவில்லை. சரி, மண்டோர்களாய் முன்னின்று
சடங்குகளை அரங்கேற்றம் செய்யும்
பாட்டிகளிடம் கேட்டால்;
“எங்க பாட்டி, அம்மா எல்லாரும்
இப்படித்தான் செஞ்சாங்க, எங்களுக்கும்
சொல்லி கொடுத்தாங்க.
இப்ப நாங்க உங்களுக்குச் சொல்லி
கொடுக்கிறோம். பின்னால் நீங்க
இதயெல்லாம் உங்க பிள்ளைங்களுக்குச்
செய்வீங்க..!” என்றனர்.

பூனையும் பாலும்...

இதற்கு ஒரு கதையும் உள்ளது.
ஓர் ஊருக்கு
உபதேசம் செய்ய ஒரு பெரியவர் வந்தார்.
மாலை நேரத்தில் அவ்வூரின்
மண்டபத்தில் மக்கள் கூட தனது உபதேசத்தை
துவங்கினார். அமைதியாகவும்
உண்ணிப்பாகவும் மக்கள்
கேட்டுக்கொண்டிருகும் போது அங்கிருந்த பூனை ஒன்று
மியாவ் என்று கத்தியது.
உபதேசம் தொடர்ந்தது ஆனால் பூனை
மீண்டும் மியாவ் என்றது, அதற்கு பசி என்று உணர்ந்த
பெரியவர், அதற்கு ஒரு
கிண்ணத்தில் பால் வைக்கச்
சொன்னார். பாலை குடித்த பூனை
அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தது. இதனால்
அவரது உபதேசம் தடைபட, மக்கள் கவனமும்
சிதறியது. நிலைமையை சரி செய்ய பூனையை ஒரு
கூடையால் மூடி வைக்கச்சொன்னார்.
மறுநாளும் இதே நிலைதான். மூன்றாம் நாள் பெரியவர்
வந்தவுடன் உடனே ஒரு கிண்ணத்தில்
பால் வைத்து பூனையை ஒரு கூடையால்
மூடி வைக்கச் சொன்னார். அதன்பிறகு
அடுத்தடுத்த நாட்களில் பெரியவர்
வந்தவுடன், அவ்வூர் மக்கள் எல்லாம
செய்தாகிவிட்டது என்று கூடையால்
பாலுடன் மூடப்பட்ட பூனையை காட்டிவர்.
அதைப்பார்த்த பெரியவர்
இன்று இடையூறு
கிடையாது என்று கூறி உபதேசத்தை
தொடங்குவார். இதே பழக்கமாகவும்
ஆகி விட்டது.
உபதேசம் செய்த பெரியவர் பல
வருடங்களுக்கு பிறகு புதிய அணுபவங்க்களுடன்
மீண்டும் அவ்வூருக்கு வந்தார். உபதேசத்தை கேட்க
அனைவரையும் அழைத்தார். பலர் வந்தனர்
ஆனால், சிலர் அங்கும் இங்கும் ஓடினர்.
யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை.
நேரம் ஆகிகொண்டிருந்த்தால், பெரியவர் காரணத்தை கேட்டார்.
அதற்கு அந்த ஊர் பெரியவர் ஒருவர் இவ
டம் மன்னிப்பு
கேட்டுக்கொண்டே தங்களிடம் பாலும்
கூடையும் உள்ளதாகவும் ஆனால் பூனை மட்டும்
கிடைக்காததால் பக்கத்து ஊருக்கு பூனை பிடிக்க
ஆள் அனுப்பு உள்ளதாக கூறினார். அதற்கு
காரணம் கேட்ட பெரியவருக்கு அவர்கள்,
பூனையை பாலோடு வைத்து கூடையில் மூடி உபதேசம்
செய்தால் இடையூறு நிகழாது என்ற
அவரது உபதேசத்தை தாங்கள் காப்பாற்றி
வருவதாக கூறினார்களாம்.
ஏன், எதனால், எதற்காகச் செய்கிறோம்
என்ற ஒரு உணர்வும் இல்லாமல்,
காலங்காலமாய் செய்கிறோம்,
அதனால் அப்படியே தொடர்கிறோம்
என்ற போக்கு தானெ மூட நம்பிக்கையாய்
வேரூன்றி கிடக்கிறது நமது சமுதாயத்தில்?

