மலையோரம் மழைச்சாரல்
ஊட்டி மலையோரம்
ஒரு மாலைநேரம்
அது மழை நேரம் அவளைக் காண
நான் காத்திருந்த போது எழுதிய கவிதை
கதிரவன் கரையும் வேளை - அது
கவலைகள் குறையும் வேளை
பொன்நிறமாய் விண்நிறம்
மாறும் வேளை
செந்நிறமாய் என் நிறம்
நேரும் வேளை
அந்தப் பட்டு இழை வருகையின்
முன்னோட்டமாய்
மல்லிகை மொட்டுமழைச் சாரல் வீச
அல்லியவள் அழகதனை அள்ளியவள்
நடந்து வரும் அழகதனை என்னவென்று நான் பேச
என் கையிலோ மலைப்பூ
அவள் சிகையிலோ மல்லிப்பூ
கண்டதும் என் மெய்யிலோ மலைப்பு
மணம் தரும் மலர் அவள் - எனக்கு
மனம் தருவாளோ
சினம் தரும் இனம் அவள் -என்னை
மணம் முடிவாளோ ?
மழைத்துளியின் சாரலில்
மழையோடு நனைந்து நடந்தாள்
மலையோடு இணைந்து நடந்தாள்
என் மனதோடு பிணைந்து நடப்பாளோ ?
அவள் உடல் இளைப்பும் - அதை
அலங்கரித்த சேலைத் தலைப்பும்
கூந்தல் கொண்ட தலைப்பூவும்
குறைத்தது என் சலிப்பை
மறைத்தது என் களைப்பை
நிறைத்தது என் களிப்பை
அவள் மாலையில்
நடந்துவரும் மாலை
இரு கை வீசி சாலை
கடக்கும் இயற்கை
இந்த இயற்கைக்காக
இயற்கை எய்தவர்கள் ஏராளம்
நானோ மனதில்
அவளுக்காக இருக்கைகள்
செய்துள்ளேன் தாராளம்
மேகமது மலையின் மேல் தவழ - அவளின்
தேகமது சாலையின் மேல் தவழ்ந்தது
என் மோகமது அவள் சேலையின்மேல் கவிழ்ந்தது .