சட்டம் போட்டு திருடறக் கூட்டம்
சட்டம் போட்டு திருடுறக் கூட்டம்
வட்டம் போட்டு அலையுது இங்கு !
விட்டம் நோக்கி பழகிய மக்களும்
நட்டம் அடைகிறார் நாளும் இங்கு !
மக்கள் பயனுற இயற்றிய சட்டங்கள்
மாறியது இன்று மாபெரும் ஆயுதமாக
குற்றங்கள் புரிந்திட வளைந்து வந்திட
வாகையும் சூடிட வென்றவர் மகிழ்ந்திட !
பதவியில் உள்ளோர் கையிலும் சட்டம்
பதுக்கிய பணத்துடன் பதுங்கிட உதவுது !
வாடிடும் ஏழைகளை வதைக்கும் சட்டம்
மாளிகை வாசியின் சொற்படியே ஆடுது !
இலவசம் அளித்து இதயத்தைத் திருடுது
இன்றைய நிலையில் இயற்றும் சட்டம் !
பயன்படா சட்டம் பயனாகுது சிலருக்கும்
பகல்வேசம் போடும் அரசியல் அரங்கில் !
சுயநலம் நினைத்தே போடுகின்ற சட்டம்
சுற்றங்கள் வாழவும் உற்றங்கள் உயரவும் !
பொதுநலம் எண்ணி எழுதாத சட்டம்தான்
பொழுதும் வருகிறது பொல்லாத உலகில் !
விடியலும் வந்திடும் வழியும் பிறந்திடும்
உள்ளங்கள் புரிந்து உணர்வுடன் இணைந்து
சட்டம் போட்டு சதிசெய்யும் கூட்டத்தையும்
வளராமல் தடுக்கலாம் வளர்ந்திடும் நாடும் !
பழனி குமார்