பாட்டிகளும் பூச்சாண்டிகளும்
நம் பாட்டிமார்களுக்கு இப்படி
காலங்காலமாக ஆழ் மனதில் பதிய வைத்த
சில காரியங்களைச் செய்து
முடித்தால்தான் தங்களின் மனம்
நிறைவுபெரும் என்ற ஒரு போலியான
நம்பிக்கை. இதனாலேயே பல
செயல்பாடுகளை நியாயப்படுத்தி
நிறைவேற்றி விடுகின்றனர். இவர்கள் மனம்
கோணாமளிருக்க இவர்கள் செய்யும் சடங்கு
சம்பிரதாயங்களை அங்கிகரிக்கும் நிலைமை வேறு
ஏற்படுகிறது.
ஆனால் விளக்கம் கேட்டால்
சொல்லவும் தெரியாமல்,
தாங்களும் அறியாமல், குழம்பி, குழப்பி
விடுகின்றனர்.
இதன் விளைவு? நம் சமுதாயத்தில், பிறந்த
குழந்தைகளுக்கு அதே மூடநம்பிக்கைகளை ஊட்டி வளற்கும்
நிலை ஏற்பட்டு விடுகிறது.
இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் நல்ல தேர்ச்சி
எடுக்க கையில் பல வண்ண கயிறுகளைக் கட்டிக்
கொள்கின்றனர்; சில பரிகாரங்கள்
செய்தால் தான் நினைத்த காரியம்
நடக்கும் என்று நம்புகிறார்கள்; இருட்டில்
வெளியே சென்றால் பூச்சாண்டி
பிடித்துக் கொள்வான் என்று
அஞ்சுகிறார்கள்.
எட்டாம் எண்ணில் பிறந்த குழந்தையை சனி
பிடித்து ஆட்டும், வாழ்க்கை முழுவதும் துன்பம்
ஏற்படும் என்று சொன்னால், இதை
கேட்கும் அந்த பிள்ளைக்கு வாழ்வில் எப்படி வரும்
தைரியம்?

இப்படி இல்லாத ஒன்றையும், சான்றில்லாத
நம்பிக்கைகளையும் விதைப்பது ஏற்கமுடியுமா?
இதனால் குழந்தைகளுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் பயம், மனபாதிப்பு, அடிமைத்தனம், தைரியமின்மை போன்ற தாக்கங்களையே
விதைக்க நேரிடுகிறது.
பகுத்தறிவு சிந்தனை வளரும் இந்த. காலகட்டத்தில் மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்கு முறைகளையும் இன்னும் புகுத்திக்கொண்டிருக்கப் போகிறோமா?

நம் பிள்ளைகளை குறுகிய சிந்தனை வட்டத்தில் வைத்து,
நமது நம்பிக்கைகளையும், அனுபவங்களையும்
தினிக்காமல், அவர்களின் கற்பனை, சிந்தனை
திறன்களுக்கு எல்லை வகுக்காமல் இருக்க
முடியுமா நம்மால்?
குழந்தைகளின் கேள்விகளுக்கு இயன்றவரையில்
சான்றுள்ள, ஏற்புடைய விளக்கங்களை அளிக்க
முயல்வோம். பூச்சாண்டி
பிடித்துக்கொள்ளும் என்பதை விடுத்து, உண்மையான காரணங்களைக் கூறி விளக்குவோம்.

இந்த காலத்தில், பிள்ளைகளின் பல கேள்விகளுக்கு
பதில் சொல்ல இயலாமல்
திக்குமுக்காடும் நிலையில் நம்மில் பலர் உள்ளோம்.
“வானவில்லில் ஏன் கருப்பு நிறம் இல்லை?”,
“நம்ம வீட்டு நாய்குட்டியால் ஏன் பேச முடியவில்லை?”, “தாத்தாவின் தோல் ஏன் சுறுங்கி
விட்டது?” இப்படி,
ஒவ்வொரு நாளும் பல கோணங்களில்
எழும் கேள்விகளை உதரித்தள்ளாமல்,
ஊதாசினப்படுத்தாமல், அவர்களுக்கு
முடிந்தவரை தகுந்த விடைகளை அளிக்க முயற்சி செய்வோம்.
முடிந்தால், புத்தகங்களைப் புரட்டி, அவர்களோடு இணைந்து விடைகளைத் தேடுவோம். இன்றைய அம்மாக்களுக்கு கை கொடுக்கத்தான் இணையதளம் உள்ளதே! எளிய முறையில்
வலைப்பக்கங்களில் விடைகளைத் தேடி
கொடுப்போம். படங்களோடு விளக்குவோம். இதைவிடுத்து, இன்னுமும் மூடத்தனமான
விளக்கங்களையும், அச்சுறுத்தல்களையும்
கொடுத்து நம் பிள்ளைகளின் வாயை மட்டும் அல்ல, அவர்களின் மூளை, சிந்தனை
வளர்ச்சிக்கும் சேர்ந்தாற்போல் ஒரு விலங்கை மாட்டி விடுவது நாம் இழைக்கும் துரோகமாகவே
உருவாகும்.

எழுதியவர் : முகநூல் (17-Nov-16, 10:35 am)
Tanglish : mooda nambikkai
பார்வை : 913

மேலே