ஏழையின் பசியாற்று

#ஏழையின் பசியாற்று..
நெஞ்சத்தில் அமிலத்தை யாரோ ஊற்ற
எரிவது போல் காண்கின்றேன் அவலக்காட்சி
திருமணம் வைபோகம் திருநாளெனவே
கொண்டாடும் இடங்களிலே உணவும் பாழே..!
அரை சாண் வயிற்றுக்கு ஐம்பது வகையாய்
விருந்தும் தான் படைக்கின்றார் ஏனோ வீணாய்
சுவைத்திடலாம் அனைத்துமென தட்டை நிரப்பி
காலுணவில் முடிக்கின்றார் பசியும் அடங்கி...!
உந்தியிலே நிறைந்திட்ட உணவை விடவும்
வீதியிலே வீசீட்ட உணவும் மலையாய்
பெருமைதான் கொண்டிடவே பெருந்தனக்காரர்
செயலிதுவும் கூறுதற்கு வெட்கக் கேடாய்..!
ஏர்பிடித்த உழவனுக்கு வயிற்றில் பற்று
ஏகாந்த மனிதர் உணவை காலில் மிதித்து
வாழுகின்ற இழி நிலைதான் என்றோ மாறும்..?
பாழும் ஏழை பசியெல்லாம் என்றோ தீரும்..?
உண்ணுகின்ற உணவு மட்டும் படைத்தல் வேண்டும்
மிஞ்சும் உணவு ஏழைக்கெல்லாம் பகிர்தல் வேண்டும்
வீணின்றி உணவெல்லாம் பசியாற்றிட வேண்டும்
பட்டினி எனும் சொல்லும் மாய்ந்திட வேண்டும்..!