வெளிச்சம்
இருளை அகற்றிட ஒளியைக் கண்டிட
தோன்றிய மனிதன் தேடிய வெளிச்சம்
உரசியக் கற்களால் உருவான நெருப்பே
உதவியது அன்றும் உலகிலே இன்றும் !
இருளை அகற்றிட இரவைக் கிழித்து
உயிர்கள் வாழ உதவிடும் ஒளியாய்
உதிக்கும் சூரியன் தந்திடும் வெளிச்சம்
உலகைக் காப்பது இயற்கைக் கொடை !
விழிகள் இருந்தும் வழியும் அறிந்திட
முகங்கள் காண முழுதும் உதவிடும்
நடப்பதை அறிய அறிவோடு ஆய்ந்திட
உதவிடும் வெளிச்சம் உண்மை அன்றோ !
கற்பவை யாவும் எழுத்தில் இருப்பினும்
கற்றிட உதவிடும் புத்தகம் படித்திடவும்
கல்லாமை எனும் காரிருளும் நீங்கிடவும்
உதவிடும் வெளிச்சம் என்றும் எவருக்கும் !
பசியைப் போக்கிட பண்டங்கள் தயாரிக்க
அடுப்பினை எரிக்க அன்றாட வாழ்விலும்
நெருப்பாய் உதவும் வெளிச்சம் அன்றோ
உயிர்கள் வாழ்ந்திட மூலப் பொருளாகுது !
இருட்டில் வாழ்வோர் இல்லாத நிலையே
என்றிடும் கூற்று இன்றும் வழக்கினிலே !
உதவிடும் வெளிச்சம் பலவித வழிகளில்
அறிந்திடும் எவரும் அகிலத்தில் என்றும் !
பழனி குமார்