தந்தையின் தவிப்பு

#தந்தையின் தவிப்பு

ஊர்கூடி உறவு கூடி வாழ்த்தும் உரைத்து
ஓர் பிள்ளை உதிக்கவில்லை ஈரைந்தாண்டாய்
மலடி என்ற பட்டமுடன் மனமுடைந்தவளும்
சூள் கொண்டாள் ஒருநாளில் இறைவன் அருளால்..!

அங்கமது குலுக்காது கருவை சுமந்தே
கருவினிலும் கருத்தாக வளர்த்தாள் உயிராய்
விதைத்தவனும் விழி மலர கண்டே இரசித்தான்
மனைவியவள் நாளுந்தான் கூடுதல் அழகாய்..!

நிறைமாதம் கண்டவளோ கொண்டாள் வலியும்
மரணத்தின் வாயிலிலே நின்றாள் அவளும்
மனம் கலங்கி மணவாளன் நடையும் பயில - மனைவி
ஓலத்தால் துவண்டானே துயரால் அவனும்..!

என்னாகும் ஏதாகும் என்ற தவிப்பில்
படபடத்து நின்றவனும் பரவச மடைய
வீறிட்ட மழலை குரல் மணியோசையாய்
வானந்தான் மண்ணிறங்கி வந்தது போலே..!

பாதங்கள் மண்ணிலில்லை பரவசமுடனே
பார்த்தவனின் கண்களிலே திகைப்பும் வியப்பும்
ஆணொன்று பெண்ணொன்று இரண்டாம் மழலை
ஆண்டவனின் கருணையிலே மடங்கில் மகிழ்ச்சி..!

சந்தேக பார்வைகள் துளைக்க வாழ்ந்த
நாளெல்லாம் அன்றேதான் நரகம் போக
வாஞ்சையுடன் இல்லாளின் தலையும் வருடி
இன்புற்றான் இறைவனுக்கு நன்றியும் சொல்லி..!

எழுதியவர் : சொ.சாந்தி (18-Nov-16, 10:32 pm)
பார்வை : 129

மேலே